1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 9 பிப்ரவரி 2015 (12:52 IST)

60 பேரின் வங்கிக் கணக்குகளில் 1500 கோடி கருப்புப் பணமா?

வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருந்த 60 பேரின் வங்கிக் கணக்குகளில் சுமார் 1500 கோடி கருப்புப் பணத்தை குறித்த விசாரணையை மத்திய அரசு தொடங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
மத்திய அரசு வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணங்களை மீட்பது குறித்தான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக வருமான வரித்துறை நடத்திய விசாரணையில், குறிப்பிட்ட 60 பேர்கள் வரி ஏய்ப்பு செய்து, வெளிநாட்டு வங்கிகளில் பணத்தை பதுக்கியது தெரிய வந்துள்ளது.
 
இந்த 60 பேரின் வங்கி கணக்குகளிலும் சுமார் 1500 கோடிக்கும் அதிகமாக கருப்புப் பணம் பதுக்கப்பட்டிருக்கலாம் என்றும், அவர்களில் பலர் பெரு நிறுவன முதலாளிகள் என்பதும் தெரிகிறது. 
 
ஆனால், இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தத்தின் படி, நீதிமன்ற விசாரணையின் போது தான் வெளிநாடுகளில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் பற்றிய பட்டியலை பகிரங்கமாக வெளியிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் கருப்புப் பணத்தை மீட்பது பற்றி சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்டது. இதன் படி, மத்திய அரசு கடந்த 2014ஆம் வருடம் வெளிநாடுகளில் கறுப்பு பணம் பதுக்கிய 627 பேரின் பட்டியல் உச்சநீதிமன்றத்தில் ஒப்படைத்தது.
 
இந்த சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவரான நீதிபதி எம்.பி.ஷா, கூறுகையில், "உச்சநீதிமன்றம் விதித்த கெடுவான மார்ச் 31க்குள் கருப்புப் பணம் பதுக்கியவர்கள் குறித்த விசாரணை முடிந்து இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும்" என்றார்.