வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 1 நவம்பர் 2016 (15:53 IST)

நீதிபதிகளின் தொலைபேசி அழைப்புகள் ஒட்டு கேட்கப்படுகிறதா?

புதுடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நீதிபதிகளின் தொலைபேசி அழைப்புகளை மத்திய அரசு ஒட்டுகேட்பதாக முன்வைத்த குற்றச்சாட்டை சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மறுத்துள்ளார்.
 

 
புதுடெல்லி உயர் நீதிமன்றத்தின் பொன் விழா நிகழ்வு தில்லி விஞ்ஞான் பவனில் கொண்டாடப்பட்டது. இதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் விருந்தினராக புதுடெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கலந்து கொண்டார்.
 
விழாவில் பேசிய கெஜ்ரிவால், ”நீதிபதிகளின் தொலைபேசி அழைப்புகள் ஒட்டு கேட்கப்படுவதாக எனக்கு தகவல் வந்துள்ளது. அவர்கள் பேசுவதற்கே அச்சப்படுகிறார்கள். இந்த இது உண்மையா, இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால், அத்தகவல் மிகப்பெரிய அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
 
தற்போதுள்ள சூழலில் நீதிபதிகள் தங்கள் தொலைபேசிகளில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அவை ஒட்டுக்கேட்கப்படலாம். இது உண்மையாக இருக்குமானால், நீதிபதிகளின் தொலைபேசி பேச்சுகளை வைத்து அவர்களிடையே செல்வாக்கை பயன்படுத்த மத்திய அரசால் முடியும்” என்றார்.
 
இந்நிலையில், கெஜ்ரிவால் முன்வைத்த குற்றச்சாட்டை சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மறுத்துள்ளார். மேலும், நீதித்துறையின் சுதந்திரம் என்பது அரசாங்கத்தின் அடிப்படையான, சமரசத்திற்கு இடமில்லாத ஒன்றாகும் என்றும் தெரிவித்துள்ளார்.