மார்கழி மாத பௌர்ணமி; சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம், தேர் திருவிழா!
மார்கழி மாத பௌர்ணமி நாளான இன்று சிவபெருமான் ஸ்தலங்களில் ஆருத்ரா தரிசனம், தேர் திருவிழா உள்ளிட்டவை நடப்பதால் ஏராளமான பக்தர்கள் சிவன் கோவில்களுக்கு சென்று வருகின்றனர்.
மார்கழி மாதத்தில் வரும் பௌர்ணமி நாள் சிவபெருமானுக்கு சிறப்பான நாளாக உள்ளது. இந்த நாளில் சிவபெருமான் ஸ்தலங்களில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், தேர் திருவிழாக்களையும் காண ஏராளமான பக்தர்கள் செல்கின்றனர். இன்று மார்கழி மாத பௌர்ணமியில் புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் பௌர்ணமி கிரிவலம் நடைபெறுகிறது.
சிவபெருமான் ஸ்தலங்களில் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலில் அரூத்ரா தரிசனம் இன்று நடைபெறுவதால் பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் சிதம்பரம் நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர்.
குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தாணுமாலயன் ஸ்வாமி திருக்கோவிலில் இன்று மார்கழி உத்சவத்தின் சிகர நிகழ்வாக தேர் திருவிழா நடைபெறுகிறது. இதற்கு ஏராளமான மக்கள் செல்வதால் குமரியில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சங்கரன்கோவிலில் உள்ள அருள்மிகு சங்கரநாராயண ஸ்வாமி கோவிலில் சிவபெருமான் ரத உற்சவம் நடைபெறுகிறது. திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் திருக்கோவிலில் திருவீதி உலா நடைபெறுகிறது. இன்று அனைத்து சிவபெருமான் ஸ்தலங்களிலும் சிறப்பு பூஜைகள், ஆருத்ரா தரிசனம் நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டமாக காட்சியளிக்கிறது.
Edit by Prasanth.K