ஜியோவுக்கு போட்டியாக டிவி ஒளிபரப்பில் களமிறங்கும் ஆப்பிள்: ஒரு வருட சந்தா இலவசம்!
இதுநாள் வரை கணினி மற்றும் மொபைல் விற்பனையில் சாதனை படைத்து வந்த ஆப்பிள் நிறுவனம் தற்போது கேமிங் மற்றும் டி.வி ஒளிபரப்பில் களம் இறங்குகிறது.
தற்போது இந்தியாவில் இணைய வழி டிவி சேவைகள் அதிகரித்து வருகின்றன. பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ போன்றவை இந்த இணைய வழி டிவி சேவைகளை போட்டி போட்டு கொண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தி வருகின்றனர். ஜியோ ஜிகாஃபைபர், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆகியவை இந்தியாவில் அறிமுகமாகியிருக்கும் நிலையில் இந்தியா உட்பட உலகமெங்கும் இணைய டிவி சேவையில் களம் இறங்குகிறது ஆப்பிள் நிறுவனம்.
ஆப்பிள் நிறுவனத்தின் 2019ம் ஆண்டிற்கான சிறப்பு ஆலோசனை கூட்டத்தில் ஆர்காட் கேமிங் மற்றும் ஆப்பிள் டிவி ப்ளஸ் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆர்காட் கேமிங் மூலம் ஆப்பிள் நிறுவனத்தால் ஸ்பெஷலாக அளிக்கப்படும் சிறந்த அனிமேஷன் கேம்கள் பலவற்றை விளையாட முடியும்.
அதேபோல ஆப்பிள் டிவி ப்ளஸ் சேனல் சேவை உலகம் முழுக்க 100 நாடுகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதில் இந்தியாவும் அடக்கம். ஐ போன், ஐ பாட் போன்ற ஆப்பிள் சாதனங்களிலும், ஸ்மார்ட் ட்விக்களிலும் இந்த சேவையை பெற முடியும். மற்ற நிறுவனங்களால் வழங்க முடியாத சிறப்பு சேனல்களை வழங்குவதோடு, நெட்பிளிக்ஸ் போல சுயமாக இணைய தொடர்களை தயாரித்து வெளியிடவும் இருக்கிறது ஆப்பிள் டிவி ப்ளஸ்.
4கே எச்டிஆர் குவாலிட்டியில் இயங்கும் இந்த டிவிக்கு செட் டாப் பாக்ஸ் மற்றும் வாய்ஸ் கண்ட்ரோல் ரிமோட் வசதியையும் அளிக்கிறது ஆப்பிள்.
இந்த அப்ளிகேசனை உபயோகிப்பவர்களுக்கு முதல் 7 நாட்களுக்கு சேவை இலவசமாக அளிக்கப்படும். அதற்கு பிறகு இந்திய ரூபாயில் மாதம் 99 ரூபாய் கட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 6 மாதங்கள் அல்லது 1 வருடத்திற்கு சப்ஸ்க்ரைப் செய்தால் சிறப்பு சலுகைகள் உண்டு.
மேலும் புதிதாக ஆப்பிள் ஐ போன், ஐ பாட், ஆப்பிள் டிவி போன்றவற்றை வாங்குபவர்களுக்கு ஒரு வருடம் சந்தா இலவசம் என்ற அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது ஆப்பிள் நிறுவனம்.