வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By ஷைலஜா
Last Updated : வியாழன், 30 அக்டோபர் 2014 (16:17 IST)

கத்தி - திரை விமர்சனம் 3

மேழி (கலப்பை) பிடிக்கும் மேன்மக்களின் துயரம் பற்றிச் சொல்லும் கதை தான், கத்தி. கிராமங்கள் நாட்டின் முதுகெலும்பு என்று சொன்னார் காந்தி. அந்தக் கிராமத்தின் முதுகெலும்பே விவசாயிகள்தான். அன்று விவசாயத்திற்கு இருந்த ஒரு கம்பீரமான கௌரவம் இன்று ஏனோ ஏளனமாகிவிட்டது. "மேழிச் செல்வம் கோழை படாது" என்று "கொன்றை வேந்தனில்" ஒளவை கூறியது, குவலயத்தை விட்டே போகிறது.
 
அரசியல்வாதிகள் வெளிநாட்டுக் கார்ப்பரேட் கம்பெனிகளிடமிருந்து கோடி கோடியாய்ப் பணத்தை வாங்கிக்கொண்டு, அப்பாவி விவசாயிகளின்  அடிப்படை வாழ்க்கையையே அழிக்கிறார்கள்.

 
தினம் தினம் வியர்வை சிந்தி, பயிர் உற்பத்தி செய்யும் விவசாயி தனக்கான ஒருவேளை உணவை வயிறு நிரம்பச் சாப்பிடுவதில்லை. எதிர்பார்த்த மழை இல்லை அல்லது தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி என்னும் மழையும் இல்லை. தொலைக்காட்சி ஒன்றில் அண்மையில் திருவாரூர் விவசாயி ஒருவர், பெய்த பேய் மழையில் தனது நாற்றுகள் அனைத்தும் மூழ்கி அழுகிவிட்டதைக் கையில் கொத்தாகப் பிடித்துக் காட்டியபோது அவரது கண்ணீரைக் காணவே மனம் வேதனையானது.
 
நமது நாட்டில் எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் எத்தனை விவசாயிகள் நீர்ப்பஞ்சம் காரணமாக விளைநிலத்தில் வேலை இன்றி வேறிடம் பெயர்கிறார்கள், அறிவோமா? அப்படிப்பட்டவர்களின் துயரத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது, கத்தி என்ற புதிய தமிழ்ப் படம்.
 
குடும்ப மசாலாக்களைக் காதல் களங்களை அரைக்காமல் தமிழக விவசாயிகளின் பிரச்சினையை மையமாகக் கொண்டு, கதையை உருவாக்கியிருக்கும் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸூக்கு முதலில் பாராட்டுகள்.
 
ஊழல், மூத்த குடிமக்களின் நிலைமை, தண்ணீர்ப் பஞ்சம் போன்ற பிரச்சினைகளை அலசி இருக்கிறார் இயக்குநர்.

 
திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கிற்கு மட்டுமல்ல. மக்களுக்கு விழிப்புணர்வையும் ஊ(மூ)ட்டக் கூடியது என்பதைக் கத்தி மிகக் கூர்மையாகவே நிரூபிக்கிறது.
 
மக்கள் போராளியாக வாழ்ந்து மறைந்த ஜீவானந்தத்தின் பெயரில், சமூக ஆர்வலராய் ஒரு இளைய தளபதி விஜய். திருட்டு, சிறை சாகசம், குறும்புத்தனம் என்று கதிரேசனாக இன்னொரு விஜய்!
 
கதிரேசன் ஆக வரும் விஜய் மற்றும் காமெடி நடிகர் சதீஷ், இரண்டு பேரும் செய்யும் காமெடி அட்டகாசம் கொஞ்சம் நஞ்சமல்ல! 
 
இசை அனிருத். சில பாடல்களின் வரிகள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஏதும் புரியாமல் காதை அடைக்கிறது. ஆனாலும் பிடித்துப்போய் விடுகிறது. காதல் பாடல்களில் மெலடி என்பதே வர வர அபூர்வமாகிவிட்டதே எனத் திருவான்மியூர் தியாகராஜா தியேட்டரில் என்னைவிட வயசான பெண்மணி, பின்சீட்டில் கத்தி வைக்கலா(னார்:)
 
விஜய்யின் அட்டகாச நடனம், கண்ணை நிறைக்கிறது..
 
கதை என்ன என்று பார்க்கலாம்.
மேலும்

கொல்கத்தா சிறையிலிருந்து போலீஸை ஏமாற்றித் தப்பிக்கும் கதிரேசன் (விஜய்), சென்னைக்கு வருகிறார்.
 
சென்னையில் இருந்தபடி பாங்காக் செல்ல இருந்த கதிரேசன் தன்னைப் போல் உருவம் கொண்ட இன்னொரு விஜய் (ஜீவானந்தம்), சிலரால் சுடப்படுவதைப் பார்த்துக் காப்பாற்றுகிறார். ஆனால் ஜீவானந்தம் தன் ஜாடையில் இருப்பதைக் கண்டு, போலீசிலிருந்து தான் தப்பிக்க, ஜீவானந்தமாக ஆள்மாறாட்டம் செய்கிறார்.
 
சந்தர்ப்பமும் சூழ்நிலையும் கதிரேசனை ஜீவானந்தம் இடத்துக்கு வர வைக்கிறது. முதியோர் இல்லத்தில் வயதான ஆண்கள் அனைவரின் அன்பில் திகைக்கிறான். ஆனாலும்..
 
ஆரம்பத்தில் ஜீவானந்தம் யார்? அவன் பின்னணி என்ன? என்று தெரியாமல் கிடைத்த பணத்தைச் சுருட்டிக்கொண்டு பாங்காக் செல்லத் திட்டமிடும் கதிரேசன், பின் அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு ஜீவானந்தமாகவே மாறி எதிரிகளை அடித்து நொறுக்குகிறார்.

 
படத்தின் இரண்டாம் பாதியில் கதிரேசன் செய்யும் அனைத்துக் காரியங்களும் நம் கண் இமை மூடாமல் நாற்காலி நுனிக்குக் கொண்டு வந்துவிடுகிறது.
 
அந்தக் கிராமம் என்ன ஆனது? விவசாயிகளின் நிலை என்ன? என்பதே விறுவிறுப்பான இறுதிப் பகுதி! அதை நீங்களே வெள்ளித் திரையில் காண்க!
 
இயல்பான நடிப்பு எரிமலையாய் குமுறிச் சீறிவரும் வார்த்தைகளின் நிஜம் என விஜய் நடிக்கவே இல்லை, வாழ்ந்து இருக்கின்றார்
 
பத்திரிகைகள் ஊடகங்கள் என அனைத்தையும் ஒட்டுமொத்தமாய்ச் சாடி இருக்க வேண்டாமோ எனத் தோன்றினாலும், சில நேரங்களில் விரக்தி காரணமாக மனிதன் உதிர்க்கும் வார்த்தைகள்தானே அவை என எண்ணவும் வைக்கிறது..

 
கதாநாயகி சமந்தா, சமர்த்தாக வருகிறார். முகமெல்லாம் கன்னமாகிவிட்டதுபோல அப்படி ஒரு அளவுக்கு மீறிய பம்ப்ளிமாஸ் முகம்! 
 
ஒளிப்பதிவும் சிறப்பு. சண்டைக் காட்சிகள் சுறுசுறுப்பு. ஒரே ஆள் ஐம்பது பேரை அடித்து வீழ்த்தும் சாகசம், திரைப்படத்தில் மட்டும் இன்னும் ஐம்பது ஆண்டுக்குத் தொடரலாம்!! சில செவிப் பூச்சுற்றல்களையும் மீறி, படம் சிந்திக்க வைக்கிறது என்பதை மறுக்க முடியாது.
 
வில்லன் நடிகர், ஹிந்திப் படக் கதாநாயகன் போல இருக்கிறார்.
 
படத்தின் ஆரம்பக் காட்சிகளில் சற்று  அலுப்பு + ஆயாசம் உண்டானாலும், போகப் போக விறுவிறுப்பாகிறது. முக்கியமாய் விஜயின் ஈடுபாடான நடிப்பு. எடுத்துக்கொண்ட கதைக் கருவும்  காரணம்!
 
படம் வெளியாகச் சில பிரச்சினைகள் இருந்தன. ஆனால் அதுவே படத்திற்கு விளம்பரமாகிவிட்டது!