வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 28 ஜூலை 2015 (08:20 IST)

அப்துல் கலாம் மறைவு: குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் மறைவுக்கு, குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமுக்கு வயது 84. அவர் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் பிறந்தவர்.
 
அணு விஞ்ஞானியான அப்துல் கலாம், கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2007 வரை நாட்டின் குடியரசு தலைவராக இருந்தவர்.
 
இந்நிலையில், மேகாலயாவின் ஷில்லாங்கில் ஐஐஎம் மாணவர்களிடையே நேற்று பேசிக் கொண்டிருந்த அப்துல் கலாம் மயங்கி விழுந்தார். உடனே பெதானி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
 
அப்துல் கலாம் மறைவுக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள இரங்கள் செய்தியில் கூறியிருப்பதாவது:-
 
அப்துல் கலாம் தனது வாழ்நாள் முழுவதும் மக்களின் குடியரசு தலைவராகத் திகழ்ந்தவர். அவர் மரணத்துக்கு பின்னரும் அப்படியே தொடருவார்.
 
பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதவது:-
 
அப்துல் கலாமின் மறைவு நாட்டுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு. இந்தியாவை அறிவியலிலும், தொழில் நுட்பத்திலும் ஒரு புதிய உயரத்துக்கு கொண்டு சென்ற இந்த தேசத்தின் வழிகாட்டியை நான் இழந்துவிட்டேன். அறிவியல், தொழில்நுட்பம் மட்டுமின்றி விண்வெளித்துறைக்கும் மிகப்பெரிய பங்காற்றிய விஞ்ஞானி.
 
நாடு முழுவதற்கும், குறிப்பாக இளைஞர்களுக்கு ஊக்கம் அளிப்பவராக இருந்தவர். அவரது இறுதி நாட்களிலும் அவர் தொடர்ந்து அந்த தொடர்பிலேயே இருந்தார். இவ்வாறு நரேந்திர மோடி கூறியுள்ளார்.