ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. இலக்குவனார் திருவள்ளுவன்
Last Updated : சனி, 25 அக்டோபர் 2014 (16:39 IST)

இயலிசை நாடகச் செல்வர், இலட்சிய நடிகர் இராசேந்திரன்

தமிழ்த் திரையுலகம், புகழ்மிகு கலைஞர்கள் பலரைத் தந்துள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி நடிகர்கள் தமிழ்த் திரைப்படங்களில் பங்கேற்றுப் புகழ் பெற்று வந்த காலத்தில் தனக்கெனத் தனி முத்திரை பதித்து இலட்சிய நடிகரானவர் இராசேந்திரன். நடிகர் திலகம், மக்கள் திலகம் ஆகிய இருவரும் உச்சத்தில் இருந்த பொழுது இருவருடன் இணைந்தும் தனித்தும் நடித்துத் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவர். அவ்விருவருடனும் இணைந்து நடித்தது என்பது அவ்விருவரின் பண்பையும் இலட்சிய நடிகரின் பண்பையும் விளக்கும். பாடல் எழுதியும் பாடியும் நடித்தும் இயலிசை நாடகச் செல்வராக உயர்ந்தவர் இலட்சிய நடிகர் இராசேந்திரன்.
 
எசு.எசு.ஆர். (S.S.R.) என்று அழைக்கப்பெற்ற சேடப்பட்டி சூரியநாராயண(த்தேவர்) இராசேந்திரனான இலட்சிய நடிகர் (1928 - 2014), சூரியநாராயணன், ஆதிலட்சுமி இணையரின் மகனாவார். தந்தை கல்வித் துறையில் பணியாற்றி வந்தார்; எல்லாத் தந்தையரும் தத்தம் பணியைத் தம் மக்கள் தொடங்க வேண்டும் என எண்ணுவதே இயற்கை. அதுபோல இவர் தந்தையும் தன் மகன் அரசு அதிகாரியாக வர வேண்டும் என விரும்பினார். ஆனால், இராசேந்திரனிடம் புதைந்து கிடந்த கலை ஆர்வம் அவரைத் திசை திருப்பிவிட்டது.
 
குறைந்த அகவையிலேயே 5ஆவது வகுப்பை முடித்த இவருக்கு 6ஆவது வகுப்பில் சேர்வதற்கு மேலும் ஓராண்டு காத்திருக்க வேண்டி வந்தது. வீ்ட்டில் வீணாக இருக்க வேண்டா எனக் கருதிய தந்தையின் நண்பர், புளியமாநகர் சிறுவர் நிறுவனத்தில் (பாய்சு கம்பெனியில்) இவரைச் சேர்த்தார். பி.கே.சுப்பா (ரெட்டியார்) என்பவரால் நடத்தப்பெற்ற தென்தமிழ் நாட்டில் புகழ்பெற்ற நாடகக் குழு இது. அங்கு `வீரஅபிமன்யு' நாடகத்தில் நடித்தார். அதன் பின்னர் மீண்டும் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார்.
 
"ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது" என்பார்கள் அல்லவா? இவருக்கும் இதுதான் உண்மையாயிற்று. மாயவரம் கிருட்டிணமூர்த்தி தியாகராச பாகவதர் என்னும் எம்.கே. தியாகராச பாகவதர் நடித்த ‘சிந்தாமணி’ படம், 1937இல் வெளிவந்து பெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. எசு.எசு.ஆர். மனத்தில், இப்படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இக்கதை இவர் படித்த பள்ளியில் நாடகமாகப் போடப்பட்டது. அப்பொழுது இவரே கதாநாயகனாக நடித்து முதல் பரிசு பெற்றார். நாடகத்தை நடத்திய ஆசிரியர் அழகும் நடிப்புத் திறமையும் உள்ளமையால், திரை உலகிற்குச் சென்றால் புகழ் பெறலாம் என்றார். அவரே, தம் செலவில் மதுரைக்கு அனுப்பி நாடக நிறுவனத்தில் சேரவும் வைத்தார்.
 
மதுரைக்குச் சென்ற எசு.எசு.ஆர்., முத்தமிழ்க் கலா வித்துவ இரத்தின சபை என்னும் டி.கே.எசு. நாடக அவையில் சேர்ந்தார். அங்கு முதலில் "சிவலீலா'' நாடகத்தில் காவலாளி வேடமே கிடைத்தது. அதன் பிறகு "மகாபாரதம்'' நாடகத்தில் சகாதேவனாக நடிக்கத் தொடங்கினார் (இதில், திரௌபதியாகப் பெண் வேடத்தில் நடித்தவர் ஏ.பி.நாகராசன்).
 
ஒருநாள் நாடக அவை நடத்தும் ஔவை சண்முகம் உடல் நலக் குறைவால் நடிக்க முடியாமல் போயிற்று. ஆனால், அன்று இரவே சிவலீலா நாடகம் நடத்தியாக வேண்டும். அப்பொழுதெல்லாம் யார், எந்த வேடத்தில் நடித்தாலும் பிற வேடங்களுக்குரிய உரையாடல்களும் நன்கு தெரிந்து வைத்திருந்தனர். எனவே, அவசர நேரத்தில் மாற்றாள் எளிமையாகக் கிடைப்பார். ஆனால், நிறுவனர் நடிக்கும் கதை நாயகன் செண்பகப்பாண்டியன் வேடத்திற்கு அல்லவா ஆள் தேவை! தொலைநோக்குப் பார்வை உடைய ஔவை சண்முகம் தேர்ந்தெடுத்தது 15 அகவை உடைய இராசேந்திரனைத்தான். குழுவினரின் கருத்தும் இதுவாகவே இருக்க வேறு மறுப்பு இல்லை. கதைநாயகனாக நடித்து ஒரே இரவில் நட்சத்திர நடிகரானார் இலட்சிய நடிகர்.
 
மேலும்

இவரின் நடிப்பைப் பார்த்த இவரின் தந்தையும் தன் மகன் சிறப்பாக நடிப்பதால் அவன் விருப்பத்திற்கேற்ப நடிப்புலகில் உலவட்டும் என்று விட்டு விட்டார். இராசேந்திரனுக்குத் தந்தையின் இந்த மனப்பூர்வமான இசைவு ஊக்கத்தைத் தந்தது. இராசேந்திரனின் தோற்றப் பொலிவும் தெளிவான தமிழ் ஒலிப்பும் பலரையும் கவர்ந்தது.
 
நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது  தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் பேச்சுகளால் ஈர்க்கப்பட்டார். 19-11-1943இல் ஈரோட்டில் `சந்திரோதயம்' நாடகத்தை நடத்த அறிஞர் அண்ணா வந்திருந்தார். அறிஞர் அண்ணாவிற்கு எசு.எசு.ஆர்.தான் ஒப்பனை செய்தார். இதன் மூலம் அறிஞர் அண்ணாவுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. தந்தை பெரியாருடனும் தொடர்பு ஏற்பட்டுத் தன்மதிப்பு, பகுத்தறிவு முதலான கொள்கைகளில் ஈடுபாடு காட்டினார்.
 
திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்திற்கேற்ப ‘அபிமன்யு’ என்னும் படத்தில் அபிமன்யுவாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால்,  டி.கே.எசு. நாடகக் குழுவின் ஒப்பந்தப்படி மேலும் 7 மாதம்  நடிக்க வேண்டியிருந்ததால் வாய்ப்பு பறிபோனது. (இப்படத்தில் அபிமன்யுவாக எசு.எம்.குமரேசனும் அருச்சுனனாக எம்ஞ்சியாரும் நடித்தனர்.)
 
அதன் பிறகு சேலம் மூர்த்தி பிக்சர்சின் "ஆண்டாள்'' படத்தில் எசு.எசு.ஆர். "இன்ப உலகிலே மன்மதன் பூங்கணை'' என்ற பாடலைப் பாடி, பின்னணிப்  பாடகராக அறிமுகமானார்.
 
பின்னர் இராசேந்திரன், திரைப்பட நடிப்புத் துறையிலும் கால்பதித்து வெற்றிக் கொடி நாட்டினார். ஆசை அலைகள், ஆலயமணி, அல்லி, அல்லி பெற்ற பிள்ளை, அம்மையப்பன், ஆனந்தி, அன்பு எங்கே, அவன் பித்தனா?, தெய்வப் பிறவி, தெய்வத்தின் தெய்வம், இளமை, இரட்டை மனிதன், காக்கும் கரங்கள், கை கொடுத்த தெய்வம், கைதியின் காதலி, கல்யாணிக்குக் கல்யாணம், காஞ்சித் தலைவன், காட்டு ரோசா, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, குமுதம், சிரீ ஆண்டாள், பைத்தியக்காரன், மகனே கேள், மாமியார் மெச்சிய மருமகள், மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே, மணப்பந்தல், மணிமகுடம், மனோகரா, மறக்க முடியுமா? முதலாளி, முத்து மண்டபம், நானும் ஒரு பெண், நாட்டுக்கு ஒரு நல்லவன், நீங்காத நினைவு, ஓடி விளையாடு பாப்பா, பச்சை விளக்கு, படித்த மனைவி, பணம், பணம் பந்தியிலே, பராசக்தி, பழனி, பெண்ணை வாழ விடுங்கள், பெற்ற மகனை விற்ற அன்னை, பெற்ற மனம், பிள்ளைக் கனியமுது, பூமாலை, பூம்புகார், பிரசிடெண்டு பஞ்சாச்சரம், புதுமைப் பெண், புதுவயல், இராசா தேசிங்கு, இராசாளி, இராசா இராணி, இரத்தக் கண்ணீர், சங்கிலித் தேவன், சாரதா, சிவகங்கைச் சீமை,  சொர்க்கவாசல், சிரீ ஆண்டாள், தை பிறந்தால் வழி பிறக்கும், தலை கொடுத்தான் தம்பி, தங்க ரத்தினம், தங்கத்தின் தங்கம், தேடிவந்த செல்வம், தேடிவந்த தெய்வம், தேடிவந்த திருமகள், தீக்குச்சி, திருடர்கள் சாக்கிரதை,  உல்லாசப் பயணம், உத்தமி பெற்ற இரத்தினம், வானம்பாடி, வழிகாட்டி, வழி பிறந்தது, வீரத் தளபதி வேலுத்தம்பி என ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
 
இப்படங்களுள் இவர், பைத்தியக்காரன் (1947)என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்துத் திரையுலகில் நடிப்புத் துறையில் காலடி எடுத்து வைத்தார்.  பின்னர், சிரீ ஆண்டாள் (1948) முதலான படங்களில் சிறு சிறு வேடங்களில் தோன்றினார். என்றாலும் நேசனல் பிக்சர்சு பெருமாள் (முதலியார்), ஏவி.எம்.முடன் கூட்டு சேர்ந்து உருவாக்கிய "பராசக்தி'' தான் இவரது முதல் படமாகப் புகழ் தந்தது. கலைஞர் கருணாநிதி திரைக்கதை, உரையாடலை எழுதிய இந்தப் படத்தில் சிவாசிகணேசனுடன், எசு.எசு.இராசேந்திரன் ஞானசேகரன் என்ற பாத்திரத்தில் அறிமுகமானார். நடிகர் திலகம் போலவே தெளிவாகவும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தியும் சிறப்பாகப் பேசியதால் அனைவராலும் கவரப்பட்டார்.
 
இலட்சிய நடிகர் நடித்து 1957இல் வெளிவந்த ‘முதலாளி’ படம் மூலம், முக்தா சீனிவாசன் இயக்குநரானார். ஏரிக்கரை மேலே போறவளே பொன் மயிலே முதலான பாடல்களும் வெற்றிக்கு உதவின. 'பராசக்தி'க்குப் பிறகு நல்ல வாய்ப்பு கிட்டாமல் இருந்த இராசேந்திரனுக்கு இப்படம் புகழ் உச்சியைத் தந்தது.
  மேலும்

புலவர் அ.கு.வேலன் ஆக்கத்திலும் இயக்கத்திலும் இலட்சிய நடிகர் நடித்து வெளிவந்த ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ (1958) பெருமளவு வெற்றி பெற்றது. இப்படத்தில் இடம் பெற்ற தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம், ஏர் முறைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை முதலான பாடல்கள் இன்றும் இளைய தலைமுறையினராலும் விரும்பப்படுகின்றன. இப்படத்தின் மாபெரும் வெற்றியால். அ.கு.வேலன், அருணாசலப் படநிலையத்தை அமைத்தார்.
 
இவர் நடித்த ‘சாரதா’ (1962) படம் பெரும் வெற்றியைத் தந்தது. 'ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்...' 'கண்ணானால் நான் இமையாவேன்', 'மணமகளே மருமகளே வா...வா' போன்ற இப்படப் பாடல்கள், திரை நேயர்கள் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்று இன்றும் ஒலிக்கின்றன. இப் படத்திற்குத் தேசிய விருதுக்கான சான்றிதழ் கிடைத்தது. இதனை உருவாக்கிய  கோபாலகிருட்டிணனும் புகழ் பெற்றுச் 'சாரதா பட நிலைய'த்தை அமைத்தார்.
 
தங்க ரத்தினம், அல்லி, மேனாள் முதல்வர் செயலலிதா நடித்த மணிமகுடம் முதலான படங்களுக்குக் கதை உரையாடல் அமைத்து இயக்கியுள்ளார்.  “துன்பம் தீராதோ” முதலான திரைப்படப் பாடல்களும் எழுதி உள்ளார். 
 
மேற்குறித்தவற்றுள் பூம்புகார், இரத்தக் கண்ணீர், குலதெய்வம், சிவகங்கைச் சீமை, காக்கும் கரங்கள், பூமாலை, காஞ்சித் தலைவன் முதலான பல படங்கள் வெற்றி விழா கண்டவையாகும். இவர் திரையுலகில் இருந்து ஒதுங்கிய நிலையிலும் இன்றைய தலைமுறை நடிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்களுடனும் நடித்துள்ளார்.
 
நாடகம் மூலம் திரையுலகிற்கு வந்தவர்களுக்கு நாடகம் மீது தணியா வேட்கை இருக்கும். இலட்சிய நடிகருக்கும் அந்த வேட்கை இருந்தது. எனவே, “எசு.எசு.ஆர். நாடக மன்றம்”  தொடங்கினார். அறிஞர் அண்ணாவின் "ஓர் இரவு'', "சந்திரமோகன்'', கலைஞர் மு.கருணாநிதி எழுதிய "அம்மையப்பன்'', பழ.நெடுமாறனின் "தென்பாண்டி வீரன்" ஆகிய நாடகங்களையும் நடத்தினார். ஆயிரத்திற்கு மேற்பட்டு நாடகம் நடத்திய பெருமை இவருக்கு உண்டு. 
 
இவர் நாடகங்களில் அறிமுகமாகித் திரை உலகில் புகழ் பெற்றவர்களில் குறிப்பிடத் தகுந்தவர்கள், எம்.என்.இராசம், முத்துராமன், மனோரமா. சீலா ஆகியோராவர். ஒருமுறை மும்பை சண்முகா அரங்கத்தில் இவர் நாடகத்தைப் பார்த்த இந்திப் பட உலகின் மன்னர்கள் இராசுகபூரும் பிரிதிவிராசு கபூரும் இவரைப் பாராட்டிச் சிறப்பித்தனர்.
 
கலையுலகில் இருந்து அரசியலில் கால் பதித்து வெற்றி கண்டவர். 1962இல் தி.மு.க.சார்பில் தேனிச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவில் முதல்முதலில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இலட்சிய நடிகர்தான். ஆனால், இன்றைக்கு அதுதான், ஒவ்வொரு நடிகரையும் தமிழக முதல்வராகக் கனவு காணும் அளவிற்கு உயர்த்திவிட்டது. 1970 முதல் 1976 வரை தி.மு.க.வின்  நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். 

செப்.1970இல் மன்னர் நல்கை ஒழிப்புத் திருத்த வரைவு (Constitution Amendment Bill to abolish privy purses)  மாநிலங்களவையில் வாக்கெடுப்பிற்கு வந்த பொழுது இவர் இயற்கை அழைப்பால் வெளியேறினார்; இதனால் இச்சட்டம் ஒரு வாக்கு வேறுபாட்டில் தோற்கடிக்கப்பட்டது. இது இவரது வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாகும். அ.தி.மு.க.வில் சேர்ந்த பின், 1981இல் ஆண்டிப்பட்டிச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது வழியில் அரசியலில் இறங்கிய இவர் மகன் இராசேந்திரகுமார், 1991இல் செங்கல்பட்டுத் தொகுதியில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மேலும்

திரைப்படங்களில் இலட்சிய நாயகனாக நடித்ததுடன், வாழ்க்கையிலும் இலட்சியத்தைக் கடைப்பிடித்தார். புராணப் படங்களில் நடிக்க மறுத்தார். இதனால் நல்ல வாய்ப்புகளை இழந்தாலும் இலட்சிய நடிகர் என்று பெயர் பெற்றுப் புகழடைந்தார்.
 
“நான் வந்த பாதை” என்னும் தன் வரலாற்று நூலை எழுதி வெளியிடாமல் வைத்திருந்தார். இனியேனும் அதனை வெளிக் கொணர்வது புதுமுகங்களுக்கு வழிகாட்டியாக அமையும்.
 
பேரறிஞர் அண்ணா மறைந்த பின்னர், நிதிச் சிக்கலில் இருந்த இராணி அண்ணாதுரைக்கு மாதம் 5,000 உரூபாய் பணம் அனுப்பி வந்தார். அவர்களின் வளர்ப்பு மகன் மரு. பரிமளம், நான் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டேன், அனுப்ப வேண்டா எனச் சொல்லும் வரை அனுப்பியிருந்துள்ளார். இவரின் உதவும் பெருந்தன்மையையும் தேவையின்றி உதவி பெற விரும்பா அறிஞர் அண்ணா அவர்களின் குடும்பத்தாரின் பண்பையும் இது நமக்கு விளக்குகிறது. அது மட்டுமா? தலைவரின் குடும்பம் இன்னலில் இருக்க, இன்பத்தில் திளைக்கும் பிற தொண்டர்களின் செயலையும் உணர்த்துகிறது.
 
தமிழக அரசின் பாகவதர் விருது, கலைமாமணி விருது, சிறந்த நடிகருக்கான விருது, குடியரசுத் தலைவர் விருதுகள் முதலான பல்வேறு விருதுகளை இலட்சிய நடிகர் பெற்று இருக்கிறார். இவர் முயற்சியால் தென்னிந்திய நடிகர் சங்கம் உருவானது. சிறுசேமிப்புத் துறை துணைத் தலைவராகப் பதவி வகித்தார். நடிகர் சங்கத் தலைவராக இருந்தும் சிறப்பான பணியாற்றியுள்ளார்.
 
மருதுபாண்டியர் புகழ் பரப்பி வந்த இலட்சிய நடிகர் மருதுபாண்டியர் 212ஆம் நினைவுநாளான அக்.24, 2014 அன்று இவ்வுலக வாழ்வை நீத்துள்ளார். தமிழ் ஒலிப்பில் தனி முத்திரை பதித்துக் கணீர் குரலில் மக்களைக் கவர்ந்த இலட்சிய நடிகர் சே.சூ.இரா. என்னும் எசு.எசு.ஆர். (S.S.R.) மறைவிற்குத் திரை உலகம் கண்ணீர் வடித்தது. திரை உலகம் மட்டுமல்ல, சீர்திருத்த எண்ணம், பகுத்தறிவுச் சிந்தனை கொண்டோரும் பொது மக்களும் இவர் புகழ் நினைவைப் போற்றுகின்றனர். 
 
நாடக நடிகர், திரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர், திரைப்படப் பாடலாசிரியர், கதை உரையாடல் எழுதுநர், நாடக அமைப்பாளர், நாடக இயக்குநர், திரைப்பட இயக்குநர், திரைப்பட வெளியீட்டாளர், திரைப்பட உருவாக்குநர், திரைப்பட நிலைய உரிமையாளர், சொற்பொழிவாளர், கொள்கை பரப்புநர், சட்ட மன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், பிறர்க்கு உதவும் பெருந்தகைமையர் எனப் பல வகையிலும் நாட்டு மக்களின் உள்ளத்தில் நீங்கா இடம் பெற்ற இயலிசை நாடகச் செல்வர் இலட்சிய நடிகர் இராசேந்திரன் புகழ் ஓங்கட்டும்!