1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. அ.லெனின் அகத்தியநாடன்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 10 அக்டோபர் 2016 (13:04 IST)

விலை மாதுக்களுக்காக கண்ணீர் விட்டு அழுத கலைஞன் ’குருதத்’

திரைக்கதை:
 
கலைஞனாக வாழ நினைக்கும் ஒருவனை சுற்றியுள்ள அற்ப விஷயங்கள் எவ்வாறு பாதிக்கிறது என்பதும், அகம் சார்ந்த உணர்வுகளும்தான் படம். வசதியற்ற குடும்பம், பணத்தை, புகழை நேசிக்காத மனது, இரக்க உணர்வு நிரம்பி வழியும் ஆன்மா, அற்ப மனிதர்களின் வாழ்க்கை, சொந்த வாழ்க்கையின் ஏமாற்றம், காதலின் பிரிவு துயரம் என மொத்தத்தையும் சுமக்கும் ஒரு மனிதனின் கதை இது.
 

 
ஒரு பூங்காவில் வண்டுகளின் ரீங்காரத்தை ரசிக்கும் குருதத், அதனை ஒருவன் தனது பூட்ஸ் காலால் மிதிபடுவதை கண்டு அழுது, ஆத்திரம் அடையும் அற்புத கலைஞனின் வாழ்க்கையை பிரமாதப்படுத்தி இருப்பார் குருதத்.
 
கல்லூரி காலத்தில் காதலி ஏற்படுத்திய ஏமாற்றம். சதா சர்வகாலமும் பணத்தை எதிர்நோக்கி இருக்கும் சகோதரர்களால் துரத்தப்படும் வேதனை. அங்கீகாரமற்ற தனது கவிதைகள், பழைய பேப்பர் கடை போய்விடும் கொடுமை என ஒரு மனசாட்சி மிக்க கலைஞனாகவே வாழ்ந்திருப்பார் குருதத்.
 
ஒருமுறை, நண்பர்களின் வற்புறுத்தலால் விபச்சார விடுதிக்கு சென்றிருப்பார் குருதத். பணக்காரர்கள் நிரம்பிய அந்த அறையின் மத்தியில் ஒரு பெண் நடமாடுக்கொண்டு இருக்கிறார்கள். அந்த பணக்கார சீமான்கள் மது அருந்தியபடியும், புகைத்தபடியும் கண்டுகளித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
 
பக்கத்து அறையில் அவளது குழந்தை தொட்டிலில் உறங்கி கொண்டிருக்கிறார்கள். திடீரென அந்த குழந்தை பசியால் அழுகிறார். ஆடிக்கொண்டிருக்கும் அந்த பெண்ணோ உடனே குழந்தை தூக்க பக்கத்து அறைக்கு ஓட முற்படுகிறார்கள். ஆனால், அங்கிருக்கும் சீமான்கள் அவளை போக விடாமல் தடுத்து, “நீ பணம் வாங்கி இருக்கிறாய், ஒழுங்காக ஆடு” என்று அவளின் ஆடையை பிடித்து இழுக்கிறார்கள்.
 
இதனை கண்டதும் ஒரு கலைஞனான குருதத்தால் பொறுக்க முடியவில்லை. அவரது கண்ணீர் அந்த மதுபாட்டிலில் கலக்கும். அழுதபடியே, கையில் வைத்திருந்த மதுபாட்டிலுடன், விபச்சார வீதிக்குள் நுழைகிறார்.
 

 
”இந்த நாட்டில் உண்ண கண்ணியத்தின் காவலர்கள் எங்கே இருக்கிறீர்கள்? இங்கே வாருங்கள்! இங்கேதான் ராதாவும், சீதாவும், சுலேஹாவும் இருக்கிறார்கள். இங்கேதான், தந்தையும், அவரது பிள்ளையும் ஒரு பெண்ணை தேடி வருகிறார்கள்” இந்த ரீதியில் எழுதி இருப்பார் ஷாகிர் லுதியன்வி. முஹமது ரஃபியும் அதி அற்புதமாக பாடி இருப்பார்.
 
அந்த பாடலின் மூலமாக ஒவ்வொருக்குள்ளேயும், விலைமாதுக்கள் மீதான மதிப்பை உயர்த்திவிட்டு செல்கிறார். மனசாட்சி உள்ள எவராலும், கண் கலங்காமல் இந்த பாடலை கடந்துவிட முடியாது என்பது எனது அபிப்பிராயம். அதுதான் குருதத்.
 
இந்த படத்தின் இறுதிக் காட்சியில்கூட சுத்தமான மனதுடன் வாழும், எந்தவித பாசாங்குகளும் இல்லாமல் குருதத்தை நேசிக்கும் ஒரு விலைமாதுவுடன் அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு, கைகோர்த்து செல்வதாக அமைத்திருப்பார்.
 
நான் பார்த்த சிறந்த திரைப்படங்களுல் இதுவும் ஒன்று. இந்த திரைப்படம், இந்திய சினிமாவின் சிறந்த 100 படங்களுல் ஒன்றாக ‘டைம்ஸ்’ வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று அவருடைய நினைவுநாள்.