வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மற‌க்க முடி‌யுமா
Written By Suresh
Last Updated : புதன், 21 அக்டோபர் 2015 (11:26 IST)

அஜித்தின் மறக்க முடியாத பேட்டி

வேதாளம் படத்தில் நடித்தபோது அஜித்தின் காலில் அடிப்பட்ட போதும், அவர் வலியைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடித்தார் என செய்திகளில் படித்திருப்பீர்கள்.


 

 
ஆரம்பம் படத்தின் கார் சேஸிங் காட்சியில் டூப் போடாமல் நடித்தபோது, அவருக்கு முதலில் காலில் அடிப்பட்டது. அதன் பிறகு இப்போது அடிபட்டிருக்கிறது.
 
அஜித்தின் வலிதாங்கும் வலிமையையும், அவரது முந்தைய அனுபவங்களையும் அறிந்தவர்களுக்கு இந்த செய்தி எந்த ஆச்சரியத்தையும் அளித்திருக்காது.
 
விபத்துக்குள்ளாகி முதுகுத்தண்டில் ஒருடஜனுக்கும் மேல் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் அஜித். ஒருமுறை முதுகில் அறுவை சிகிச்சை செய்து கொண்டாலே ஆயுள்முழுக்க அலுங்காமல் நடப்பவர்கள்தான் இங்கு அதிகம். அஜித் செய்து கொண்ட அறுவை சிகிச்சைகள் பதினைந்து. வேறொரு நபராக இருந்தால், சக்கரநாற்காலிதான் அவர்களின் வாசமாக இருந்திருக்கும்.
 
இதனை புரிந்து கொள்ளாமல் மீடியா அவரை மிகவும் காயப்படுத்தியது. முக்கியமாக 'ஜி' படத்தின் போது. படத்தில் அவரது நடிப்பைவிட, குண்டாயிட்டார் அஜித் என எழுதியவர்களே அதிகம். அது அஜித்தை மிகவும் பாதித்தது. அப்போது அவர் அளித்த பேட்டி முக்கியமானது.
 
"படம் நல்லா இருக்கா, இல்லையானு சொல்லாம சிலர் நான் குண்டா இருக்கேன்னு பெர்சனலா கமென்ட் அடிக்கிறாங்க. 15 ஆபரேஷன்களுக்குப் பிறகு என் மெட்டபாலிஸமே மாறிடுச்சு. நான் ரெண்டு காலையும் ஊன்றி நடக்கிறதே பெரிய விஷயம் சார். அதை நினைச்சு நான் சந்தோஷப்படுறேன்.
 
நான் நல்ல டான்ஸரா இல்லாம இருக்கலாம். ஆனா, அதுக்காக முயற்சி பண்றேன். இவ்வளவு சிகிச்சைகளுக்குப் பிறகும் ஹெலிகாப்டர்ல இருந்து குதிக்கிறேன்… சண்டை போடுறேன். ஆனா, தொடர்ந்து என் பெர்சனல் தோற்றத்தை சிலர் கிண்டல் செய்றது வருத்தமா இருக்கு" என்று வெளிப்படையாக வருத்தப்பட்டார்.
 
அந்த வைராக்கியத்தில்தான் அவர் தனது உடல் எடையை குறைத்தார். அது அவரது உடல்நிலைக்கும், எடுத்துக் கொள்ளும் மருந்துக்கும் ஏற்புடையதில்லை என்று தெரிந்தும் உடல் எடையை கணிசமாகக் குறைத்து பரமசிவம் படத்தில் நடித்தார்.
 
ஆஞ்சநேயா படத்தின் போது அவர் முதுகுவலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். சண்டைக் காட்சிகளிலும், நடனக் காட்சிகளிலும் வலியை பொறுத்துக்...
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க...

கொண்டு நடிப்பவர், கேரவனுக்குள் நுழைந்ததும் வலியில் வாய்விட்டு அழுவதை பலரும் பார்த்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் ஒரு மருத்துவர் அவருடனே இருப்பார்.
 
இன்று அஜித்துக்கு நல்ல ஓபனிங் இருக்கிறது. அவர் கதையே இல்லாத படத்தில் நடித்தாலும் ரசிகர்கள் பார்க்கிறார்கள். எல்லாம் அதிர்ஷ்டம் என்கிறார்கள். அது குறித்து அஜித்தே ஒருமுறை பேட்டியில் குறிப்பிட்டார்.
 
"என்கிட்டயே நிறையப் பேர் சொல்லியிருக்காங்க… பொறந்தா அஜித்குமாராப் பொறக்கணும்னு. அஜித்குமாருக்கு என்னல்லாம் கஷ்டம் இருக்குனு, அஜித்குமாரா வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும்.


 

 
சச்சின் டெண்டுல்கர் இப்படி ஆடணும்னு சொல்றது ரொம்ப ஈஸி. ஆனா கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைச் சுமந்துக்கிட்டு விளையாடுற சச்சின் டெண்டுல்கருக்குத்தான் அது எவ்வளவு கஷ்டம்னு தெரியும்."
 
ரசிகர்கள் எளிதாக நெருங்கக் கூடிய நடிகராக அஜித் இருந்தார். அதனை சிலர் தவறாகப் பயன்படுத்த, ரசிகர்களிடமிருந்தும், மீடியாவிடமிருந்தும் விலகி இருக்க ஆரம்பித்தார். ரசிகர் மன்றங்களை கலைத்தாலும், அவர் ரசிகர்களை மதிக்கிறார் என்பதற்கு சான்று தேவையில்லை. முன்பு அவர் அளித்த பேட்டியே போதுமானது.
 
"இத்தனை ஆண்டுகளில் ரசிகர்கள் பலம் கூடிக் கொண்டே இருப்பது கடவுள் ஆசீர்வாதம்தான். என் ரசிகர்களுக்கு வெறும் நன்றி சொன்னால் அது முழுமையாகாது. உண்மையைச் சொல்றேன்… தினமும் காலையில் கடவுளை வேண்டும்போது என் ரசிகர்களுக்காகவும் வேண்டிக்கிறேன்.
 
நான் இன்னைக்கு சினிமாவில் இருப்பேன். நாளைக்கு இல்லாமலும் போவேன். ஆனா, ஒரு அண்ணனா என் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். அட்வைஸ்னு தப்பா நினைக்காதீங்க. உங்க தன்மானத்தை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதீங்க.
 
உங்க வேலையை 100 சதவிகிதம் ரசிச்சு செய்யுங்க. நல்லாப் படிங்க. நான் பத்தாவது வரைக்கும்தான் படிச்சேன். வாழ்க்கையில் கஷ்டப்பட்டுத்தான் பல விஷயங்களைக் கத்துக்கிட்டேன். ஆனா, அந்த ரூட் ரொம்பக் கஷ்டம். 
 
படிச்சிருந்தா இவ்வளவு அடிபட்டு வந்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதே. அதனால நல்லாப் படிங்க. யாரையும் கண்மூடித்தனமா நம்பாதீங்க. யார் பின்னாடியும் போகாதீங்க. மத்தவன் காலை மிதிச்சு முன்னேறாதீங்க.
 
சிம்பிளா சொல்றேன்…
 
வாழு… வாழவிடு."
 
இப்போதெல்லாம் அஜித் யாருக்கும் பேட்டியளிப்பதில்லை. அவர் சொல்ல வேண்டியதை ஏற்கனவே சொல்லி முடித்துவிட்டார் என்பதை இந்தப் பழைய பேட்டிகள் நமக்கு உணர்த்துகின்றன.