வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By
Last Modified: வெள்ளி, 12 ஜனவரி 2018 (08:00 IST)

குலேபகாவலி: திரைவிமர்சனம்

பிரபுதேவா, ஹன்சிகா நடிப்பில் கல்யாண் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள 'குலேபகாவலி' திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் பிரபுதேவா நடிப்பில் வெளியாகும் படம் என்பதாலும், பொங்கல் விடுமுறை படம் என்பதாலும் ஓரளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

மன்சூர் அலிகான், யோகிபாபுவின் சிலை கடத்தும் கும்பலில் வேலைபார்க்கும் பிரபுதேவா, ஒரு பார்ட்டியில் ஹன்சிகாவை பார்த்ததும் காதல் கொள்கிறார். இந்த நிலையில் மன்சூர் அலிகான், 'குலேபகாவலி' என்ற இடத்தில் உள்ள சிலையை கடத்த வட இந்தியர் ஒருவரிடம் ஒப்புக்கொண்டு அட்வான்ஸ் வாங்குகிறார். சிலையை திருட போன இடத்தில் புதையல் இருப்பதை அறிகிறார்

வெள்ளைக்காரனிடம் வேலைபார்த்த ஒருவர் அவருக்கு தெரியாமல் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வைரங்களை குலேபகாவலி கோவில் அருகே புதைத்து வைத்துவிட்டு அதை இறக்கும் தருவாயில் தனது மகன் மதுசூதனன் ராவ் இடம் கூறுகிறார்.

சின்ன சின்ன திருட்டுக்கள் செய்யும் ரேவதி, வாழ்க்கையில் செட்டில் ஆக, குலேபகாவலி புதையலை எடுக்க முயற்சிக்கின்றார்.

இதனிடையே இன்ஸ்பெக்டரான சத்யன், சிலை திருட்டு, புதையல் கோஷ்டிகளை பிடிக்கும் முயற்சியில் உள்ளார்.

இந்த நான்கு பேர்களும் புதையலை எடுத்தார்களா? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பதுதான் மீதிக்கதை

பிரபுதேவா காமெடி, ஆக்சன், ரொமான்ஸ் என அனைத்தும் கலந்த ஒரு கலவையான நடிப்பை கொடுத்துள்ளார். படத்தின் கதைப்படி அவருக்கும் நடிக்கும் வாய்ப்பு பெரிதாக இல்லை என்றாலும் மூன்று பாடல்களில் டான்ஸ் பின்னி எடுக்கின்றார்

ஹன்சிகாவுக்கு வழக்கம்போல் கவர்ச்சி காட்டவும், பாடலுக்கு டான்ஸ் ஆடவும் மட்டும் தாம் பிரதான வேலை. திடீரென இவர் தனது தங்கையை கடத்தி வைத்து கொண்டார்கள், தங்கையை காப்பாற்றவே புதையலை எடுக்க வந்துள்ளேன் என்று டுவிஸ்ட் கொடுக்கின்றார்

சின்ன சின்ன திருட்டு, சின்ன சின்ன பொய் சொல்லும் கேரக்டரிலும் வரும் ரேவதிக்கு இதுவரை அவர் நடித்திராத வித்தியாசமான கேரக்டர். ஆனால் இதுவரை அவரை நல்ல கேரக்டரில் மட்டுமே பார்த்துள்ளதால் அவரது நடிப்பு ஓகே என்றாலும் ஏதோ ஒன்று உறுத்துகின்றது

யோகிபாபு, சத்யன், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், மதுசூதனன் ராவ், முனிஷ்காந்த்ஆகியோர்கள் நடிப்பு ஓகே. நானும் ரெளடிதான் படத்தின் நடிப்பையே மீண்டும் ரிப்பீட் செய்துள்ளார் ஆனந்த்ராஜ்

அனந்தகுமாரின் கேமிரா பளிச்சிட்டாலும், விஜய் வேலுக்குட்டியின் படத்தொகுப்பு இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். விவேக் மெர்வின் இசையில் 'சேராமல் போனால்' பாடல் அருமை. காட்சியாக்கமும் சூப்பர்.

இயக்குனர் கல்யாண், எந்த ஒரு காட்சியையும் புதுமையாக படைக்க முயற்சிக்கவில்லை. ஆங்காங்கே சில டுவிஸ்டுகள், ஒருசில காமெடி தவிர படம் முழுவதும் ஏற்கனவே பார்த்த பல படங்களின் காட்சிகளை ஞாபகப்படுத்துகின்றன. பிரபுதேவா, ஹன்சிகா உள்பட எந்த ஒரு கேரக்டருக்கும் அழுத்தம் இல்லை. இது காமெடி படமா? ஆக்சன் படமா? என்ற குழப்பம் ஆரம்பம் முதல் கடைசி வரை உள்ளது.

மொத்தத்தில் 'குலேபகாவலி' லேசான தலைவலி