1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 29 நவம்பர் 2015 (14:37 IST)

”சந்திரபாபு நாயுடு என்கவுண்டர் மூலம் எனது கணவரை கொன்று விடுவார்” - மனைவி புகார்

ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தனது கணவரை, என்கவுண்டர் மூலம் கொலை செய்து விடுவார் என்று செம்மரக் கடத்தில் வழக்கில் கைது செய்யப்பட்ட கைதியின் மனைவி புகார் அளித்துள்ளார்.


 

கடந்த 2003ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடு மீது மாவோயிஸ்டுகள் கன்னி வெடி தாக்குதல் நடத்தினர். இதில் அவர் காயத்துடன் உயிர் தப்பினார். இந்த வழக்கில் மாவோயிஸ்டுகளுக்கு உதவியதாக கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த கங்கி ரெட்டி என்பவர் கைது செய்யப்பட்டார்.
 
ஆனால், அவரை நீதிமன்றம் விடுதலை செய்தது. பின்னர், சில ஆண்டுகளுக்கு பிறகு கங்கி ரெட்டி மீது செம்மரம் கடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் கங்கி ரெட்டி தலைமறைவானார்.
 
சந்திரபாபு முதலமைச்சராக பதவியேற்றதை அடுத்து, மொரீஷியசில் தலைமறைவாக இருந்த கங்கி ரெட்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
 
இந்நிலையில் கங்கி ரெட்டி மனைவி கொல்லம் மாளவிகா, ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் அவர் மனு செய்து உள்ளார். அதில், ”சந்திரபாபு நாயுடு மீதான கொலை முயற்சி வழக்கில் எனது கணவர் நிரபராதி என நீதிமன்றம் விடுவித்து விட்டது.
 
ஆனால், செம்மரம் கடத்தியதாக கூறி என் கணவர் மீது பொய்வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து உள்ளனர். சந்திரபாபு நாயுடுவால் எனது கணவர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. என் கவுண்டர் மூலம் எனது கணவரை சுட்டுக் கொல்ல போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.
 
கடப்பா சிறையிலோ அல்லது நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் வழியிலோ அவரை சுட்டுக் கொள்வார்கள் என்று அறிகிறேன். எனவே, எனது கணவரை கடப்பா சிறையில் இருந்து ஐதராபாத் சிறை அல்லது தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஏதேனும் ஒரு சிறைக்கு மாற்ற வேண்டும்” என்று கூறியுள்ளார்.