வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மற‌க்க முடி‌யுமா
Written By ஜே.பி.ஆர்
Last Modified: வெள்ளி, 30 ஜனவரி 2015 (09:43 IST)

இயக்குனர் சிகரமும் காவிய கவிஞரும் - பாகம் 2

இந்திய திரையுலகில் அதிக புதுமுகங்களை அறிமுகப்படுத்தியவர் பாலசந்தராகதான் இருப்பார். கவிஞர் வாலியை நடிகராக்கியதும் அவர்தான். அந்த நடிகழ்வை வாலியே விவரிக்கிறார்.
 
"அடிப்படையில் நான் ஒரு நாடகக்காரன். நான் திருச்சியில நிறைய நாடகங்கள்ல நடிச்சிருக்கேன்.என்னோட நாடகத்துல மனோரமா எல்லாம் நடிச்சிருக்காங்க. நீங்க ஒண்ணு வச்சுக்குங்க. சினிமாவுக்கு பாட்டு எழுதற கவிஞன் அடிப்படையில் ஒரு நடிகன். ஒருநாள் பாலசந்தர் எனக்கு போன் பண்ணி, நான் படம் எடுக்குறேன். அதுல நீங்க நடிக்கணும்னு சொன்னாரு. அடுத்த வாரம் போன் பண்ணுங்க நான் சொல்றேன்னு சொல்லிட்டேன். அடுத்த வாரம் அவரே போன் பண்ணினார்.
"உடனே நான், நடிக்கிறேன்னு சொல்லிட்டேன். அதற்கு பாலசந்தர், என்னவோய் போன வாரம் கேட்டபோது அப்புறம் சொல்றேன்னு சொன்னீரு. அது என்ன பந்தான்னு கேட்டாரு. பந்தா எல்லாம் ஒண்ணும் இல்ல, நான்தான் நடிக்கணும்ங்கிற எண்ணம் உங்க மனசுல ஒரு வாரமாவது இருக்குதான்னு பார்த்தேன். அதனாலதான் அப்படி சொன்னேன்னு சொன்னேன். 
 
"பொய்க்கால் குதிரை படம் ஷுட்டிங் போனேன். சரியா நடிப்பு வரலை. உடனே பாலசந்தர்கிட்டே, நான் பாட்டு மட்டும் எழுதிக்கிறேன், நடிப்பெல்லாம் வரலைன்னு சொன்னேன். அதுக்கு பாலசந்தர், நாளைக்கு வாங்க. உங்களுக்கு நடிப்பு வரலைன்னு எனக்கு தோணுச்சுனா நான் உங்களை விட்டுடுறேன்னு சொல்லி அனுப்பிட்டாரு.
 
"அன்னிக்கு ராத்திரி முழுக்க இதே யோசனையா இருந்தது. என்னடா நமக்கு நடிப்பு வரலையேன்னு. அடுத்தநாள் ஷுட்டிங்ல ரீடேக் வாங்காம நடிச்சேன். பாலசந்தர் மானிட்டர்கூட பார்க்கலை. படம் பதினைந்தாயிரம் அடின்னா நான் அதுல பத்தாயிரம் அடி இருப்பேன்."
 
பாலசந்தரின் பொய்க்கால் குதிரை மட்டுமின்றி அண்ணி, கையளவு மனசிலும் வாலி நடித்துள்ளார். பாலசந்தருக்கு இதில் வாலியின் நடிப்பு மிகவும் பிடித்தது, கையளவு மனசு. அந்த அனுபவம் குறித்து வாலியே சொல்கிறார்.
 
"கையளவு மனசுல மகன் இறந்ததை மறைக்கிற ஒரு சீனில் நான் அழணும். எனக்கு எப்படி அழகை வரும்? நான் அழவே மாட்டேன். சோ வீட்டுலதான் ஷுட்டிங். அதை பிரமாதமா பண்ணினாரு. சிவாஜி அசந்துபோனது அதைப் பார்த்துதான்.
 
எனக்கு அழுவது மாதிரி நடிக்க வராதுன்னு சொன்னேன். இவரு, நீங்க போனை பார்த்து அழுங்க. நான் உங்க முதுகுல ஆக்ஷனை பார்த்துக்கிறேன்னாரு. குலுங்கி குலுங்கி அழுறதில்ல, ஷாட் முடிஞ்சி கீதா உள்பட எல்லோரும் கைத்தட்டினார்கள். அந்த சீனைப் பார்த்துதான் சிவாஜி கூப்பிட்டு, என்னய்யா இவ்வளவு பிரமாதமாக பண்ணியிருக்கேன்னு பாராட்டினார்."
 
பாலசந்தர் குறித்த நிகழ்வுகள் மட்டுமின்றி தனது சினிமா வாழ்க்கையில் சந்தித்த முக்கியமான நபர்கள் அனைவர் குறித்தும் வாலி தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளார். அதனை நெல்லை ஜெயந்தா புத்தகமாக்கியுள்ளார். சினிமாவின், சினிமா மனிதர்களின் வரலாறு சொல்லும் முக்கியமான புத்தகம் அது.