வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மற‌க்க முடி‌யுமா
Written By ஜே.பி.ஆர்
Last Updated : வியாழன், 20 நவம்பர் 2014 (09:20 IST)

ருத்ரையா - காலம் தவறவிட்ட கலை வசந்தம்

இயக்குனர் ருத்ரையா இரு படங்களுடன் முடங்கிப் போனது தமிழ், சினிமாவுக்கும் தமிழகத்துக்கும் பேரிழப்பு. ருத்ரையா நுட்பமான கலைஞர். அவரது திறமையும் அவள் அப்படிதான் திரைப்படம் எப்படி உருவானது என்பதையும் அந்தப் படத்தில் பணிபுரிந்த எழுத்தாளர் வண்ணநிலவன் சில வருடங்கள் முன்பு பகிர்ந்து கொண்டார். அந்தக் கட்டுரை அந்த காலகட்டம் குறித்த சித்திரத்தை நமக்கு தெளிவாக தருகிறது. இனி கட்டுரை.
 
அவள் அப்படித்தான் படம் வெளிவந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. அந்தப் படத்தில் பங்கு பெற்ற பல தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு அதுதான் முதல் படம். படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும் இயக்குநருமான ருத்ரையாவைப் பற்றிச் சொல்லாமல் தீராது.
 
எனக்கு ருத்ரையாவை 75 -லிருந்து தெரியும். அவர் எனக்கு அறிமுகமான போது அவர் சென்னை அரசு திரைப்படக் கல்லூரியில் திரைக்கதை இயக்கத்துக்கான வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். அவள் அப்படித்தான் படத்தின் ஒளிப்பதிவாளர்களாகப் பணியாற்றிய நல்லுசாமி, ஞானசேகரன், அருண்மொழி, எடிட்டர் கண்ணன் போன்றவர்கள் ருத்ரையாவுடன் திரைப்படக் கல்லூரியில் பயின்றவர்களே. படத்தின் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த பாபுவும் ருத்ரையாவும் வகுப்புத் தோழர்கள். இயக்குனருக்கு ஒன்றாகப் படித்தவர்கள்.
 
டைரக்டர் ஜெயபாரதிதான் எனக்கு ருத்ரையாவை அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது நான் ‘அன்னைநாடு' என்ற தினசரியில் வேலை பார்த்து வந்தேன். நானும் ஜெயபாரதியும் ஆதம்பாக்கத்தில் வசித்து வந்தோம். இருவரும் அடிக்கடி சந்திப்போம். பரங்கிமலை ஸ்டேஷன் படிக்கட்டு அருகே நின்று நேரம் போவது தெரியாமல் மணிக்கணக்காக சினிமா, பத்திரிகை, இலக்கியம் என்று பேசிக் கொண்டிருப்போம். ஜெயபாரதி அப்போது தினமணிகதிரில் உதவி ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். 'இரண்டு பேர் வானத்தைப் பார்க்கிறார்கள்' என்ற திரைக்கதை வசனத்தை NFDC  க்குச் சமர்ப்பித்திருந்தார்.
ராயப்பேட்டை கெளடியா மடத்துக்கு அருகேயுள்ள சந்தினுள் ஒரு பிரிவியூ தியேட்டர் இருந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை ‘சோமனதுடி' படம் பார்ப்பதற்காக அந்தப் பிரிவியூ தியேட்டருக்கு நானும் ஜெயபாரதியும் போயிருந்தோம். அங்கே படம் பார்க்க வந்திருந்த ருத்ரையாவை ஜெயபாரதி எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். இப்படித்தன் எனக்கும் ருத்ரையாவுக்குமான நட்பு தொடங்கியது. அவர் அப்போது ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனியில் தங்கியிருந்து வந்தார்.
 
திரைப்படக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் போதே ருத்ரையா வந்தார். அவரது நீண்ட நாள் கனவுகளில் ஒன்று தி. ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்' நாவலைப் படமாக்க வேண்டும் என்பது. அதற்கான திரைக்கதை வசனத்தைக் கூட நான் எழுதினேன். கதைவசனத்தை எடுத்துக் கொண்டு டெல்லி சென்று தி. ஜானகிராமனைப் பார்த்தேன். அனுமதியும் தந்தார். ஆனால் அது ஏனோ படமாக்கப்படவேயில்லை.
 
திரைப்படக் கல்லூரியை முடித்தவுடன் படக் கம்பெனியைத் துவங்குவதற்கான வேலைகளில் இறங்கினார். அவருடைய அக்காள் கணவர் உதவியுடன் குமார் ஆர்ட்ஸ் என்ற கம்பெனியைத் துவங்கினார். ஆழ்வார்பேட்டையில் பிரபல பின்னணிப் பாடகி பி. சுசீலாவின் வீட்டுக்கு அடுத்த பங்களாவில் குமார் ஆர்ட்ஸ் இயங்கத் தொடங்கியது. இந்த இடத்தில் தான் ‘பராசக்தி' படத்தைத் தயாரித்த நேஷனல் பிக்சர்ஸ் கம்பெனியும் முன்பு இருந்தது.
 
இயங்குனர் கே. பாலசந்தரின் உதவியாளராக இருந்த, மறைந்த அனந்து ‘அவள் அப்படித்தான்' படத்திற்காக பல வழிகளிலும் உதவினார். ரஜினி, கமலஹாசன், ஸ்ரீப்ரியா போன்றோரின் கால்ஷீட்களைப் பெற்றுத் தந்தார். கதை ருத்ரையாவுடையதாக இருந்தாலும் ரஜினி, ஸ்ரீப்ரியாவின் கதாபாத்திரங்களை இவ்வளவு சிறப்பாக உருவாக்கியவர் அனந்து சார்தான். ‘அவள் அப்படித்தான்' என்ற தலைப்பே அவர் சொன்னதுதான்.

One Line எனப்படும் திரைக்கதையின் அடிப்படை அமைப்பை ருத்ரையாவின் திரைப்பட கல்லூரி நண்பரான சோமசுந்தரேஷ்வர் (டைரக்டர் ராஜேஷ்வர்) எழுதினார். அனந்து சார், சோமசுந்தரேஷ்வர் நான் மூவரும் காட்சிகளையும் வசனத்தையும் எழுதினோம். யார் யாரிடம் எந்தெந்தக் காட்சிகளைக் கொடுத்து வசனம் எழுதிவாங்க வேண்டும் என்ற நுட்பம் ருத்ரையாவுக்குத் தெரிந்திருந்தது.
 
கமலும், ரஜினியும் அந்தச் சமயத்தில் பல படங்களில் நடித்து வந்தார்கள். ஸ்ரீப்ரியாவும் அன்றைய நம்பர் ஒன் ஹீரோயின். மூவருமே பிஸியான ஆர்ட்டிஸ்ட்கள். இருந்தும் ‘அவள் அப்படித்தான்' படத்துக்கு அவர்கள் அளித்த ஒத்துழைப்பு அபாரமானது.
தலைசிறந்த உலக திரைப்படங்களைப் பற்றிய ருத்ரையாவின் அறிவு அபாரமானது. உலகப் படஇயக்குநர்களைப் பற்றியும், அவர்களது படங்களைப் பற்றியும் அவருக்குச் சொந்தமான அபிப்பிராயங்கள் உண்டு. கமலுடன், அனந்து சாருடனும் அவர் பல திரைப்படங்களைப் பற்றி விவாதிப்பார். அவருடைய ஒளிப்பதிவாளரான நல்லுசாமியும் திரைப்படங்களைப் பற்றி கலாபூர்வமான அணுகுமுறைகளைக் கொண்டவர். பெர்க்மானுடைய பல படங்களில் ஒளியமைப்பைப் பற்றி நல்லுசாமி நுட்பமான பல தகவல்களைச் சொல்லியிருக்கிறார்.
 
‘அவள் அப்படித்தான்' படத்தின் படப்பிடிப்பு நாட்களில், எடுக்கப் போகும் காட்சிகளைப் பற்றி ருத்ரையாவும், நல்லுசாமியும் இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பே விரிவாக விவாதிப்பார்கள். வசனங்களைப் பொறுத்தமட்டில் என்னிடம் காட்சியை விவரிப்பார். வசனம் சரியாக அமையவில்லை என்றால் திரும்பவும் எழுதச் சொல்வார். சிற்பம் செதுக்குவது போல் ருத்ரையா படத்தைச் செதுக்கினார். அனந்து சார் தினமும் காலையும் இரவும் வந்து செல்வார். ரஜினி, ஸ்ரீப்ரியா கதாபாத்திரங்களின் வெற்றிக்கு அவருடைய வசனங்கள் தான் காரணம். பெரும்பாலும் காட்சிக் கோணங்கள், வசனங்கள் உள்பட எல்லாமே ஏற்கனவே திட்டமிடப்பட்டு விடுவதால் படப்பிடிப்பு வேலைகள் வேகமாகத் தடையின்றி நடைபெறும்.
 
இளையராஜா அப்போது வளர்ந்து வரும் இசையமைப்பாளர். பாடல்களுக்கு மெட்டமைக்கும் நாட்களில் காலை எட்டுமணிக்கெல்லாம் அவரும் கங்கை அமரனும் குமார் ஆர்ட்ஸ் அலுவலகத்துக்கு வந்துவிடுவார்கள். அடுக்கடுக்காக மெட்டுகளை அந்த காலத்திலேயே இளையராஜா ஆர்மோனியத்தில் வாசித்து காட்டுவார். சிவச்சந்திரன் பாடும் ‘பன்னீர் புஷ்பங்களே' என்ற பாடலை கங்கை அமரன் எழுதி இருக்கிறார்.

'யோவ், இந்த பாட்டை நீ எழுதுய்ய…' என்று ருத்ரையா, முதலில் அந்தப் பாட்டுக்கான டியூன் அடங்கிய கேஸட்டை என்னிடம் தான் கொடுத்தார். நானும் ஒருநாள் பூராவும் கேஸட்டைப் போட்டுப் போட்டுப் பார்த்து முயற்சித்தேன். தத்தகாரத்துக்கு எழுத வரவில்லை. ‘முடியவில்லை' என்று கேஸட்டைத் திருப்பிக் கொடுத்து விட்டேன். பிறகு கங்கைஅமரன் அந்த டியூனுக்கான பாடலை எழுதினார். ‘வாழ்க்கை ஒடம் செல்ல' என்ற பாடலை கண்ணதாசன் எழுதினார்.
 
தீபாவளியன்று படம் திரையிடப்பட்டது. சென்னையில் காமதேனுவிலும் சபையர் வளாகத்தில் அமைந்துள்ள எமரால்டிலோ ப்ளுடைமண்டிலோ ஓடியது. காமதேனுவைவிட சபையர் வளாகத் தியேட்டரில் சற்றுக் கூடுதல் நாட்கள் ஓடியதாக ஞாபகம். பெரும்பாலும் பத்திரிகைகளில் பாராட்டியே விமர்சனங்கள் வெளிவந்தன. இருந்தும் படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. 
 
ஆனால், தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்றுவிட்டது.