தினமும் காபி குடித்தால் ஆயுட்காலம் அதிகரிக்குமா? ஆய்வில் ஆச்சரிய தகவல்
காலையில் எழுந்ததும் காபி குடிக்காமல் நாளை ஆரம்பிப்பது கிட்டத்தட்ட இயலாததாய் இருக்கும் என்று கூறும் மக்கள் பெரும்பாலும் இருக்கிறார்கள். அன்றைய நாளின் உணர்வையும், செயல் திறனையும் அந்த காபி தான் கொடுக்கிறது என்பவர்கள் அதிகம். இப்போது, காபி அதிகமாக குடிக்காவிட்டாலும், அது நமது ஆரோக்கியத்திற்கு பலநிலை பயன்களை அளிக்கின்றது என்பது ஆய்வுகள் மூலம் தெளிவாக இருக்கிறது.
போர்ச்சுகலில் உள்ள கோயிம்ப்ரா பல்கலைக்கழகத்தில், ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆசியா பல நாடுகளிலிருந்து திரட்டப்பட்ட லட்சக்கணக்கான மக்களுக்கான ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், தினசரி மூன்று கப் காபி குடிப்பவர்களின் ஆயுட்காலம் 1.84 ஆண்டுகள் அதிகரிக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், தினமும் காபி குடிப்பவர்களுக்கு, சிறந்த தசை செயல்பாடு, இருதய ஆரோக்கியம், மனநலன் மற்றும் நோய்களை எதிர்க்கும் திறன் இருப்பதாக ஆய்வு தெரிவிக்கின்றது. காபி அதிகமாக குடிக்கும் மக்கள், வயதானவர்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள், குறிப்பாக இருதய நோய்கள், பக்கவாதம், புற்றுநோய்கள், நீரிழிவு, மறதி நோய் மற்றும் மனச்சோர்வு போன்றவை அவர்களை தாக்க வாய்ப்பு குறைவாக இருக்கின்றது என்று இந்த ஆய்வு கூறுகிறது.