வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (18:42 IST)

நேர்கொண்ட பார்வை: சினிமா விமர்சனம்!

திரைப்படம்:நேர்கொண்ட பார்வை
நடிகர்கள்: அஜித் குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆன்ட்ரியா தாரியாங், அபிராமி வெங்கடாச்சலம், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ்
இசை: யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு: நீரவ் ஷா
இயக்கம்: எச். வினோத்

2016ல் இந்தியில் வெளிவந்த 'பிங்க்' திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீ-மேக். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய எச். வினோத் இந்தப் படத்தை இயக்குவார் என்றும் அமிதாப் பச்சன் நடித்த பாத்திரத்தில் அஜித் குமார் நடிப்பார் என்றும் செய்திகள் வெளியானதிலிருந்தே இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் இருந்தது.
 
மீரா கிருஷ்ணன் (ஷரத்தா), ஃபமிலா (அபிராமி), ஆண்ட்ரியா (ஆண்ட்ரியா)ஆகிய மூவரும் சென்னையில் தனியாக வீடு எடுத்துத் தங்கியிருக்கிறார்கள். அந்த வீட்டிற்கு அருகில் புதிதாகக் குடிவருகிறார் வழக்கறிஞரான பரத் சுந்தரம் (அஜித்).
 
ஒரு நாள் நண்பர்களுடனான பார்ட்டியின்போது, புதிதாக அறிமுகமான இளைஞன் ஒருவன் மீராவை பலாத்காரம் செய்ய முயற்சிக்க, அவனை பாட்டிலால் அடித்துவிட்டு மூவரும் வெளியேறுகிறார்கள்.


 
அடிவாங்கிய இளைஞன் அரசியல் தொடர்பும் பணமும் உள்ளவன் என்பதால், அவன் கொடுத்த கொலை முயற்சி புகாரில் மீராவைக் கைதுசெய்கிறது காவல்துறை.
 
அப்போது அவர்களுக்காக வாதாட முன்வருகிறார் கர்ப்பிணி மனைவியை (வித்யா பாலன்) இழந்ததால் மனநலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்துவரும் பரத் சுந்தரம்.
 
இந்த வழக்கின் முடிவில் யார் தண்டிக்கப்படுகிறார்கள் பிங்க் படத்தைப் பார்த்தவர்களுக்கும் கதையைப் படித்தவர்களும் முடிவு தெரிந்ததுதான்.


 
இந்தியில் பெரும் வெற்றிபெற்ற ஒரு படத்தை அதன் ஜீவன் மாறாமல் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார் எச். வினோத். இந்திப் படமே சிறப்பான திரைக்கதையைக் கொண்ட படம் என்பதால், இந்தப் படத்தின் திரைக்கதையில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை.ஆனால், அஜித் ரசிகர்களை மனதில் வைத்து ஒரு பெரிய சண்டைக் காட்சியையும் படத்தில் இணைத்திருக்கிறார்.
 
ஒரிஜினலில் அமிதாப்பின் மனைவி, நோயில் இறந்துவிடுவார். இந்தப் படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு, கருத்தரிக்கும் மனைவி, வீட்டில் ஆளில்லாத நேரத்தில் கீழே விழுந்து இறந்துவிடுகிறார். இந்த வித்தியாசங்களைத் தவிர, அதே காட்சிகள்தான்.
 
ஆனால், தமிழுக்காக இணைக்கப்பட்டிருக்கும் இந்த இரு காட்சிகளுமே அஜித் ரசிகர்களுக்கு பெரிய உற்சாகத்தை அளிக்கக்கூடும்.
 
குறிப்பாக, ஒரு ஐம்பது - ஐம்பத்தைந்து அடியாட்களை ஒற்றை ஆளாக அஜித் அடித்துத் துவம்சம் செய்யும் காட்சி.
 
பிரபல கதாநாயகர்கள் பெரும்பாலும் பெண்கள் குறித்து பழமைவாத அறிவுரைகளையே சொல்லிவரும் நிலையில், இந்தப் படம் அதிலிருந்து மாறுபட்டு நவீனமான பார்வையை முன்வைக்கிறது. "குடிப்பது தப்பு என்றால், ஆண் - பெண் இருவர் குடிப்பது தப்பு", "ஒரு பொண்ணு 'நோ'ன்னு சொன்னா, அது காதலியாக, தோழியாக, பாலியல் தொழிலாளியாக ஏன் மனைவியாக இருந்தாலுமே 'நோ'ன்னுதான் அர்த்தம்" என்பது போன்ற வசனங்கள் ரசிகர்களிடம் ஒரு திறப்பை ஏற்படுத்தக்கூடும்.
 
அமிதாப் பச்சன் 74 வயதில் நடித்த பாத்திரத்தை அஜித் குமார் நாற்பதுகளின் பிற்பகுதியில் ஏற்று நடித்திருக்கிறார். அந்த சண்டைக் காட்சியை மறந்துவிட்டால், படத்தில் நடித்திருப்பது அஜித் என்பது மறந்தேபோய்விடும் அளவுக்கு துருத்திக்கொள்ளாமல், பாத்திரத்தோடு ஒன்றியிருக்கிறார் அஜித். அவரது திரைவாழ்க்கையில் காதல் கோட்டை, வாலி படங்களைப் போல இதுவும் ஒரு முக்கியமான, திருப்புமுனை படம்.
 
இந்தியில் டாப்ஸி பன்னு நடித்த பாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவரும் சரி, அபிராமி, ஆண்ட்ரியா ஆகியோரும் சரி, சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.


 
இந்தப் படத்திற்கு பாடல்களே தேவையில்லாதான். இருந்தாலும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உமா தேவி எழுதியிரும் 'வானில் இருள்' ஒரு சிறப்பான மெலடி.
 
'சிறுத்தை சிவா' படத்தொடர்களை விட்டு வெளியில் வந்திருக்கும் அஜித்தின் இந்தப் படம், அவரது ரசிகர்களை மட்டுமல்ல, பொதுவான சினிமா ரசிகர்களையும் வெகுவாக ஈர்க்கும்.