1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (18:32 IST)

மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தானில் சதி திட்டம்: உண்மை அம்பலம்

2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மும்பை தாக்குதல், தங்கள் நாட்டு மண்ணிலிருந்து வழி நடத்தப்பட்டதாக, பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பான எப்ஐஏவின் முன்னாள் தலைமை இயக்குனர் தாரிக் கோஷா கூறியுள்ளார். குற்றவாளிகளை நீதியின் முன்பு நிறுத்தி தண்டிக்க பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 

 
மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி, பாகிஸ்தான் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 170க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த தாக்குதல் தொடர்பாக, சர்வதேச நிர்பந்தத்தால் பாகிஸ்தானிலும் விசாரணை நடத்தப்பட்டது. பாகிஸ்தானின் முன்னணி புலனாய்வு அமைப்பான எப்ஐஏ நடத்திய இந்த விசாரணைக்கு தலைமை வகித்த தாரிக் கோஷா, பிரபல டான் பத்திரிக்கையில் எழுதியுள்ள கட்டுரையில், மும்பை தாக்குதல் பாகிஸ்தான் மண்ணிலிருந்து வழி நடத்தப்பட்டது என ஒப்புக்கொண்டுள்ளார்.
 
தாக்குதல் நடந்த தருணங்களில் கராச்சி நகரத்திலிருந்து தீவிரவாதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறியுள்ள தாரிக் கோஷா, தாக்குதலை நிகழ்த்த தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டதும் விசாரணையின்போது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மும்பை தாக்குதலை வழிநடத்திய பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த குற்றவாளிகளை நீதியின் முன்பு நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தாரிக் கோஷாவின் இந்த ஒப்புதல் வாக்குமூலம், மும்பை தாக்குதல் விசாரணையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
தாரி கோஷா கட்டுரையில் இடம்பெற்றுள்ள முக்கிய ஆதாரங்கள்:-
 
1. மும்பை தாக்குதல் சம்பவத்தில் பிடிப்பட்டு பின்னர் தூக்கிலடப்பட்ட அஜ்மல் கசாப், பாகிஸ்தானை சேர்ந்தவர் என்றும், லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பில் சேர்ந்து பயிற்சி பெற்றதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
 
2. மும்பை தாக்குதலுக்காக லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு பாகிஸ்தானில் நடத்திய பயிற்சி முகாம்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அங்கிருந்து கைப்பற்றப்பட்ட வெடி பொருட்கள், தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட பொருட்களோடு ஒத்துப்போவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
3. பாகிஸ்தானில் இருந்து மும்பை வர இந்திய மீன்பிடி படகு ஒன்றை கடத்தி பயன்படுத்தப்பட்டதாகவும், அதனை கைபற்றியுள்ளதாகவும் கோஷா தெரிவித்துள்ளார்.
 
4. மும்பை துறைமுகம் அருகே தீவிரவாதிகள் விட்டு சென்ற படகு எஞ்ஜின், கராச்சியில் வாங்கப்பட்டத்தாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
5.  தாக்குதல் வழி நடத்தப்பட்ட இடம் கராச்சியில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அங்கு இணையவழி உரையாடல் நடைபெற்றதாகவும் கோஷா தெரிவித்துள்ளார்.
 
6. தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டவர்கள் கைது செய்ய்ப்பட்டுள்ளனர்.
 
7. இந்த தாக்குதலுக்கு நிதி உதவி வழங்கிய வெளிநாட்டினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
தீவிரவாத தாக்குதல்களில் பாகிஸ்தான், தனக்குள்ள தொடர்பை ஒப்புக் கொண்டு, அதனை எதிர்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள கோஷா,  தங்கள் நாட்டில் பதுங்கியுள்ள குற்றவாளிகளை அரசு பிடிக்கவேண்டும் என்றும்  வலியுறுத்தியுள்ளார்.