வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. அ.லெனின் அகத்தியநாடன்
Written By அ.லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 15 ஜூன் 2016 (10:19 IST)

நிதானத்தை இழக்கும் கருணாநிதி! - தேர்தல் தோல்வியால் விரக்தியா?

தொண்ணுற்று மூன்று அகவையிலும் சோர்வடையாமல் அரசியல் களத்தில் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டு மற்றக் கட்சித் தலைவர்களை எல்லாம் பிரமிப்பில் ஆழ்த்துபவர் முத்தமிழ் பேரறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.
 

 
ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி மீது சர்காரியா கமிசன், நாத்தீக சமரசம், 2 ஜி ஊழல், குடும்ப அரசியல், ஈழப் பிரச்சனையை அவர் கையாண்ட விதம் என பரவலாக குற்றம் விமர்சனங்கள் இருந்த போதும் அவற்றை எல்லாம் தாண்டி அரசியலில் சாணக்கியனாக இன்றளவும் திகழ்ந்து வருகிறார்.
 
தினந்தோறும் உடன் பிறப்புகளுக்கு கடிதம் எழுதுவது, தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு பதில் எழுதுவது, கட்சி மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என தன்னை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருப்பதே கலைஞரின் அடையாளம். முதுமையையோ, உடல் சுகவீனத்தையோ காரணம் காட்டி தனது செயல்களில் ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாதவர்.
 
ஸ்டாலினுக்கு முதல் அமைச்சரின் பதவி ஏற்பு விழாவில் பத்தாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்ட போது முதலமைச்சர் திருந்த மாட்டார் என்று கடுமையாக விமர்சனம் செய்தார். சட்டமன்றத்திற்கு ஏன் வந்தீர்கள் என்று நிருபர்கள் கேட்ட போது கடமை இருப்பதால் வந்திருக்கிறேன் என்றார்.
 
அறுபது ஆண்டு கால அரசியல் வாழ்வில் பதிமூன்று சட்டமன்றங்களை கண்ட மூத்த உறுப்பினர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கூட தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளராக கம்பீரமாக நின்றார்.
 
ஆனால், அவரது சமீபத்திய அறிக்கைகள், சட்டப்பேரவை தேர்தலில் திமுகவிற்கு ஏற்பட்ட தோல்வி கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு விரக்தியை ஏற்படுத்தி உள்ளதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
 
தனது பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில், கடந்த கால அதிமுக ஆட்சியில் நிகழ்ந்தவற்றை இவ்வாறு தொகுக்கிறார்: ”வரலாறு காணா வகையில் பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, பஸ் கட்டண உயர்வுகளால், மக்கள் பாதிக்கப்பட்டபோதும் கவலைப்படவில்லையே? ஐந்தாண்டுகளில் பத்தாயிரம் படுகொலைகள், ஏறத்தாழ ஒரு இலட்சம் கொள்ளைச் சம்பவங்கள், வழிப்பறிகள், கற்பழிப்புகள் முதலியவைகளால் சட்டம்-ஒழுங்கு கெட்டுக் குட்டிச்சுவரானதும் ஒரு பொருட்டாகத் தெரியவில்லையே?
 
பால் கொள்முதலில் ஊழல், தனியாரிடம் மின்சாரம் வாங்கியதில் ஊழல், அரசு ஊழியர்கள் நியமனத்தில் ஊழல், பருப்பு கொள்முதலில் ஊழல், முட்டை கொள்முதலில் ஊழல், தாது மணல் கொள்ளை ஊழல், கிரானைட் ஊழல் என அரசின் துறைகள் அனைத்துமே ஊழலின் ஊற்றுக் கண்களாகவே மாறிவிட்டனவே?” என்று பட்டியலிட்டவர்.
 
அதற்கு பிற்பாடு, “இத்தனையையும் புறந்தள்ளி, ஆட்சி அதிகாரம் அவர்களுக்கே [அதிமுகவிற்கு] தாரை வார்க்கப்பட்டிருக்கிறது என்றால் ஒரு பழமொழிதான் நினைவுக்கு வருகிறது; “ஆடு, கசாப்புக் கடைக்காரனைத் தான் நம்புகிறது" என்று எழுதுகிறார்.”
 
அதேபோல, கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையேயான மேம்பால சாலை திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியால் முடக்கியதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டி ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
 
அந்த அறிக்கையிலும், ”இந்த திட்டத்திற்கு சமாதி கட்டப்பட்டு விட்டதைக் கண்டு, சென்னை மக்கள் சஞ்சலம் கொள்கின்றனர்; ஜெயலலிதாவோ சாதித்து விட்டதாக சந்தோஷம் கொள்கிறார். என்ன செய்வது; நீங்களே தேடிக்கெண்டது; அனுபவித்துத்தான் ஆக வேண்டும்” என்று கூறியிருந்தார்.
 
நிச்சயமாக ஒரு மூத்த அரசியல்வாதியிடம் இந்த வார்த்தைகளை நான் எதிர்பார்க்கவில்லை. திமுகவிற்கோ, அதிமுகவிற்கு, மக்கள் நலக் கூட்டணிக்கோ, ஏனைய இதர கட்சிகளுக்கு வாக்களித்தது மக்கள்தான்.
 
கருணாநிதி அரசியல் நாகரிகத்திற்கு பெயர் போனவர். முதல்வர் ஜெயலலிதாவை அவர் இப்போது வரை ’அம்மையார்’ என்றே அழைத்து வருகிறார். எதிர்கட்சியினரை எந்த நிலையிலும் தரம் தாழ்த்தி பேசாதவர். ஆனால், தற்போதைய அறிக்கைகள் அத்தகைய கருத்துக்களை சிதைக்கும் வகையிலேயே உள்ளன.
 
பொதுமக்கள் ஏதோ ஒருவகையில் தவறான ஒன்றிற்கு வாக்களித்து இருப்பதாக கலைஞர் நினைத்திருந்தால், தற்போதும் ஆளுகின்ற கட்சியைத்தான் விமர்சித்து இருக்கின்ற வேண்டும். ஏனென்றால், வாக்குகள் சேகரிக்கும்பொழுது அவர்களுக்கு அளிக்கப்பட்ட மரியாதையை, தேர்தல் முடிவுகளுக்கும் அளிக்கப்பட வேண்டுமல்லவா?
 
அவர், திமுகவை ஏன் பொதுமக்கள் நிராகரித்தனர் என்பதைத்தான் கருணாநிதி ஆராய்ந்து பார்க்க வேண்டும். வேட்பாளர் தேர்வு சரியாக இருந்ததா? பிரச்சார பாணி எடுபடவில்லையா? கூட்டணி வியூகத்தில் எங்கே தவறு நடந்தது என்பது உள்ளிட்ட பல விஷயங்களையும் அவர் சீர்தூக்கி பார்க்க வேண்டும்.
 
அதற்கும் முதலாக கட்சிகளுக்குள் நடக்கும் சீர்கேடுகளை களைய அவர் முற்பட வேண்டும். கடந்த 5 ஆண்டுகளின் கட்சியின் பொதுநிகழ்ச்சிகளில் பார்க்கவே முடியாமல் இருந்த மாறன் சகோதரர்கள் திடீரென்று தேர்தல் நேரத்தின்போது ஒட்டிக்கொண்டனர்.
 
போராட்டங்களின் மூலமும், ஆர்பாட்டங்கள், பேரணிகளிலும் பரபரப்பாக இயங்கிய திமுக கடந்த 5 ஆண்டு காலத்தில் கட்சி மேற்கொண்ட வெகுஜன போராட்டங்கள் என்ன? குடும்ப அரசியலுக்கு அவர் வைத்திருக்கும் பதில் என்ன? என்றெல்லாம் மக்களுக்கு விளங்க வைக்க வேண்டும்.
 
இவ்வளவு குறைபாடுகளை வைத்துக்கொண்டு, மக்கள் தங்களுக்கு வாக்களிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை மந்தை ஆடுகள் போல கருதுவதும், நீங்களே தேடிக்கெண்டது; அனுபவித்துத்தான் ஆக வேண்டும் என்று சபிப்பதும் எந்த வகையில் நியாயம்?