தீய சக்திகளை அழிக்கும் ஆற்றல் கொண்ட எலுமிச்சம் பழம்!!!
சிவபெருமானின் நேத்ரகனி என்று எலுமிச்சம் பழம் அழைக்கப்படுகிறது. எலுமிச்சம் பழம் இறை வழிப்பாட்டில் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. திருஷ்டி தோஷ நிவர்த்தி செய்வதில் எலுமிச்சம் பழத்தின் பங்கு மிக, மிக முக்கியமானது.
மஞ்சள் நிறத்தில் தோற்றம் அளிக்கும் எலுமிச்சம் பழம் பல்வேறு வகையான எதிர்வினை தீய சக்திகளை தம்முள் கிரகித்து பஸ்மம் செய்யும் ஆற்றல் கொண்டது. அம்மன் கோவிலுக்கு செல்லும் போது எலுமிச்சம் பழத்தினை அம்மன் பாதத்தில் வைத்து வாங்கிக் கொள்ளுங்கள்.
அம்மன் பாதம்பட்ட அந்த எலுமிச்சம் பழங்கள் நிகரற்ற சக்திகள், சிறப்புகள் கொண்டது. எனவே அந்த எலுமிச்சம் பழங்களை வீணாக்கிடாமல், வீட்டுக்கு எடுத்து வந்து உங்கள் திருஷ்டி தீர பல வகைகளில் அவற்றை பயன்படுத்தலாம்.
எலுமிச்சம் பழத்தை இரு துண்டுகளாக அரிந்து குங்குமத்தில் தோய்த்து அதை இரு கைகளால் சாறு பிழிந்து திருஷ்டி கழித்து போட வேண்டும். இப்படி பரிகாரம் செய்வதால் திருஷ்டி விலகும்.
ராகு காலத்தில் எலுமிச்சையை துர்க்காதேவிக்கு தீபம் ஏற்ற பயன்படுத்துகிறார்கள். சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுகிறது. இதற்கு காரணம் எலுமிச்சை தேவ கனி என்பதால் ஆகும்.
ராகு கால துர்க்கா பூஜையில் முதலிடம் பெறுவது எலுமிச்சை பலி ஆகும். பூஜைக்கு எலுமிச்சம் பழத்தை நறுக்கும்போது ஐம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
மூடியை திருப்பும்போது க்ரீம் என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். அதில் பஞ்சு திரியை இடவேண்டும். எண்ணெய் ஊற்றும்போது க்லீம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்தவிளக்கை துர்க்கையின் முன் வைத்து ஏற்றும்போது சாமுண்டாய விச்சே என்று சொல்லி தீபம் ஏற்ற வேண்டும். விளக்கேற்றிய பிறகு கோயிலை ஒன்பது அல்லது 21 முறை சுற்றிவர வேண்டும்.
ஐம் என்ற சொல் சரஸ்வதியையும், க்ரீம் என்ற சொல் லட்சுமியையும், க்லீம் என்ற சொல் காளியையும் குறிக்கும். சாமுண்டாய விச்சே என்ற சொல்லுக்கு சரஸ்வதி கடாட்சம், லட்சுமி கடாட்சம், காளி கடாட்சம் ஆகியவற்றை வழங்கும் தெய்வமே என பொருள்.
இந்த முறைகளை பின்பற்றி கடவுளை வழிப்படும்போது, அம்மனின் அருள் பரிபூரணமாக நமக்கு கிடைக்கும்.