கர்நாடகாவில் 11 காங். எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு தாவ திட்டம்?
கர்நாடகாவில் அமைச்சர் பதவி கிடைக்காவிட்டால் 11 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு தாவ திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவடைந்து பல குழப்பத்திற்கு பிறகு காங்கிரஸ் - மஜத கூட்டணி அமைத்து குமாரசாமி முதல்வராக பதவியேற்றார். அதன் பின்னர் தனது பெரும்பான்மையையும் நிரூபித்தார்.
இதையடுத்து, மொத்தம் உள்ள 34 மந்திரி பதவிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 22, மதசார்பற்ற ஜனதாதள கட்சிக்கு 12 என்ற அளவில் பகிர்ந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது மந்திரிசபை விரிவாக்கத்தில் பிரச்சினை எழுந்துள்ளது என தெரிகிறது. அதாவது முக்கிய இலாகாக்களை இரண்டு கட்சிகளுமே கேட்பதால் பிரச்சினை எழுந்து உள்ளது. அமைச்சர் பதவி கிடைக்காவிட்டால், காங்கிரசை சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவிற்கு தாவ தயாராக இருப்பதாகவும் மாநில உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இதனால் காங்கிரசுக்கு, நகர வளர்ச்சி, போலீஸ், உயர்கல்வி, மருத்துவ கல்வி, மின்சாரம், கலால், கூட்டுறவு, கனிம வளம் மற்றும் நில அறிவியல், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை ஆகிய இலாகாக்கள் ஒதுக்கவும் அதேபோல் ஜனதாதளத்திற்கு நிதி, பொதுப்பணி, வருவாய், பள்ளி கல்வி, கால்நடை வளர்ச்சி, இந்து அறநிலையத்துறை ஆகிய இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை காங்கிரஸ் மேலிடம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கவர்னர் மாளிகையில் மந்திரிசபை விரிவாக்கம் நாளை நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.