வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : புதன், 17 ஏப்ரல் 2019 (10:25 IST)

ரூ.1.5 கோடி: 94 பாக்கெட், வாக்காளர் பெயர் பட்டியல், வார்டு எண்... தினகரன் அமைதி காப்பது ஏன்?

நேற்று ஆண்டிபட்டி அமமுக ஒன்றிய அலுவலகத்தில் விடிய விடிய நடந்த வருமான வரிச்சோதனையில், ரூ.1.5 கோடி பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. 
 
இதையடுத்து, ஆண்டிபட்டியில் கைப்பற்றப்பட்ட ரூ.1.50 கோடி பணம் அதிமுகவுக்கு சொந்தமானது. அதிமுகவுக்கு சொந்தமான வணிக வளாகத்தில் பணம் பதுக்கப்பட்டிருப்பதாக நாங்கள்தான் தகவல் தந்தோம். 
 
மேலும், அதிமுகவை காப்பாற்றுவதற்காக அமமுகவின் பணம் என பொய்யாக குற்றஞ்சாட்டுகின்றனர். வானத்தை நோக்கி சுடாமல் எங்களை அச்சுறுத்த டம்மி புல்லட் மூலம் வணிகவளாகத்திலேயே சுட்டனர் என ஆண்டிபட்டி சட்டப்பேரவை தொகுதி அமமுக வேட்பாளர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார். 
 
தற்போது இந்த விவகாரத்தில் வருமான வரித்தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ஆண்டிபட்டி அமமுக ஒன்றிய அலுவலகத்தில் ரூ.1.48 கோடி, ஒரு தபால் வாக்குச்சீட்டும் பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட தபால் வாக்குச்சீட்டில் அமமுக வேட்பாளருக்கு வாக்களிக்கப்பட்டு இருந்தது. 
கைப்பற்றப்பட்ட ரூ.1.50 கோடியும் 94 பாக்கெட்டுகளில் வாக்காளர் பெயர் பட்டியல் வார்டு எண்ணுடன் வைக்கப்பட்டிருந்தது. ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக இந்த பணத்தொகையை கொண்டு வந்துள்ளனர் என்பது விசாரணையின்போது வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளது என வருமான வரித்துரை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதோடு, ஆண்டிபட்டியில் அமமுகவினர் 150 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல், மிரட்டுதல் உள்பட 7 பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
 
இப்படி பரபரப்பான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் அமமுக தலைவர் டிடிவி தினகரன் இன்னும் இது குறித்து எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. அவரது மெளனத்தின் அர்த்தம் என்னவென்றும் தெரியவில்லை.