17ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உங்கள் வெப்துனியா!


லெனின் அகத்தியநாடன்| Last Updated: வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (09:01 IST)
இந்திய மொழி இணையத்தளங்களில் தனக்கென்று ஒரு இடத்தை தரத்துடன் பிடித்து, நம்பகத்தன்மையுடன் இன்று வரை உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களிடையே தமிழ்.வெப்துனியா.காம் [http://tamil.webdunia.com/] பரவியிருக்கிறதென்றால் அதற்குக் காரணமாக இருந்துவரும் எமது இணையவாசிகளான உங்களுக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம்.
 
 
 
2000வது ஆண்டில் சித்திரைப் புத்தாண்டுத் தினத்தன்று துவக்கப்பட்ட வெப்உலகம்.காம் எனும் எமது பன்முகத்தன்மை கொண்ட இணையத்தளம், வணிக ரீதியான சோதனைகள் பலவற்றைத் தாண்டி இன்றுவரை தொடர்ந்து நீடித்து வருவதற்கு உங்களின் எல்லையில்லா ஊக்கமும், அபிமானமும், ஆதரவுமே காரணம் என்பதை நாங்கள் நன்கு உணர்ந்துள்ளோம்.
 
17ஆண்டுகளுக்கு முன்னர் வெப்உலகம்.காம் என்றிருந்த எமது இணையத் தளம், தமிழ்.வெப்துனியா.காம் என்று பெயர் மாற்றம் பெற்றது. அதுவரை 4 இந்திய மொழிகளில் - தமிழ், இந்தி, மலையாளம்,  தெலுங்கு - மொழிகளில் மட்டுமே வந்த எமது இந்திய மொழி இணையத் தளங்கள், கன்னடம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, வங்காளி மொழிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் 9 இந்திய மொழிகளில் இணையத் தளங்களை வழங்கும் ஒரே நிறுவனமாக எமது வெப்துனியா உயர்ந்தது.
 
அதற்கேற்றார் போல வாசகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கின்ற வரையிலே, நாங்கள் வாசகர்களாகிய உங்களுக்கு செய்திகள் மட்டுமின்றி ஆன்மீகம், இலக்கியம், மருத்துவம், தொழில்நுட்பம், வணிகள், சமையல் குறிப்புகள் மற்றும் சுற்றுலா என அனைத்து துறைகளிலும் இயன்ற அளவிற்கு சிறப்பான வகையிலே வழங்கி வருகிறோம் என்று நம்புகிறோம்.
 
தமிழ்நாட்டுச் செய்திகள் மற்றுமின்றி தேசிய செய்திகளையும், உலகச் செய்திகளையும் வழங்கி வருவதோடு, நடப்பு நிகழ்வுகளின் பல முக்கிய பிரச்சனைகளை ஆழத்துடன் அலசி ஆராய்ந்து, அழுத்தமான  விவரங்களை தமிழ்.வெப்துனியா.காம் வாசகர்களுக்கு வழங்கி வருகிறது. செய்திகளை மட்டுமே கொடுத்துவிட்டு கடமை முடிந்தது என்று நிறுத்திக் கொள்ளாமல், செய்திகள் மற்றும் நிகழ்வுகளின்  பின்னணியை ஆழமாக ஆராய்ந்து அதனை வாசகர்களின் பார்வைக்கு தமிழ்.வெப்துனியா.காம் வைத்து வருகிறது.
 
வெப்துனியா.காம் விளையாட்டிற்கு எப்போதும் முக்கியத்துவம் அளித்துவரும் என்பதை அறிவீர்கள். ஒலிம்பிக் போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள், உலக கால்பந்து போட்டிகள் மற்றும் உலகக்கோப்பை கிரிக்கெட் முதல் ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகள் வரை அனைத்தையும் உடனுக்குடன் எமது நிறுவனம் வாசகர்களுக்கு வழங்கி வருகிறது.
 
ரசிகர்களின் பொழுதுபோக்கினை சிறப்பானதாக்குகின்ற வகையிலே சினிமா பகுதி மிக விரிவுபடுத்தப்பட்டு நட்சத்திரப் பேட்டிகள், சினிமா விமர்சனம், சினிமா கிசுகிசு, சினி பாப்கார்ன், மறக்க முடியுமா, சினிமா ஆல்பங்கள், பாக்ஸ் ஆபிஸ் மற்றும் பாலிவுட், ஹாலிவுட் சினிமா செய்திகளை வழங்கி வருகிறோம்.
 
இவ்வாறு, வாசகர்களாகிய உங்களுக்கு ஒவ்வொரு துறையிலும் மிகுந்த ஈடுபாடு மற்றும் கவனத்துடன் தகவல்களை வழங்கு வரும் தமிழ்.வெப்துனியா.காம் இனி வரும் ஆண்டில் மேலும் பல பயனுள்ள விவரங்களை கூடுதலாக உங்களுக்கு வழங்கும் என்பதை மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 
வாசகர்களாகிய உங்களுக்கு, மேலும் மேலும் சிறப்பான வகையிலே உலக நிகழ்வுகள் அனைத்தையும், இணையத்தின் வழியே தொடர்ந்து வழங்க, உங்களின் ஈடு, இணையற்ற ஆதரவையும், ஊக்கத்தையும் நாங்கள் வேண்டுகிறோம். தமிழில் உண்மையான ஒரு பன்முகத் தளமாக தமிழ்.வெப்துனியா.காம் என்றென்றும் நீடிக்கும் என்பதை இந்த நேரத்தில் நன்றியுடன் கூறிக்கொள்கிறோம்.


இதில் மேலும் படிக்கவும் :