Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அக்னி நட்சத்திரத்தில் மழை கொண்டு வந்த ’இசைஞானி இளையராஜா’


லெனின் அகத்தியநாடன்| Last Updated: வியாழன், 2 ஜூன் 2016 (11:56 IST)
வெயில் கொளுத்தும் அக்னி நட்சத்திர நாளில், ’இசைஞானி இளையராஜா’ மழை கொண்டு வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
 
 
1988 ல் வெளியாகி சிறந்த திரைப்படத்திற்கான மாநில விருது பெற்ற "அக்னி நட்சத்திரம்", ராஜாவின் இசையில் இன்னுமொரு மைல்கல். மிகச்சிறந்த குறிப்பிடும்படியான இசையும் பாடல்களும்.
 
பெண்குரலில் தனிப்பாடல்கள் அருகிவிட்ட பொழுதுகளில், தைரியமாக ஆறு பாடல்களில், மூன்று பெண்குரல் தனிப்பாடல்களை (Female Solos) வைத்தார். ஒரு பூங்காவனம் புதுமணம், நின்னுக்கோரி வரணும், ரோஜாப்பூ ஆடிவந்தது - இவை மூன்றும்.
 
ஜேசுதாஸ், சித்ராவின் வா வா அன்பே அன்பே, எப்போதுமே என் விருப்ப எண்களில் ஒன்று. மற்றொன்று.. தூங்காத விழிகள் ரெண்டு.. உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று.. செம்பூமஞ்சம் விரித்தாலும் பன்னீரை தெளித்தாலும், ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது..
 
படிக்கும் போதே தெரிந்திருக்கும், வாலி எழுதியதென்று... ஆறு பாடல்களுமே வாலியின் கைவண்ணம்..
 
பாடல் பதிவு ஒரு கோடைப்பொழுதின் பிற்பகலில் நிகழ்ந்தது. பாடல் அமிர்தவர்ஷினி என்ற ராகத்தை அடிப்படையாக கொண்டது. மழையை வரவழைப்பதற்கான தனித்துவமுடைய ராகமது. முறையாக பாடினால் மட்டுமே!
 
மாதிரிப்பதிவை (Track) கேட்டவுடனேயே, ஜேசுதாசும் ஜானகியும் அமிர்தவர்ஷினியை கண்டு சிரித்துக்கொண்டு ராஜாவை கேலிசெய்தனராம். சுட்டெரிக்கும் வெயிலில் இதைப்பாட வைக்கிறாரே என்று.
 
"மழை வரலன்னா, எங்களைத் திட்டாதீங்க" என்று கூட சொன்னனராம். பாடல் பதிவும் முடிந்தது. பதிவரங்கை விட்டு வெளியே வருகையில் எல்லோருக்குமே இன்ப அதிர்ச்சி. யாரும் வீட்டுக்கு கிளம்ப முடியாத வகையில் கனத்த மழை, யாருமே எதிர்பார்த்திருக்காத மே மாதத்தின் ஒரு நாளில். நம்பமுடியவில்லை அல்லவா?
 
இது, எஸ்.ஜானகி ஒரு நேர்காணலில் சொன்னது. தற்செயலான நிகழ்வு தான் எனினும், கேட்கும் போது மிகுந்த ருசியாயிருக்கிறது அல்லவா?...
 
அடுத்தமுறை கேட்க நேர்கையில் இதை நினைத்துக்கொள்ளுங்கள்...

நன்றி : 
Ilayarajadevotee
 


இதில் மேலும் படிக்கவும் :