1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 26 ஜூன் 2015 (16:34 IST)

குஜராத் மாநிலத்தில் மழைவெள்ளத்தால் 70 பேர் பலி

குஜராத் மாநிலத்தில் பருவ மழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கிந்திய மாநிலமான குஜராத்தில் இந்த வெள்ளத்தின் காரணமாக மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலிருந்து சுமார் 10,000 பேர் மேடான பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக நிவாரணப்பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பருவமழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் வீடுகள் இடிந்து விழுந்தது ஆகியவற்றினாலேயே பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்பட்டன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழப்புகள் தவிர, கால்நடைகள் மற்றும் பயிர்களும் பரந்துபட்ட அளவில் மிக அதிகமாக அழிந்துள்ளன என்றும் மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 90 ஆண்டுகளில் இல்லாத வகையில் சௌராஷ்ட்ரா பகுதியில் இப்போது மோசமான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

கரையோர மாவட்டமான அம்ரேலியே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

அங்கு மட்டும் 600 கிராமங்கள் நீரால் சூழப்பட்டுள்ளதாக குஜராத்தின் சுகாதார அமைச்சர் நிதின் பட்டேல் பிபிசியின் ஹிந்தி சேவையின் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.