வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Updated : புதன், 28 செப்டம்பர் 2022 (10:17 IST)

அரக்க குணம் கொண்ட மகிஷனை அம்பிகை ஆட்கொண்டது எங்கனம்...?

Mahishasura
புலன்கள் அறிவிப்பதையெல்லாம், மனம் ஆசைப்படுகிறது; அப்படி ஆசைப்படும் மனதிற்கு நல்லது, கெட்டது எனும் வேறுபாட்டை உணர்த்தி, நல்வழியில் போகச் செய்வது அறிவு. இது, மிகவும் கடினமான காரியம். இதைச் செய்ய, அறிவுக்கு நிறைய ஆற்றல் வேண்டும்; அதை, இறைவனால் மட்டுமே வழங்க முடியும்.


என் அறிவு மங்கும் போதெல்லாம், மனதை நல்வழிப் பாதைக்கு இட்டுச் செல்லும் ஆற்றலைத் தந்து, அறிவை தூண்ட வேண்டும்... என, இறைவனிடம் பிரார்த்திப்பதே, காயத்ரி மந்திரத்தின் உட்பொருள்.

மனம் ஆசைப்படுவதையெல்லாம் அனுபவிக்க விரும்பினால், விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும். தவறான ஆசைகளால் தீய வழிகளுக்குச் செல்பவர்களும், அவர்களால் பாதிக்கப்படுபவர்களும், மகிழ்ச்சியையும், நிம்மதியையும் இழந்து, வாடி நிற்பதைக் காணலாம். அறிவுக்குக் கட்டுப்படாமல், மனம் போன போக்கில், நல்லது, கெட்டது வேறுபாடு இல்லாமல் செயல்படுபவர்களை, எருமை என்று
குறிப்பிடுவதற்கு காரணமும் இது தான்.

மிருகங்களிலும் கீழ்மையான பழக்கங்களையுடையது, மகிஷம் எனும் எருமை. அம்பிகையின் வரலாற்றில், மஹிஷாசுர வதம் என்பது, அறியாமையால் தவறுகள் செய்யும் மனிதர்களின் மனதை துாய்மைப்படுத்தி, நல்லறிவை தந்து, நன்னெறிப்பட்ட வாழ்க்கையை அன்னை அருளுகிறாள் என்பதையே எடுத்துக் காட்டுகிறது. ரம்பாசுரன் என்பவன், அம்பிகையை நோக்கி கடும் தவம் இருந்தான். அவன் முன் தோன்றிய அன்னை, என்ன வரம் வேண்டும்? எனக் கேட்டாள். உனக்கு வாகனமாக இருக்கும் வகையில், எனக்கு ஒரு மகன் பிறக்க வேண்டும் என, வேண்டினான். அன்னையும், அவ்வாறே ஆகட்டும் என, அருளினாள்.

சில காலம் கழித்து, அவனுக்கு விசித்திரமான தோற்றத்தில், குழந்தை பிறக்கிறது. எருமைத் தலையும், அரக்க வடிவமும் கொண்டு பிறந்த அக்குழந்தையைக் கண்டு மனம் வருந்திய ரம்பாசுரனுக்கு, முற்பிறவியில் செய்த பாவத்தின் காரணமாய், இப்படி பிறந்து
உள்ளான். காலம் வரும் போது, இவனது அரக்க குணத்தையும், தமோ குணத்தையும் அழித்து, நாம் அவன் தலையில் நின்று அருள் புரிவோம் என, அசரீரியாகக் கூறினாள் அம்பிகை.