வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. அ.லெனின் அகத்தியநாடன்
Written By அ.லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 2 ஏப்ரல் 2016 (18:45 IST)

கிரானைட் முறைகேடு முதல்.. பி.ஆர்.பழனிச்சாமி விடுதலை வரை....

சகாயம் ஆய்வறிக்கை:
 
சட்டவிரோத கிரானைட் குவாரிகளால் தமிழக அரசுக்கு சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக மதுரை மாவட்டத்தில் ஆட்சியராக இருந்தவரும், கோ- ஆப் டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகவும் இருந்த உ.சகாயம் அரசுக்கு அளித்த ஆய்வறிக்கையில் அ‌தி‌ர்‌ச்‌சி தகவலை தெரிவித்தார்.
 
அரசு புறம்போக்கு, பொதுப் பாதைகள், பஞ்சமி நிலங்கள், குளம் மற்றும் ஏரிகளை ஆக்கிரமித்து விதிகளை மீறி கிரானைட் வெட்டி எடுக்கப்படுவதாக அவர் அளித்திருந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.
 

 
இது குறித்து மதுரை மாவட்டத்தின் அப்போதைய ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக இயங்கும் கிரானைட் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
 
மதுரை ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா வழக்கு:
 
மேலும், மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்களை அரசுடமையாக்கக்கோரி மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் அரசு தரப்பில் 180 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
 
கீழையூர், கீழவளவு பகுதிகளில் பி.ஆர்.பழனிச்சாமி மற்றும் சகாதேவன் ஆகியோர் வைத்திருக்கும் கிரானைட் கற்களை அரசுடமையாக்கக்கோரி 2013-ம் ஆண்டில் அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் இரு வழக்குகளை தாக்கல் செய்தார்.
 
பின்னர், கிரானைட் எடுப்பதில் ஏராளமான முறைகேடுகள் நடைபெறுவதாகவும், அதுபற்றி அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால், நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரியும், மதுரை மாவட்டத்தில் ஆட்சி தலைவராக பணியாற்றியவருமான சகாயம் தலைமையில் குழு ஒன்று அமைத்து விசாரிக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர், டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
 
இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் 11-9-2014 அன்று சகாயம், ஐ.ஏ.எஸ்., தலைமையில் விசாரணை குழுவினை அமைத்ததோடு, உடனடியாக அந்த குழு விசாரணையை முடித்து அறிக்கை தர வேண்டுமென்றும் உத்தரவிட்டது.
 
ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து, அதற்குத் தடை விதிக்க வேண்டுமென்று கோரி, அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில் “அப்பீல்” செய்தது.
 
அதிமுக அரசு சீராய்வு மனு:
 
தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மேல் முறையீட்டு மனுவினை உச்சநீதிமன்றம் 18-9-2014 அன்று தள்ளுபடி செய்தது. ஆனால் அதையும் அதிமுக அரசு ஏற்றுக்கொண்டு, அதிகாரி சகாயத்தை இந்த பிரச்சினை குறித்து விசாரிக்க அனுமதிக்கவில்லை.
 
மாறாக சகாயம் நியமனம் தொடர்பாக மறு சீராய்வு செய்ய வேண்டும் என்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
அந்த மனுவினை விசாரித்த நீதிபதிகள் கவுல் மற்றும் சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட “பெஞ்ச்” இன்று தமிழக அரசை கடுமையாக கண்டித்தது.
 
தமிழக அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்:
 
“சகாயம் விசாரிப்பதால் நீங்கள் ஏன் அச்சப்படுகிறீர்கள்? எங்களின் உத்தரவை இன்னும் நடைமுறைப்படுத்தாமல் இவ்வளவு நாள் ஏன் காலதாமதம் செய்தீர்கள்?” என்றெல்லாம் அரசு வழக்கறிஞர்களிடம் கேள்வி எழுப்பியதோடு, தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து, மேலும் தமிழக அரசுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.
 
மேலும் அதிகாரி சகாயம் தலைமையிலே குழு அமைத்து அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்றும், ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு அவருக்கு வழங்க வேண்டும் என்றும், விசாரணைக்கு முழு நிதி உதவி ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
சகாயம் தலைமையில் குழு:
 
அதனடிப்படையில் சட்ட ஆணையர் சகாயம், பல மாதங்களாக மதுரையில் முகாமிட்டு விசாரணை நடத்தி அரசு நிலம் மற்றும் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து கிரானைட் வெட்டியெடுக்கப்பட்டது குறித்தும், பொதுப் பணித்துறைக்கு சொந்தமான கண்மாய், வரத்துக் கால்வாய், மலைகள், ஏரி ஆகியவை அபகரிப்பு செய்யப்பட்டது தொடர்பாகவும், இதனால் விவசாயத்தில் ஏற்பட்ட பாதிப்பு, குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றியும் சகாயம் குழு, தகவல்களைச் சேகரித்தார்.
 
இதனிடையே, மேலூர் அருகே உள்ள இ.மலம்பட்டி சின்னமலம்பட்டி மணிமுத்தாறு ஓடை அருகேசுடு காட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் நரபலி கொடுத்து புதைக்கப்பட்டு இருப்பதாக கீழவளவைச் சேர்ந்த சேவற்கொடியோன் என்ற பிரபு (35), ஏற்கனவே மதுரை ஆட்சியராக இருந்த அன்சுல் மிஸ்ரா, அப்போதைய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோரிடமும், பின்னர் உ.சகாயத்திடமும் புகார் கொடுத்திருந்தார்.
 
இந்தப் புகார் குறித்து விசாரிப்பதற்காக, சகாயம் குழுவினர் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி மணிமுத்தாறு ஓடைசுடுகாடு பகுதிக்குச் சென்று ஆராய்ந்தனர். இதையடுத்து அங்கு தோண்டும் பணி துவங்கியது.

சுடுகாட்டிலேயே இரவில் முகாமிட்ட சகாயம்:
 
நரபலி கொடுக்கப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் இரண்டு ஆண்களின் உடல்களை பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டியெடுக்க காவல் துறையினர் முயற்சித்தனர். ஆனால், எலும்புகள் சேதமடைய வாய்ப்பிருப்பதால், மண்வெட்டி மூலம் தோண்டுமாறு சகாயம் கேட்டுக்கொண்டார்.
 

 
இதற்கிடையில், புதைக்கப்பட்ட உடல்களை தோண்டி எடுக்கும் பணிக்கு காவல்துறையினர் ஒத்துழைக்கவில்லை. இதனால், ஆய்வு நடத்தப்படும் வரை அங்கேயே காத்திருக்கப் போவதாக அறிவித்த சட்ட ஆணையம் சகாயம் தலைமையிலான குழுவினர் அன்று இரவு முழுவதும் சுடுகாட்டிலேயே முகாமிட்டனர்.
 
பின்னர், தோண்டப்பட்ட இடத்தில் எலும்புக்கூடுகள், எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. ஒரு குழந்தை உள்ளிட்ட 4 பேரின் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 
இறுதியாக கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி சகாயம், அவர்கள் சுமார் 600 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், மற்றும் பி.சத்தியநாராயணா அடங்கிய அமர்வு முன்பாகத் தாக்கல் செய்தார்.
 
பி.ஆர்.பழனிச்சாமி விடுவிப்பு:
 
இந்நிலையில், இந்த வழக்குகளை விசாரித்த மேலூர் நீதித்துறை நடுவர் கே.வி.மகேந்திர பூபதி கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி வழக்குகளை தள்ளுபடி செய்தார். அத்துடன் அந்த வழக்கில் இருந்து பி.ஆர்.பழனிச்சாமி, சகாதேவன் ஆகியோரை விடுதலை செய்தும், அந்த வழக்கை தாக்கல் செய்த ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ரா மற்றும் அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் ஞானகிரி, ஷீலா ஆகியோர் மீது அரசின் அனுமதி பெற்று குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டார்.
 

 
மேலும் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் விசாரணைக்கு ஏற்குமாறு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் அவர் பின்பற்றவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. இதனால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.
 
நீதிபதி மகேந்திர பூபதி சஸ்பெண்ட்:
 
இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, 2 நீதிபதிகளை, மேலூர் கோர்ட்டுக்கு சென்று வழக்கு ஆவணங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
 
அதன்படி மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி பஷீர் அகமது, தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணன் ஆகியோர் மேலூர் குற்றவியல் நீதிமன்றத்திற்கு சென்றனர். அங்கு மாஜிஸ்திரேட்டு மகேந்திர பூபதியிடம் தனி அறையில் அவர்கள் விசாரணை நடத்தினர்.
 
ஒன்றரை மணி நேரம் விசாரணைக்கு பிறகு மேலூர் மாஜிஸ்திரேட்டு மகேந்திர பூபதி ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டுள்ளார்.
 
யார் இந்த பி.ஆர்.பழனிச்சாமி?:
 
1980களில் பொதுப்பணித்துறையில் ஒரு சிறிய காண்டிராக்டராக இருந்து, நாங்குனேரியில் ஒரு வாய்க்கால் வேலையில் எல்லை மீறி மோசடி செய்ததால் காண்டிராக்டர் என்ற உரிமமே ரத்து செய்யப்பட்ட நபர்தான் பி.ஆர்.பழனிச்சாமி.
 
இன்று பி.ஆர்.பழனிச்சாமிக்கு மேலூர் வட்டத்தில் மட்டுமின்றி, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், கோவை, நாமக்கல்,சேலம், கரூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் 1500 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், தேனியில் மட்டும் 700 ஏக்கர் என்றும் பத்திரிகை செய்திகள் கூறுகின்றன.