வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By J.Durai
Last Modified: திருச்சி , திங்கள், 25 மார்ச் 2024 (15:08 IST)

செத்தாலும் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் - வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கண்ணீர் மல்க பேசிய துரை வைகோ!

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திருச்சியில் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம்  மற்றும்  திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் இன்று சத்திரம் பேருந்து நிலையம் அருகே கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.
 
திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே என் நேரு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி வேட்பாளர் துரை வைகோ உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 
இந்தக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி பேசும்போது....
 
இன்று பங்குனி உத்திரம் முருகன் உலகத்தை சுற்றி வந்தார். 
 
ஆனால் துரை.வைகோ  அமைச்சரும், முதன்மை செயலாளருமான கே.என். நேருவை பிள்ளையார் போன்று சுற்றி வந்தால் போதும். 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறலாம். 
பணம் உதவி என்றாலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்றாலும் முதன்மைச் செயலாளரை பிடித்தால் போதும் என்றார். 
 
இதைப் பேசிக் கொண்டிருக்கும் போதே அமைச்சர் நேரு அப்படி போடுடா அருவாளை என பேசினார்.
 
தொடர்ந்து ம.தி.மு.க முதன்மை செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான துரை வைகோ பேசுகையில் ...
 
அமைச்சர் கே.என். நேரு முகம் கடந்த மூன்று நாட்களாக இருக்கமாகவே இருந்தது. ஆனால் இன்று அவர் கடந்த இரண்டு மணி நேரங்களாக அவரும் கலகலப்பாக இருந்து எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
 
மதிமுக திமுகவிலிருந்து வெளியே வந்தாலும் நாங்களும் திராவிட இயக்கத்தின் குடும்பம் தான். திராவிட இயக்கத்திற்கு ஏதாவது பிரச்சனை என்றால் முதலில் நிற்கக்கூடிய நபராக வைகோவும் இயக்கமாக மதிமுகவும் தான் இருக்கும்.
 
கலைஞரிடம் வைகோ உங்களுக்கு எப்படி உறுதுணையாக இருந்தாலும் அதே போல ஸ்டாலினுக்கும் உறுதுணையாக இருப்பேன் என கூறினார். தொடர்ந்து 7 ஆண்டுகளாக உறுதுணையாக இருந்து வருகிறேன்.
 
எங்களுக்கு தொகுதியே ஒதுக்காவிட்டாலும் இந்த அணியில் தான் இருப்போம் என உறுதியாக கூறினேன்.
 
நான் அரசியல் வருவேன் என கனவில் கூட எதிர்பார்த்ததில்லை. என் தந்தைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக என் கட்சிக்காரர்கள் வலுக்கட்டாயமாக என்னை இழுத்து விட்டார்கள் நான் ஒரு வேட்கையோடு அரசியலில் ஈடுபடவில்லை.
 
என் தந்தை ஒரு சகாப்தம் அவருக்கு  தலைகுனிவு வந்து விடக்கூடாது என்பதற்காக தான் அரசியலுக்கு வந்தேன் என கண்ணீர் விட்டு அழுதார். அப்போது மத்திய மாவட்ட செயலாளர்கள் ஆறுதல் கூறும் போது என்னை சங்கடப்படுத்தாதீர்கள், கஷ்டப்படுத்தாதீர்கள் என கூறினார்.
 
தொடர்ந்து பேசிய அவர்,
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பமில்லை வேறு யாராவது நிற்க வையுங்கள் என கூறினேன்.
அப்போது தொண்டர் ஒருவர் எந்த சின்னத்தில் நிற்பீர்கள் என்று கேட்டார்...
 
செத்தாலும் எங்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் நான் சுயமரியாதை காரன்.
 
மதவாத சக்திகள் திராவிட இயக்கத்தை அழித்துவிட்டு தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கிறார்கள் இந்த நேரத்தில் அதை எதிர்க்க தான் நாம் களத்தில் இருக்கிறோம். எங்களை யாரும் வற்புறுத்த வேண்டாம் புண்படுத்த வேண்டாம்.
 
இந்த தேர்தல் நீதிக்கும் அநீதிக்குமான போர் இதில் நீதி வெற்றி பெற வேண்டும். உதயசூரியன் சின்னத்தை நாங்கள் மதிக்கிறோம் ஆனால் நான் என்னுடைய கட்சியை ராஜினாமா செய்து விட்டு வேறொரு கட்சியில் நிற்க முடியாது என்றார்.
 
செயல்வீரர்கள் கூட்டத்தில் திமுக, ம.தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க, ம.ம.க,உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.