வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மற‌க்க முடி‌யுமா
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : சனி, 29 நவம்பர் 2014 (10:03 IST)

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நடித்த திரைப்படத்தில் ஒரு காட்சி.
 
பலநாள்கள் பட்டினி கிடந்த ஒருவன் செல்வந்தரான என்.எஸ்.கே.யிடம் வந்து,
 
"ஐயா சாப்பிட்டு நாலு நாளாச்சு "என்பான்.
 
என்.எஸ்.கே. சொல்வார், "அடடே, உடனே போய் சாப்பிட்டு வாப்பா."
 
நண்பர் இதை சொன்ன போது சிரிப்பை அடக்க முடியாமல் பொங்கி சிரித்தோம். அன்று மட்டுமில்லை, எப்போது அடடே என்று தொடங்கினாலும் சிரிப்பு அணைஉடைத்து வரும். அதுதான் கலைவாணர்.
 
இன்று (நவ.29) கலைவாணரின் பிறந்தநாள். 1908 -ஆம் ஆண்டு நாகர்கோவிலில் உள்ள ஒழுகினசேரியில் கலைவாணர் பிறந்தார். என்.எஸ்.கே. என்பது நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணனின் சுருக்கம். அப்பா சுடலையாண்டி பிள்ளை, தாய் இசக்கியம்மாள். ஏழ பேரில் இவர் மூன்றhவது பிள்ளை.
 
வறுமை காரணமாக சின்ன வயதிலேயே மளிகைக் கடையில் பொட்டலம் மடிக்க அனுப்பப்பட்டார். அப்புறம் சோடா கடையில் வேலை. அப்போதுதான் நாடகப் பரிட்சயம். அங்கும் தின்பண்டங்கள் விற்பனைக்காகதான் சென்றார். நாடகம் பிடித்துப் போக அவரது தந்தையே ஒழுகினசேரியில் நாடகம் போட வந்த ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் அவரை சேர்த்துவிடுகிறார். 
 
கலைவாணரை செதுக்கியவர்கள் பெரியாரும், ஜீவானந்தமும். கலைவாணர் பிறந்தபோது நாகர்கோவிலை உள்ளடக்கிய நாஞ்சில்நாடு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுமையில் இருந்தது. சாதிக் கொடுமை அதிகம். நாயர்களுக்கும், நம்பூதிரிகளுக்கும் கீழ்தான் மற்ற அனைத்து சாதியினரும் அடிமைப்பட்டு இருந்தனர்.
 
கலைவாணரின் நாடகங்களில் இது வெளிப்பட்டது. வன்மையாக அல்ல, மென்மையாக. கிந்தனார் நாடகத்தில் கலைவாணர் பாகவதர். கதாகாலேட்சபம் செய்கையில் கடவுளுக்குப் பதில் ரயிலை பாடினார்.
 
கரகரவென சக்கரம் சுழல
கரும்புகையோடு வருகிற ரயிலே
கனதனவான்களை ஏற்றிடும் ரயிலே
ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே 
மறையவரோடு பள்ளுப் பறையரை ஏற்றி மதபேதத்தை ஒழித்திட்ட ரயிலே.
 
சாதி, மதம், மூடநம்பிக்கை அனைத்துக்கும் எதிராக  நாடகத்தையும், சினிமாவையும் பயன்படுத்திக் கொண்டார். தேசபக்தியை நாடகம் வழியாக ஊட்டினார். தேசபக்தி நாடகத்தில் காந்தி மகான் கதை என்ற பெயரில் வில்லு பாட்டை புகுத்தி ராட்டையின் மகத்துவத்தை பேசினார். அதற்காகவே அந்த நாடகம் தடை செய்யப்பட்டது. 
 
நடிகர்களில் சார்லி சாப்ளினின் பாதிப்பு அவரிடம் அதிகம் இருந்தது. அவரது மௌனப்படங்களைப் போலவே ஒரே படத்தில் ஐந்து வெவ்வேறு கதைகளை கலைவாணர் முயன்று பார்த்திருக்கிறார். தமிழகத்து சாப்ளின் என்ற போது, சாப்ளினை எத்தனை ஆயிரம் துண்டுகளாக வெட்டினாலும் அதில் ஒரு துண்டுக்கு நான் இணையாக மாட்டேன் என்றவர் கலைவாணர்.
 
கலைவாணரின் நகைச்சுவையின் முக்கிய அம்சம், அவர் யாரை பகடி செய்கிறாரோ அவர்களும் சேர்ந்து சிரிப்பார்கள். பகடி செய்கிறவரின் மனதையும் புண்படுத்தக் கூடாது என்ற பண்பு கலைவாணரின் நகைச்சுவையில் இருந்தது. 
 
ஏழைகளின் கஷ்டத்தை புரிந்து கொள்ளாத செல்வந்தனை, அடடே உடனே போய் சாப்பிட்டு வாப்பா என்ற ஒரு வரியில் அவரால் கொண்டு வர முடிந்தது. காழ்ப்பு இல்லை, கோபம் இல்லை, தூஷணம் இல்லை. அதுதான் கலைவாணர். அடுத்தவரை கேலி செய்வதே நகைச்சுவை என்று நினைக்கும் இன்றைய தமிழ் சினிமா கலைவாணரிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.