Widgets Magazine

பயிற்சி மொழிப் போராளி, பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவு நாள் (செப்.3)

Author இலக்குவனார் திருவள்ளுவன்| Last Updated: செவ்வாய், 2 செப்டம்பர் 2014 (20:57 IST)
அனைத்து நாட்டுக் கல்வியாளர்களும் தாய்மொழிக் கல்வியையே வலியுறுத்துகின்றனர். அதற்கேற்பவே அனைத்து நாடுகளிலும் தாய்மொழிக் கல்வியே நிலவுகிறது. தமிழ்நாட்டுக் கல்வியாளர்களும் அறிஞர்களும் தமிழ்வழிக் கல்வியையே வற்புறுத்துகின்றனர். ஆனால், கல்வியாளர் என்ற போர்வையில் கல்வி வணிகம் செய்வோரும் தமிழ்நாட்டில் செல்வாக்குப் பெற்றுள்ள பிற மொழியாளரும் ஆங்கில மொழிவழிக் கல்வியையும் இந்தி, சமற்கிருதம் முதலான மொழிக் கல்வியையுமே நடைமுறைப்படுத்தி விற்று வருகின்றனர். தாம் வாழ்ந்த காலத்தில் தமிழ்வழிக் கல்விக்காக ஒல்லும் வகையெலாம் அல்லும் பகலும் போராடித் ‘தமிழ்ப் பயிற்சி மொழிக் காவலர்’ எனப்
போற்றப் பெற்றவர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார். அவரது 41ஆவது நினைவு நாளான செப்தம்பர் 3இல் அவரது தமிழ்ப் பயிற்சி மொழி பற்றிய சிந்தனைகளை நினைவுகூர்வோம்!

தமிழே தமிழ்நாட்டில் முழுமையாக ஆட்சி செய்ய வேண்டும் என வாணாளெல்லாம் எழுதியும் பேசியும் பரப்புரை மேற்கொண்டும் போராடியும் வீரத் திருமகனாகத் திகழ்ந்தவர் பேராசிரியர் முனைவர் சி. இலக்குவனார். இத்தகைய பணிகளுள் குறிப்பிடத்தகுந்த ஒன்று இதற்கெனத் தமிழ்நாடு முழுவதும் தமிழ் உரிமைப் பெருநடைப் பயணம் மேற்கொள்வது எனத் திட்டமிட்டது. பெருநடைப் பயணம் தொடங்கும் முன் பேராசிரியர் சி.இலக்குவனார், இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்(D.I.R.)படித் தளையிடப்பட்டார். எனினும் அதுவரை அவர் மேற்கொண்ட முயற்சிகளும் அவரது சிறையிருப்பும் தமிழ் மக்களிடையே தமிழ்ப் பயிற்சி மொழியாகத் திகழ வேண்டியது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தின.

அதன்பின்னர் மாணவர் பெருமளவில் தமிழ்வழிக் கல்வியில் சேர்ந்தனர். இதனைத் தேர்தலில் வெற்றியாகத் தி.மு.க. அறுவடை செய்திருப்பினும் பேரறிஞர் அண்ணாவிற்குப் பிறகு மெல்ல மெல்ல ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம் ஆகியன நம் தலையில் அமர்ந்து கழுத்தை நெரிக்கும் அவல நிலை வந்துவிட்டது. முழுமையாகத் தமிழ் விரட்டுப்படும் பேரவல நிலைக்கு இன்று கல்வி முறை வந்துவிட்டது. இப்பொழுதேனும் நாம் விழித்தெழாவிட்டால் நமக்கு விடிவு என்றைக்கும் கிடையாது. இந்த நேரத்தில் தமிழ்ப் பயிற்சி மொழி குறித்த பேராசிரியர் சிந்தனைகளை நினைவுகூர்வது நமக்கு உரனாக அமையும்.
”கல்லூரிகளில் உடனே தமிழைப் பாடமொழியாக ஆக்கவேண்டியதன் இன்றியமையாமையை மக்களிடையே விளக்க வேண்டும். பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்களிடையே தமிழ் மூலம் படிப்பதனால் ஏற்படும் நன்மைகளையும் பிறமொழிகள் மூலம் படிப்பதனால் ஏற்படும் தீமைகளையும் எடுத்துச் சொல்ல வேண்டும். தமிழைப் பாடமொழியாகக் கொண்டு படிக்க வருவோர் தொகையை மிகுதிப்படுத்த வேண்டும். உயர்நிலைப் பள்ளிகளில் ஒரே காலத்தில் தமிழைப் பாடமொழியாக ஆக்கியதுபோல் கல்லூரிகளிலும் ஒரே சமயத்தில் எல்லாத் துறைகளிலும் எல்லா நிலைகளிலும் தமிழைப் பாட மொழியாக்க வேண்டும்” என்பனவற்றைப் பேராசிரியர் சி.இலக்குவனார் தமிழ் உரிமைப் பெருநடைப் பயணத்தில் அடிப்படை வேண்டுகோளாக வைத்தார்.
"தமிழைப் பயிற்று மொழியாக்குவதில் எவ்வகை ஆர்வமும் காட்டாததனால் தமிழ் தாழ்நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது" என வருந்தினார் பேராசிரியர் சி.இலக்குவனார்.

"உதட்டளவில் தமிழ்ப் பற்றைக் காட்டிவிட்டு உலகப் புகழ் பெற நாடுகின்றீர்கள். ஆனால், உயர் தமிழைப் பின்னுக்குத் தள்ளிவிட்டீர்கள். இப்பொழுதேனும் பிழையை உணர்ந்து திருந்த முற்படுங்கள். தமிழ்ப் பயிற்று மொழித் திட்டத்தை உடனே செயற்படுத்த முனையுங்கள்" என அரசியலாளரிடமும் ஆட்சியாளரிடமும் வேண்டுகோள் விடுத்தார்.
"மாணவர்களே! தமிழ் வழியாகப் பயிலுதலே எளிதும் இனிதுமாகும் என்பதை நீவீர் அறிந்திருந்தும் தமிழ்ப் பயிற்றுமொழி வகுப்புக்குப் பெருந்திரளாக வாராதிருப்பது உங்கள் தமிழ்ப் பற்றுக்குக் களங்கம் ஏற்படுத்துகிறது. ஆகவே, தமிழ் வழியாகப் பயில முன் வாருங்கள். தமிழ் வழியாகவே கற்பிக்க வேண்டும் என்று வற்புறுத்துங்கள். மாணவர்களுக்காக ஆசிரியர்களேயன்றி ஆசிரியர்கட்காக மாணவர்கள் அல்லர். மாணவர்கள் விரும்புவது போல் ஆசிரியர்கள் கற்பிக்கக் கடமைப்பட்டுள்ளனர். தமிழ் வாயிலாகப் பயிலுங்கள்; தலைவர்களாக விளங்குங்கள். தமிழும் வாழும்! தமிழரும் வாழ்வர்!" என மாணாக்கர்களிடம் வற்புறுத்தினார்.
"அவரவர் மொழிவழியாகப் பயிலலே இயற்கையோடு ஒத்ததும் எளிதும் ஆகும்." என்றும் "உயர்நிலைக் கல்விக் கூடங்களில் தமிழ்வழியாகப் படித்துவிட்டு, கல்லூரிக்கு வந்தவுடன் ஆங்கிலத்தின் வழியாகப் படிக்கும் முறையால் மாணவர்கள் இடர்ப்பாடு அடைகின்றனர்" என்றும் பேராசிரியர் சி.இலக்குவனார் விளக்கினார்.

"தமிழ் வழியாகப் படித்தால் இன்றுள்ள சூழ்நிலையில் அரசுப் பதவிகள் கிட்டா என்று கருதுகின்றனர். நடைமுறை அவ்வாறு கருதுமாறு செய்கின்றது. தமிழ்நாட்டு ஆட்சிமொழியாகத் தமிழை ஏற்றுக் கொண்டிருந்தும் தமிழ் வழியாகப் படித்தோரைத்தான் முதலில் பணிகளில் அமர்த்திக்கொள்ள வேண்டும் என்ற விதியை மேற்கொண்டிலர்" என்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே பேராசிரியர் நொந்தும் இன்று பெயரளவிற்குத் தமிழில் படிப்போருக்கு 20 விழுக்காடு முன்னுரிமை என்ற சட்டம்தான் வந்துள்ளது.

மேலும்


இதில் மேலும் படிக்கவும் :