ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஹரியானா சிறுமி மரணம்!
ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹர்சிங்புரா என்ற பகுதியில் நேற்று மாலை 5 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த போது பக்கத்து வீட்டுக்காரர் தோண்டிய மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணறு ஒன்றில் தவறுதலாக கீழே விழுந்தார்
விளையாட போன சிறுமியை காணவில்லை என்ற சந்தேகத்தில் பெற்றோர்கள் தேட அப்போது அவர்களுக்கு அந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்து இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதனை அடுத்து செல்போனில் வீடியோவை ஆன் செய்து ஒரு கயிறை கட்டி செல்போனை ஆழ்துளை கிணற்றுக்குள் விட்டு பார்த்தபோது சிறுமியால் ஆழ்துளை கிணற்றில் சிக்கி இருந்தது தெரியவந்தது
இந்த நிலையில் உடனடியாக போலீசார் மற்றும் மீட்பு குழுவினருக்கு அந்த கிராமத்தில் உள்ளவர்கள் தகவல் அளித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் ஆழ்துளை கிணற்றில் சிறுமி 50 அடியில் சிக்கி இருப்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து உடனடியாக பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு ஆழ்துளை கிணறு அருகே குழி தோண்டப்பட்டது
இரவு முழுவதும் குழி தோண்டிய நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு சிறுமியை உயிருடன் வெளியே மீட்டனர். இருப்பினும் சிறுமி மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததால் உடனடியாக அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டடது. சிறுமியை காப்பாற்ற மருத்துவர்கள் பல முயற்சிகள் செய்தும் பலன் அளிக்காமல் இன்று காலை அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதனால் கிராமமே சோகமயமானது
கடந்த வாரம் நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து மரணம் அடைந்த நிலையில், இன்றும் ஒரு சிறுமி மரணம் அடைந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது