1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By
Last Modified: சனி, 5 மே 2018 (12:43 IST)

மகாவிஷ்ணு ராமாவதாரத்தை எடுப்பதற்கு முன்பாக

மகாவிஷ்ணு ராமாவதாரத்தை எடுப்பதற்கு முன்பாக, அனைத்து தெய்வங்களும் 33 கோடி தேவர்களும் வைகுண்டத்தில் சங்கமித்தார்கள். ராமாவதாரத்தில் எந்தெந்த பாத்திரங்கள் வரும், அவற்றை யார், யார் ஏற்பது என்பது குறித்து தீர்மானிக்கப்பட்டு வந்தது.    



எல்லா பாத்திரங்களுக்கும் யார் பொறுப்பேற்பது என்பது தீர்மானமாகிவிட்டது. சிவனும் கூட ஆஞ்சநேயர் பாத்திரத்திற்குத் தயாராகிவிட்டார். ஆனால் ஒரே ஒரு பாத்திரத்திற்கு மட்டும் பதில் இல்லை. அது மந்தாரை என்ற கூனி பாத்திரம். உண்மையில் ராமாயணத்தில் திருப்பம் ஏற்படுத்துவது இந்தப் பாத்திரம்தான். ராமனைக் காட்டுக்கு அனுப்புமாறு கைகேயியைத் தூண்டிவிடுபவள் மந்தாரை. ராமன் காட்டுக்கு அனுப்பப்பட்டால் மட்டுமே அவதார நோக்கமான ராவண வதம் சாத்தியமாகும். ஆனால், இத்தகைய நல்ல செயலைச் செய்யும் அந்தப் பாத்திரமோ ராமாயணத்தின் ஆயுட்காலம் முழுவதும் மக்களால் சபிக்கப்படும். யார் தான் அந்தப் பாத்திரத்தை ஏற்பார்கள்? ஒருத்தரும் முன்வரவில்லை.
“மந்தாரை பாத்திரத்திற்கு யாரும் தயாரில்லையா? அவள் வரவில்லையென்றால் ராமாவதாரம் வீணாகி விடும்” என்று சொல்லிப் பார்க்கிறார் பரந்தாமன். அப்போதும் தேவலோக மங்கைகள் மௌனம் சாதிக்கிறார்கள்.

“நான் தயார்” என்று ஒரு குரல் கேட்கிறது. திரும்பினால், அது கலைகளின் தெய்வமான சரஸ்வதி தேவி. “என்ன நீயா? உலகம் உன்னை காலமெல்லாம் சபிக்குமே?” என்கிறார் அவளின் கணவனான பிரம்ம தேவர். “இருக்கட்டுமே. நான் ஒருத்தி சாபம் வாங்கினாலும் ராமாவதாரத்தின் நோக்கம் நிறைவேறுமே. நல்லதுக்காக கெட்டப் பெயரை ஏற்பதற்கு நான் தயார்” என்று அழுத்தமாகச் சொல்கிறார் சரஸ்வதி தேவி.
அங்கிருக்கும் அத்தனை கரங்களும் அவளை நோக்கி கும்பிடுகின்றன.

(ஒரு செவி வழி கதை)