வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. ஐ‌பிஎ‌ல்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : திங்கள், 26 மே 2014 (12:48 IST)

ராஜஸ்தானை வீழ்த்தி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி மும்பை அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு கடைசி லீக் ஆட்டம் அரங்கேறியது. ‘பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைவது யார்?’ என்பதை நிர்ணயிக்கும் வகையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும், முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்சும் மோதின. மும்பை அணியில் டீ லாங்குக்கு பதிலாக கோரி ஆண்டர்சன் சேர்க்கப்பட்டார்.

டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் ராஜஸ்தானை பேட் செய்ய அழைத்தார். கேப்டன் ஷேன் வாட்சனும், விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். சாம்சன் பேட்டிங்கில் வேகம் காட்ட, வழக்கத்திற்கு மாறாக தட்டுத்தடுமாறி பந்துகளை வீணடித்த வாட்சன் 8 ரன்னில் (18 பந்து) கேட்ச் ஆனார்.

இதைத் தொடர்ந்து சஞ்சு சாம்சனும், கருண் நாயரும் கூட்டணி அமைத்தனர். 10 ஓவர்களில் ராஜஸ்தான் ஒரு விக்கெட்டுக்கு 59 ரன்களே எடுத்திருந்தது. இதன் பிறகு தான் பேட்டிங் சூடுபிடித்தது. கோபால் ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய கருண் நாயர், ஓஜாவின் ஓவரிலும் சிக்சரும், 2 பவுண்டரியும் போட்டு தாக்கினார். இதனால் ஸ்கோர் கிடுகிடுவென எகிறியது. ஸ்கோர் 136 ரன்களாக உயர்ந்த போது, கருண் நாயர் 50 ரன்களில் (27 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழந்தார். இவர்கள் இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 102 ரன்கள் திரட்டியது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஓவரில் சஞ்சு சாம்சனும் (74 ரன், 47 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) வெளியேறினார். ஐ.பி.எல். போட்டியில் அவரது அதிகபட்ச ரன் இதுவாகும்.

இதன் பிறகு பிராட் ஹாட்ஜிம், ஜேம்ஸ் பவுல்க்னெரும் இணைந்து இறுதி கட்டத்தில் ஸ்கோரை உயர்த்துவதில் கன கச்சிதமாக செயல்பட்டனர். ஹர்பஜன்சிங் ஓவரில் 2 சிக்சர்களை பறக்க விட்டு மிரள வைத்த பவுல்க்னெர் (23 ரன், 12 பந்து, 3 சிக்சர்) கடைசி ஓவரில் கேட்ச் ஆனார். 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. ஹாட்ஜ் 29 ரன்களுடன் (16 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் நின்றார்.

பின்னர் 14.3 ஓவர்களில் 190 ரன்கள் இலக்கை எட்டினால் மட்டுமே ரன்ரேட் அடிப்படையில் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் மும்பை பேட்ஸ்மேன்கள் விளையாடினர். தொடக்க வீரர்கள் சிமோன்ஸ் 12 ரன்னிலும், மைக் ஹஸ்சி 22 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர்.

இதைத் தொடர்ந்து ஆட வந்த கோரி ஆண்டர்சன் (நியூசிலாந்து), திடீரென விசுவரூபம் எடுத்தார். பந்துகளை சிக்சரும், பவுண்டரியுமாக மைதானத்தின் நாலாபுறமும் துரத்தியடித்துக் கொண்டே இருந்தார். அவரை கட்டுப்படுத்த வழிதெரியாமல் ராஜஸ்தான் பவுலர்கள் பரிதவித்தனர். இதற்கு இடையே பொல்லார்ட் 7 ரன்னிலும், கேப்டன் ரோகித்ஷர்மா 16 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

இருப்பினும் கோரி ஆண்டர்சனின் சூறாவளி பேட்டிங்கால் ஆட்டத்தில் பரபரப்பு உருவானது. பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற கடைசி 3 பந்தில் 9 ரன் தேவைப்பட்டது. இதில் முதல் பந்தில் ஆண்டர்சன் ஒரு ரன்னும், 2-வது பந்தில் அம்பத்தி ராயுடு சிக்சரும் அடித்தார். கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்ட போது, அம்பத்தி ராயுடு (30 ரன், 10 பந்து) ஒரு ரன் எடுத்து விட்டு 2-வது ரன்னுக்கு ஓடிய போது ரன்-அவுட் ஆனார். 14.3 ஓவர்களில் மும்பையின் ஸ்கோரும் 189 ரன் என்று சமன் ஆனதால் யாருக்கு வாய்ப்பு என்று குழப்பம் ஏற்பட்டது.

இதன் பின்னர் அடுத்த பந்தில் பவுண்டரி அடித்தால் மும்பைக்கு வாய்ப்பு என்று அறிவிக்கப்பட்டது. பவுல்க்னெர் வீசிய அந்த பந்தை புதிதாக களம் கண்ட ஆதித்ய தாரே சிக்சருக்கு தூக்கி, ரசிகர்களின் கரகோஷத்தால் மைதானத்தை அதிர வைத்தார்.

மும்பை அணி 14.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 14 புள்ளிகளுடன் பிளே-ஆப் சுற்றை உறுதி செய்தது. கோரி ஆண்டர்சன் 95 ரன்களுடன் (44 பந்து, 9 பவுண்டரி, 6 சிக்சர்) களத்தில் இருந்தார். ராஜஸ்தான் அணி பரிதாபமாக வெளியேறியது.

முன்னதாக தொடர்ச்சியான தோல்விகளால் பிளே-ஆப் சுற்று வாய்ப்பு மும்பைக்கு மங்கிய போது, சில சாதகமான முடிவுகள் அமைந்ததால் அந்த அணிக்கு கடைசி நாளில் நல்ல வாய்ப்பு அமைந்திருக்கிறது.