வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (16:05 IST)

15 முதல் 55 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்வு.! முடங்கிய தொழில்கள்..! அண்ணாமலை...

Annamalai
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அதிக மின்கட்டண உயர்வு காரணமாக விசைத்தறி இயந்திரங்களை உடைத்து விற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
 
கோவை மக்களவை தொகுதி வேட்பாளரும் பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை சூலூர் பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோமனூர் பகுதியில் அதிக அளவில் விசைத்தறி தொழில் கூடங்கள் உள்ளதாக தெரிவித்தார். 
 
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அதிக மின்கட்டண உயர்வு காரணமாக விசைத்தறி இயந்திரங்களை உடைத்து விற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்றும் 15 முதல் 55 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அண்ணாமலை விமர்சித்தார். 
 
சோமனூர் பகுதியில் மத்திய அரசு சார்பில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்று அவர் கூறினார்.  மத்திய அரசின் பவர் டெக்ஸ் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டு, 50% வரை சோலார் மின் தகடு பொருத்த மானியம் வழங்கப்படும் என்று அண்ணாமலை உறுதி அளித்தார்.
 
சோமனூர் ரயில் நிலையம் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் விரிவுபடுத்தப்படும் என்றும் நொய்யல் நதியை புனரமைக்க நான்கு மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு 990 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 
மத்திய அரசு இப்படி பல்வேறு திட்டங்களை வழங்கினாலும் அதை இங்கு சரியாக அமல்படுத்துவதில்லை என குற்றம் சாட்டிய அண்ணாமலை, மத்திய அரசு வழங்கும் நிதி முறையாக பயன்படுத்தப்படுகின்றதா என்று கண்காணிக்க பாஜக வேட்பாளர் இங்கு வேண்டும் என்பதை மக்கள் உணர்ந்துள்ளார்கள் என தெரிவித்தார்.

 
இந்தியாவில் இளைஞர்களுக்கு வேலையில்லை என்ற காங்கிரஸ் கட்சியினரின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அவர், காங்கிரஸ் கட்சியின் பா.சிதம்பரமும், ராகுல் காந்தியும் தான் வேலையில்லாமல் இருக்கின்றனர் என விமர்சித்தார். இந்தியாவில் இளைஞர்கள் அனைவருக்கும் வேலை வழங்கப்பட்டுள்ளது என அண்ணாமலை கூறினார்.