4 வருஷம் ஆனாலும் மாஸ் காட்டும் ஜாக் ஸ்னைடர்! – இந்தியாவில் மட்டும் 25 ஆயிரத்திற்கும் மேல் முன்பதிவு!
பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜாக் ஸ்னைடரின் ஜஸ்டிஸ் லீக் ஓடிடியில் மட்டுமே வெளியான நிலையில் இந்தியாவில் மட்டும் 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த படத்தை பார்க்க முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜாக் ஸ்னைடர் இயக்கத்தில் 2016ல் உருவாகி வந்த சூப்பர் ஹீரோ திரைப்படம் ஜஸ்டிஸ் லீக். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்து வந்த நிலையில் பாதியிலேயே ஸ்னைடர் விலக வேண்டிய நிலை ஏற்பட, அவெஞ்சர்ஸ் இயக்குனர் ஜாஸ் வேடன் மீத படத்தை எடுத்து முடித்தார்.
2016ல் வெளியான அந்த ஜஸ்டிஸ் லீக் படத்தை ரசிகர்கள் மோசமான படம் என மதிப்பீடு செய்த நிலையில், தான் எடுத்தபடம் இது கிடையாது என ஜாக் ஸ்னைடர் சொல்ல, உடனே ஜாக் ஸ்னைடரின் ஜஸ்டிஸ் லீக் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டுமென ரசிகர்கள் தொடர்ந்து போராடி வந்தனர்.
இந்நிலையில் ஜாக் ஸ்னைடரின் ஜஸ்டிஸ் லீக் திரைப்படம் நான்கு வருடங்கள் கழித்து நேற்று HBO Max உள்ளிட்ட ஓடிடி தளங்களில் வெளியானது. இந்தியாவில் புக் மை ஷோ ஸ்ட்ரீம், ஹங்கமா ஸ்ட்ரீம் போன்ற தளங்களில் ஒருமுறை பணம் செலுத்தி பார்க்கும் வசதியில் வெளியானது.
இந்நிலையில் இந்த படத்தை பார்க்க கடந்த 3 நாட்களுக்கு இந்தியாவில் மட்டும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணம் செலுத்தி முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஸ்னைடர் ஜஸ்டிஸ் லீக் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் வார இறுதியில் முன்பதிவு எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.