வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மற‌க்க முடி‌யுமா
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : சனி, 11 அக்டோபர் 2014 (15:52 IST)

கே.பி.சுந்தராம்பாள் - இந்திய நாடகத் துறையின் ராணி

வசந்தபாலன் தனது காவியத்தலைவன் படத்தை கே.பி.சுந்தராம்பாள் - கிட்டப்பா காதலை மையப்படுத்தி எடுத்திருப்பதாக தகவல். இது அவர்களுடைய காதல் கதையில்லை. ஆனால், கே.பி.சுந்தராம்பாளின் வாழ்க்கையை ஒட்டி படத்தை எடுத்திருப்பதாக வசந்தபாலன் விளக்கமளித்தார்.
இந்த தலைமுறைக்கு சுந்தராம்பாள் என்ற பெயர் அறிமுகமில்லை. திருவிளையாடல் படத்தில் இடம்பெற்ற பழம் நீயப்பா பாடலையோ, மகாகவி காளிதாஸில் இடம்பெற்ற சென்று வா மகனே சென்று வா பாடலையோ தமிழனின் செவிகள் கேட்க நேர்கையில் அந்த குரலின் வசீகரமும், கம்பீரமும் அவனது கால்களை பிடித்து நிறுத்தும். சுந்தராம்பாள் எங்கும் சென்றுவிடவில்லை. அமுதூறும் பாடலாக அவர் இங்கேயேதான் இருக்கிறார்.
கொடுமுடி பாலாம்பாள் சுந்தரம்பாளின் சுருக்கம்தான் கே.பி.சுந்தரம்பாள். பிறந்தது ஈரோட்டில் உள்ள கொடுமுடி. அவரது பால்யகாலம் குறித்து உறுதியான செய்திகள் இல்லை. இளம்வயதில் ரயிலில் பாடி பிச்சையெடுத்த நேரத்தில் அவரது குரல்வளத்தை கண்ட நடேசா ஐயர் என்ற நாடக நடிகர் அவரை நாடகத்துறையில் சேர்த்துவிட்டதாக ஒரு செய்தி உள்ளது. அவர் கொடுமுடியில் உள்ள லண்டன் மிஷன் பள்ளியில் கல்வி கற்றதாக இன்னொரு செய்தியும் உள்ளது.

கே.பி.சுந்தராம்பாளை நாடகத்துறையில் அறிமுகப்படுத்தியவர் வேலு நாயர். அவரது நல்லதங்காள் நாடகத்தில் ஆண் வேடமிட்டு நடித்தார் சுந்தரம்பாள். அந்த நாடகத்தில் அவர் பாடியதைக் கேட்டவர்கள் அவரது குரல்வளத்தில் மயங்கிப் போயினர். அதன் பிறகு வளர்ச்சியின் படிக்கட்டில் ஏறத் தொடங்கினார். இலங்கை சென்று பத்து வருடங்களுக்கு மேல் நாடகத்தில் நடித்தார். 1926 ஆம் ஆண்டு கொழும்பில் நடந்த வள்ளிதிருமணம் நாடகத்தில் கே.பி.சுந்தராம்பாளும், எஸ்.ஜி.கிட்டப்பாவும் இணைந்து நடித்தனர். நாடகம் மிகப்பெரிய வெற்றி. அதன் பிறகு இருவரும் தொடர்ந்து சேர்ந்து நடிக்க ஆரம்பித்தனர். அந்த வருடமே இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
1933வது வருடம் தனது 28வது வயதில் கிட்டப்பா காலமானார். 25 வயதான சுந்தராம்பாளுக்கு கணவனின் மரணம் பேரதிர்ச்சியாக அமைந்தது. இனி வெள்ளைச்சேலை மட்டுமே உடுத்துவேன், வேறு ஆண் நடிகர்களுடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்று சபதம் செய்து அதனை கரைடசிவரை காப்பாற்றினார்.
1934-இல் அவர் நடித்த பக்த நந்தனார் நாடகம் அடுத்த வருடமே திரைப்படமாக எடுக்கப்பட்டது. கே.பி.சுந்தராம்பாள் நடிக்க வேண்டும் என்பது தயாரிப்பாளரின் விருப்பம். அந்த வாய்ப்பை நிராகரிக்க, தனக்கு ஒரு லட்சம் சம்பளம் தர வேண்டும் என்றார் சுந்தராம்பாள். ஒரு லட்சம் என்பது அப்போது மிகப்பெரிய தொகை. ஆனால் அவரது குரலுக்காக ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் தர தயாரிப்பாளர் முன் வந்தார். அதன் பிறகு அவர் பல படங்களில் நடித்தாலும், கணவர் இறந்தபோது எடுத்த சபதத்தை கைவிடவில்லை.

ஆண்கள் கோலோச்சிய நாடகத்துறையில் வறுமையான சூழலில் இருந்து வந்து தனது குரலாலும், திறமையாலும் நாடகத்துறையை ஆண்டவர் கே.பி.சுந்தராம்பாள். வெறும் நடிப்புடன் நின்று விடாமல் சுதந்திரப் போராட்டத்திலும் அவர் தன்னை இணைத்துக் கொண்டார். சுந்தராம்பாளும், கிட்டப்பாவும் நாடக மேடையை பொழுதுபோக்குக்கான இடமாக மட்டுமின்றி தேச பக்தி பாடல்கள் பாடி அதனை போராட்டத்துக்கான களமாகவும் மாற்றினர். இந்திய நாடகத் துறை இருக்கும்வரை அதன் ராணியாக கே.பி.சுந்தராம்பாள் இருப்பார்.
இன்று கே.பி.சுந்தராம்பாளின் 106-வது பிறந்ததினம்.

மேலும் அரிய படங்கள் அடுத்த பக்கம்..