1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By ஜே.பி.ஆர்
Last Updated : வெள்ளி, 29 மே 2015 (15:17 IST)

விமர்சனம் - மாசு என்கிற மாசிலாமணி

ஆவி, பேய் என்று வந்துவிட்டால் லாஜிக் பார்க்க வேண்டிய அவசியமில்லை. கொல்லப்பட்டு ஆவியாக திரியும் ஒருவரால் எந்தப் பொருளையும் தொட்டு தூக்கவோ, ஒருவரை அடிக்கவோ, கொலை செய்யவோ முடியாது.

அதனால் தன்னை கொன்றவர்களை பழிவாங்க உயிரோடு இருப்பவனின் உதவி தேவைப்படுகிறது. அதே ஆவி கிளைமாக்ஸில், ஆவியால் முடியாத அனைத்தையும் செய்கிறது. அப்படியானால் அந்த ஆவியே தன்னை கொன்றவர்களை பழி வாங்கியிருக்கலாமே. எதற்கு ஒரு மானுடனின் உதவி?
இந்த மெகா லாஜிக் மிஸ்டேக்குடன் சின்னச் சின்ன உதிரி மிஸ்டேக்குகளும் மாசுவில் உண்டு. அவற்றையெல்லாம் மறக்கச் செய்து ரசிகனை திருப்திப்படுத்துவதில் இரண்டாம் பாதியில் வெற்றி பெற்றிருக்கிறார் வெங்கட்பிரபு.
 
சின்னச் சின்ன திருட்டுகள் செய்யும் சூர்யாவும், பிரேம்ஜியும் விபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். பிரேம்ஜி இறந்துவிட சூர்யா உயிர் பிழைக்கிறார். அத்துடன் இறந்து போனவர்களின் ஆவியை காணும் அபூர்வ சக்தி அவருக்கு கிடைக்கிறது. அதில் ஒன்றிரண்டு பேய்கள் சூர்யாவுடன் நட்பாகின்றன. சொல்ல வேண்டியதில்லை, அதில் ஒருவர் பிரேம்ஜி அமரன்.
 
பேய்கள் தங்களின் நிறைவேறாத ஆசைகளை சூர்யாவின் மூலம் நிறைவேற்றிக் கொள்ள விரும்புகின்றன. ஆனால், அந்த பேய்களை வைத்து அவர் பேயோட்டுவதாக பணம் சம்பாதிக்கிறார். இந்த நேரத்தில் உருவத்தில் தன்னைப் போலவே இருக்கும் ஒரு பேயை சூர்யா சந்திக்கிறார். அந்த பேய் அவரை பயன்படுத்தி இருவரை கொலையும் செய்கிறது. 
 
அது ஏன் அவர்களை கொலை செய்கிறது? அது எப்படி சூர்யாவின் தோற்றத்தை கொண்டிருக்கிறது?
 
மாசு என்கிற மாசிலாமணியின் கதை ஹலோ கோஸ்டிலிருந்து எடுக்கப்பட்டது என கூறப்பட்டது. ஆனால், இந்தக் கதை ஹலோ கோஸ்டைவிட 1996 -இல் வெளியான ஹாலிவுட் படம், The Frighteners  -ஐ எண்பது சதவீதம் அப்படியே கொண்டிருக்கிறது.

விபத்தில் சிக்குதல், பேய்களை காணும் திறமை, பேய்களின் உதவியுடன் பணம் சம்பாதித்தல், பிறகு நிகழும் கொலைகள் என அனைத்தும் அப்படியே. ஏன் இந்த கொலைகள் என்பதை மட்டும் ஈழத்தமிழ் வியாபாரத்துடன் இணைத்திருக்கிறார் வெங்கட்பிரபு.

யுவனின் பாடல்களைவிட பின்னணி இசை பரவாயில்லை. ஆர்.டிராஜசேகரின் ஒளிப்பதிவு டாப். பிரியாணியில் கோட்டைவிட்ட பதட்டத்தில் ஒரு ஹாரர் படத்துக்கு அவசியமில்லாத அனைத்தையும் திணித்து கமர்ஷியலாக்கியிருக்கிறார் வெங்கட்பிரபு. இரண்டாம் பாதியில் கதையும், காட்சிகளும் வேகம் பிடிப்பதால் நிறைவுடன் வெளியே வருகிறார்கள் ரசிகர்கள். அந்த திருப்திதான் மாசுவின் வெற்றி.
கதைக்கு சம்பந்தமில்லாமல் ஜாலி என்ற பெயரில் சுற்றியடித்து இடைவேளையில் கதையை ஆரம்பிக்கும் சலித்துப்போன ஃபார்முலாவில்தான் மாசுவின் திரைக்கதையும் எழுதப்பட்டுள்ளது. பிரேம்ஜி, கருணாஸ், ஸ்ரீமன், பார்த்திபன், சமுத்திரகனி என எக்கச்சக்க பாத்திரங்கள். பார்த்திபனின் ஒன்றிரண்டு டயலாக் டெலிவரி மட்டும் கவர்கிறது. 
 
சூர்யா ஆவியை கொடுத்து நடித்திருக்கிறார். அவரது ஸ்கிரீன் பிரசன்ஸ்தான் படத்தை தாங்குகிறது. பிளாஷ்பேக் காட்சியில் வரும் ப்ரணித்தாவும், அவரது மரணமும் சென்டிமெண்ட் டச். நயன்தாரா? பெயருக்காக உருவாக்கப்பட்ட கதாபாத்திரம். பிரியாணியைவிட சிறப்பாக இருப்பதால் வெங்கட்பிரபுவும், அஞ்சானைவிட நன்றாக இருப்பதால் சூர்யாவும் திருப்திப்பட்டுக் கொள்ளலாம். 
 
மாசு - வெகுஜனங்களுக்கான விருந்து.