1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 5 மார்ச் 2015 (06:36 IST)

ஆம் ஆத்மி: கட்சிப்பதவிகளிலிருந்து யோகேந்தர் யாதவ், பிரஷாந்த் பூஷன் நீக்கம்

ஆம்ஆத்மி கட்சியின் முக்கிய அரசியல் விவகாரங்களுக்கான குழுவிலிருந்து அக்கட்சியின் மூத்த தலைவர்களான யோகேந்திர யாதவ் மற்றும் பிரசாந்த் பூஷன் நீக்கப்பட்டுள்ளார்கள்.கட்சியின் அனைத்து முக்கிய பொறுப்புகளிலிருந்தும் அவர்கள் இருவரும் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவர்கள் இருவருக்கும் கட்சிக்குள் வேறு எந்த பொறுப்புகளை அளிப்பது என்பது தொடர்பில் வரும் காலங்களில் முடிவெடுக்கப்படும் என்றும் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் கூறப்பட்டுள்ளது.
 
டில்லியில் மிகப்பெரும்பான்மையுடன் கடந்த மாதம் ஆட்சியை பிடித்திருக்கும் ஆம் ஆத்மி கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, அக்கட்சி இருப்பிரிவுகளாக பிளவுப்படுள்ளது என்று இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. தொடர்ந்து இந்த விவகாரம் பெரிதாகி வந்த காரணத்தால், கட்சியின் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கான அக்கட்சியின் அதிக அதிகாரங்கள் படைத்த தேசிய செயற்குழு கூட்டம் இன்று புதன்கிழமை புதுதில்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் இவர்கள் இருவரையும் கட்சியின் அரசியல் விவகாரங்களுக்கான குழுவிலிருந்து நீக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
இந்த கூட்டம் கூடுவதற்கு முன்பாகவே, டில்லி முதல்வராக பொறுப்பேற்றுள்ள அர்விந்த் கேஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியில் வகித்து வந்த தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்தார். எனினும் இவரது இந்த முடிவை இன்றைய செயற்குழு கூட்டம் ஏற்கவில்லை என்பதால் அவரே தொடர்ந்து அப்பதவியில் நீடிப்பார்.
 
ஆம் ஆத்மி கட்சிக்குள் தனிநபரைத் துதிபாடும் கலாச்சாரம் பெருகி வருவதாக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷன் முன்னதாக வெளிப்படையாக தனது கருத்தை தெரிவித்திருந்தார்.
 
தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்திருந்த பேட்டியில் அர்விந்த் கேஜ்ரிவாலுடன் தனக்கு ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை பிரசாந்த் பூஷன் இப்படி வெளிப்படுத்தியிருந்தார். குறிப்பாக அர்விந்த் கேஜ்ரிவால் அரசியலுக்காக கொள்கைகளில் சமரசம் செய்துக்கொள்ளக் கூறுவதாகவும், தான் அரசியல் நெறிமுறைகளை விட்டுக்கொடுக்க கூடாது என்று வலியுறுத்தி வருவதாகவும் பூஷன் தெரிவித்திருந்தார்.
 
இந்த வெளிப்படையான கருத்துக்களால் கட்சிக்குள் சலசலப்பு நீடித்து வந்த சூழலில் தான் இன்றைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
ஆம் ஆத்மி கட்சிக்குள் நடைபெறும் நிகழ்வுகளை கண்டு தான் மிகுந்த வருத்துடன் இருப்பதாக அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.