1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 27 மே 2020 (08:18 IST)

200 நர்ஸ்கள் திடீர் ராஜினாமா: மருத்துவமனை நிர்வாகம் அதிர்ச்சி

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒருசில மருத்துவமனையில் ஒரே நாளில் திடீரென 200 நர்ஸ்கள் ராஜினாமா செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கொரோனா நேரத்தில் மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்கள் கடவுள் போல் பார்க்கப்பட்டு வரும் நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, புனே பகுதியில் பணிபுரிந்து கொண்டிருந்த 200 நர்ஸ்கள் திடீரென ராஜினாமா செய்துள்ளனர். ராஜினாமா செய்த நர்ஸ்கள் அனைவரும் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பதும், தற்போது ரயில் விமானம் இயங்க தொடங்கியுள்ளதால் தங்கள் சொந்த மாநிலம் சென்று சேவை செய்யவிருப்பதாக ராஜினாமா செய்த பெரும்பாலான நர்ஸ்கள் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
 
மேலும் தன்னலம் கருதாது தினமும் இரண்டு ஷிப்டுகள் கஷ்டப்பட்டு பணிபுரிந்து வரும் நர்சுகளுக்கு போதுமான வசதிகளை மருத்துவமனை நிர்வாகம் செய்து தருவது இல்லை என்ற குற்றச்சாட்டும் நர்ஸ்கள் ராஜினாமா செய்ததற்கு காரணமாக கூறப்படுகிறது. ஏற்கனவே இதேபோல் மேற்கு வங்கம் மாநிலத்தில் சுமார் 600 நர்ஸ்கள் ராஜினாமா செய்து தங்கள் சொந்த மாநிலத்திற்கு சென்றுவிட்டனர் என்ற செய்தி வெளியானது. 
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்னிக்கை 60 ஆயிரத்துக்கு மேல் உள்ளது என்பதும் தினமும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த நேரத்தில் நர்ஸ்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் நிலைமை இன்னும் மோசமாகும் என்பது குறிப்பிடத்தக்கது