வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala

கந்த சஷ்டி விரதமிருந்து முருகனை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்...!!

கந்த சஷ்டி விரதமிருந்து இவ்வாறு முருகனை வழிபட்டால் வீட்டின் கஷ்டங்கள் நீங்கி இன்பம் செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்று காலம் காலமாக பக்தர்கள் நம்பிக்கையுடன் கந்த சஷ்டி விரதம்  இருக்கின்றனர். 
சஷ்டி விரத பலன்கள் "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், முருகனுக்கு உகந்த சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். எனவேதான் குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும்  சிறந்த விரதமாகும்.

குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைபிடிக்கலாம் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. 
 
கந்த சஷ்டி விரத மகிமை கந்த சஷ்டி விரதத்தை பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் குழந்தைகளும் அனுஷ்டிக்கின்றனர். மாணவர்கள் கல்விக்காகவும், திருமணமான பெண்கள் குடும்ப நன்மைக்காகவும் குழந்தை வரம் வேண்டியும், கன்னிப்பெண்கள் திருமண வரம் வேண்டியும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா திருச்செந்தூர் உள்ளிட்ட முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில்  தொடங்கியுள்ளது.
 
கந்த சஷ்டி விரதம் தொடக்கம் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2 வது படை வீடாக திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி  கோவிலில், கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா நடைபெறுவது  வழக்கத்தில் உள்ளது. கடற்கரையில் சூரசம்ஹாரம் அன்றைய தினம் மாலை நடைபெறும்.
 
வெற்றிக்கு திருக்கல்யாணம் மறுநாள் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. அதிகாலை 5 மணிக்கு தெய்வானை அம்மன் தபசுக் காட்சிக்கு புறப்படுதல், மாலை 6.30 மணிக்கு சுவாமி, அம்மன் தோள்மாலை மாற்றுதல், இரவில் கோயிலில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.