வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : ஞாயிறு, 14 பிப்ரவரி 2016 (14:29 IST)

ஜில் ஜங் ஜக் - விமர்சனம்

ஜெய்சங்கர் காலத்தில் வெஸ்டர்ன் படங்களை தழுவி பல படங்கள் வந்துள்ளன. அவை சீரியஸ் படங்கள்.


 

 
அதேபோன்ற கதாபாத்திரங்களை உலவவிட்டு டார்க் காமெடி படங்கள் எடுப்பது எல்லா மொழிகளிலும் உண்டு. சென்ற வருடம் மலையாளத்தில் டபுள் பேரல் என்று ஒரு படம் வெளியானது.
 
வித்தியாசமான காஸ்ட்யூம், மேக்கப், கோக்குமாக்கான நடவடிக்கைகள், அடுத்தடுத்துவரும் அபத்தங்கள் என்று கற்பனையில் சவாரி செய்யும் படம் அது.
 
தமிழில் அப்படியொரு முயற்சி, ஜில் ஜங் ஜக். இந்தப் படங்களின் கதை பெரும்பாலும் கடத்தலாகவே இருக்கும். டபுள் பேரலில் வைரம், இதில் போதைப் பொருள்.
 
2020 கதை நடக்கிறது. தெய்வநாயகம் என்ற தெய்வா தன்னிடமுள்ள 4 கிலோ போதைப் பொருளை ஹைதராபாத்தில் சீனர்களிடம் விற்று காசு பார்க்க நினைக்கிறார். அதற்கு இந்த தொழிலுக்கு அந்நியமான 3 இளைஞர்களை நியமிக்கிறார்.
 
அவர்கள்தான் ஜில், ஜங், ஜக். போதைப் பொருளை ஒரு காரில் பெயிண்டாக அடித்து ஹைதராபாத்துக்கு எடுத்துச் செல்கின்றனர். எதிர்பாராதவிதமா போதை மருந்தை அவர்கள் இழக்க நேர்கிறது.
 
தெய்வாவுக்கு தெரிந்தால் மரணம் நிச்சயம். ஜில் அதிலிருந்து தப்பிக்க, தெய்வாவின் எதிரியான ரோலக்ஸ் ராவுத்தருடன் தெய்வாவை கோர்த்து விடுகிறான். அவனது முயற்சி வெற்றி பெற்றதா என்பது மீதி கதை.
 
படத்தின் கதை 2020 நடப்பதாக காட்டியதன் மூலம் கதாபாத்திரங்களின் காஸ்ட்யூம், மேக்கப் முதல் வித்தியாசமான அனைத்துக்கும் கேள்விக்கேட்க முடியாத ஒரு லாஜிக்கை உருவாக்குகிறார் இயக்குனர்.
 
கதாபாத்திரங்களுக்கு வைத்திருக்கும் பெயர்களும் கச்சிதம். இதுபோன்ற படங்களில் ரசிகர்களை ஈர்ப்பது அபத்த நகைச்சுவைகள். சில வசனங்கள், தெய்வநாயகம் கூடவே வரும் பை கதாபாத்திரத்தின் ஹர ஹர மகாதேவ வசன உச்சரிப்பு என்று சில இடங்கள் மட்டுமே சிரிக்க வைக்கின்றன. பிற்பகுதியில் கதை ஜவ்வாக இழுத்து நம்மை சோதிக்கின்றது.
 
ஜில்லாக சித்தார்த். வித்தியாசமான கதைக்களத்தை முயற்சி செய்யும் அவருக்கு ஒரு சல்யூட். நடிப்பும் மெச்சும்படியே உள்ளது. ஆனால், அபத்த நகைச்சுவை ரசிகர்ளை ஈர்க்காமல் போனால் அவர் என்ன செய்வார்?
 
சித்தார்த்துக்கு இணையாக நடித்திருக்கிறார்கள் ஜங்காக வரும் அவினாஷ் ரகுதேவனும், ஜக்காக வரும் சனத்தும். சனத் ஒருபடி மேல்.
 
ரோலக்ஸ் ராவுத்தராக வரும் ராதாரவி, தெய்வாவாக வரும் அமரேந்திரன், அட்டாக் ஆல்பர்டாக வரும் எம்.ஜி.சாய்தீன் உள்பட யாருமே சோடை போகவில்லை. அதேநேரம் டார்க் க்யூமருக்கான காட்சிகள் படத்தில் இல்லாததது அவ்வப்போது கொட்டாவி வரவைக்கிறது. கதாபாத்திரங்களைவிட அந்த பழைய மாடல் கார்கள் மனதில் நிற்கின்றன.
 
ஸ்ரோயஸ் கிருஷ்ணாவின் இசையும், விஷால் சந்திரசேகரின் இசையும் படத்தின் கதைக்கு நியாயம் செய்கின்றன. கிளப் டான்ஸ் எப்போ முடியும் என்ற ஆயாசத்தை தருகிறது. 
 
நகரத்தின் வாட்ஸ் அப் தலைமுறையை குறி வைத்து எழுதப்பட்ட வசனங்கள் காஞ்சிபுரத்துக்கு அந்தப்பக்கமுள்ள ரசிகர்களை பெருமளவு கவரப்போவதில்லை.
 
ஜில் ஜங் ஜக்... தயாரிப்பாளராக சித்தார்த்தை ரொம்பவே சோதிக்கும்.