வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Suresh
Last Updated : திங்கள், 4 மே 2015 (08:18 IST)

ஐபிஎல்: பஞ்சாப் சொதப்பல்; மும்பை அணி வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்டின்  35 ஆவது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி  மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது.


 

 
ஐபிஎல் கிரிக்கெட்டில் மொகாலியில் நடந்த 35 ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்சும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதின.
 
பஞ்சாப் அணியில் மனன் வோரா, ஷான் மார்ஷ், திசரா பெரேரா, ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக எம்.விஜய், மேக்ஸ்வெல், மிட்செல் ஜான்சன், கரண்வீர்சிங் சேர்க்கப்பட்டனர்.
 
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு லென்டில் சிமோன்சும், விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேலும் சிறப்பான தொடக்கம் தந்தனர். மிட்செல் ஜான்சனின் பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்ட பார்த்தீவ் பட்டேல் அவரது ஓவர்களில் 2 பவுண்டரி, 2 சிக்சரும் விளாசினார்.
 
13 ஆவது ஓவரில் அணியின் ஸ்கோர் 111 ரன்களை எட்டிய போது, பார்த்தீவ் பட்டேல் 59 ரன்களில் (36 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து வந்த ரோகித் சர்மா 26 ரன்களில் (20 பந்து, 2 பவுண்டரி) ஆட்டம் இழந்தார்.
 
மற்றொரு தொடக்க வீரர் சிமோன்ஸ் 71 ரன்களில் (56 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) கடைசி ஓவரில் கேட்ச் ஆனார். 20 ஓவர் முடிவில் மும்பை அணி 3 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. 
 
இதைத் தொடர்ந்து, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணி ஆடியது. ஷேவாக் (2 ரன்), மேக்ஸ்வெல் (12 ரன்) சொற்ப ரன்களில் நடையை கட்டினர்.
 
பின்னர் களமிறங்கிய முரளி விஜய் (39 ரன், 34 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), டேவிட் மில்லர் (43 ரன், 37 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். கேப்டன் ஜார்ஜ் பெய்லி (21 ரன்) உள்பட 3 வீரர்கள் ரன்–அவுட் ஆனதும் பஞ்சாப் அணி தொய்வைக் கண்டது.
 
170 ரன்களுக்கு மேலான ஸ்கோரை அதிக முறை சேசிங் செய்த அணி என்ற சிறப்புக்கு உரிய பஞ்சாப் அணியால் இந்த முறை 20 ஓவர்களை முழுமையாக ஆடிய போதிலும் 7 விக்கெட்டுக்கு 149 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.