வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. இதர வாசிப்பு
  2. மரு‌த்துவ‌ம்
  3. கட்டுரைகள்
Written By அக்குஹீலர் ஸ்ரீரஞ்சன்
Last Updated : வெள்ளி, 20 ஜூன் 2014 (19:47 IST)

இரத்த அழுத்தம் என்றால் என்ன? ஏன் ஏற்படுகிறது? எப்படி குணமாக்குவது?

(அக்குஹீலர் ஸ்ரீரஞ்சன், அக்குபஞ்சர் & மருந்தில்லா மருத்துவ நிபுணர்)
 
உனக்கு பி.பி (Blood pressure) இருக்கா? பார்த்துப்பா..! ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்... நேரம் தவறாம மாத்திரை போட்டுக்கோ.. இல்லேன்னா ஆளையே தூக்கிடும். அங்க இங்க அலையாதே.. டென்சன் ஆகாதே.. என்று மேலும் மேலும் டென்சனாக்குபவர்கள் தான் இன்று அதிகம். அதைக் கேட்பவருக்கோ பி.பி. மேலும் எகிறும். படபடப்புடன் தலைசுற்றுவது போலவும் இருக்கும். உடனே ஓடிப் போய் பி.பி செக் செய்துகொள்வார்... நாலு கலர் மாத்திரையை எடுத்துப் போட்டுக்கொள்வார். உடனே நார்மலாகி விடுவார். இதுதான் இன்றைய பி.பி. நோயாளிகளின் பரிதாப நிலை.
 
வாழ்நாள் நோய்க்கு பாலிசி எடுத்துக்கொண்ட பி.பி நோயாளிகளே, முதலில் பி.பி என்றால் என்ன? ஏன் வந்தது? என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். இதற்கு மருத்துவம் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் உடலை நன்கு அறிந்தவர் நீங்கள்தான். நவீன மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் ஹிப்போகிரேட்ஸ் என்ன சொன்னார் தெரியுமா?
 
“நமக்குள் இருக்கும் இயற்கையான ஆற்றல்கள்தான் நோயை உண்மையிலேயே குணமாக்குகின்றன”என்றார்.

உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ ஒரு பிரச்சினை உங்களுக்கு வரும்போது (அப்படி ஒரு விஷயம் வெளியே தெரியும் முன்னரே) உடலானது தன்னைத் தானே சரிசெய்யும் முயற்சியை மேற்கொள்ளும். பாதிக்கப்பட்ட உறுப்புக்கோ அல்லது அந்தப் பகுதிக்கோ அதிகப்படியான சக்தி தேவைப்படுகிறது, அதனால் தேவைப்படும் அந்தச் சக்தியை அதி வேகத்துடன் இரத்தத்தின் மூலமே எடுத்துச் செல்லவேண்டும். அப்போது இரத்தத்தில் எண்ணற்ற வேதியியல் மாற்றங்கள் நடக்கும். இரத்தத்தின் அடர்த்தியும் மாற்றம் அடையும்.
 
பின்னர் அந்தச் சக்திகளைச் சுமந்துகொண்டு இரத்தம் பாதிக்கப்பட்ட பகுதிக்கு மெதுவாகவா செல்லும்? 108 ஆம்புலென்ஸ் போல விரைவாகத்தானே செல்லும். அதற்கு இதயம் வேகமாக துடித்துத்தானே ஆகவேண்டும். அதுதானே இரத்தத்தை உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் தேவையை ஒட்டி அனுப்புகிறது. இவ்வாறு உடல் தன்னைத்தானே குணமாக்கும் நிகழ்ச்சியையே நாம் இரத்த அழுத்தம் என்று நினைத்துக்கொள்கிறோம். ஏன் என்றால் படபடப்பு, தலைசுற்றல், மயக்கம் போன்றவை வருவதால். 
 
உடலில் நோய் ஏற்பட்டுள்ளது அதைச் சரிசெய்யவே பி.பி என்ற ஒரு விஷயம் உடலில் நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். பி.பி என்பது பின்னே நடப்பதை முன்னே சொல்லும் அறிவிப்பு மணியாகும். பி.பி இருக்கிறது என்று நீங்கள் உணர்ந்தால் உடலில் ஏதோ பிரச்சினை அல்லது நோய் என்பதை அறிந்து, அதைக் குணமாக்கும் வழியை தேடுங்கள். அந்த நோய் குணமானால் பி.பி தானாகவே காணாமல் போய்விடும். 
 
அதை விடுத்து பி.பி.யை மட்டும் குறைப்பது என்பது அறிவிப்பு மணியை மட்டும் கழற்றி வைப்பது போலாகும். அறிவிப்பு மணியைக் கழற்றி வைத்து விட்டால் பின்னால் என்ன நடக்கப் போகிறது என்பது தெரியாமல் போய்விடும்.

உடலில் உருவான நோயைக் குணமாக்காமல் அதை உணர்த்தும் பி.பி.யை மட்டும் மருந்துகள் மூலம் குறைப்பதால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
 
வலுக் கட்டாயமாக இதயத்தின் துடிப்பு குறைக்கப்படுகிறது. இரத்த நாளங்கள் விரிவாக்கப்பட்டு, அவை இயற்கையாகச் சுருங்கி விரியும் தன்மையை இழக்கின்றன. அதனால் நாளாவட்டத்தில் அவை தண்ணீர்க் குழாய் போல் ஆக்கப்பட்டு, உடலின் தன்மைக்கு அல்லது நோயின் தன்மைக்குத் தகுந்தாற்போல் சுருங்கி விரியும் தன்மையை இழக்கிறது. இரத்தத்தின் அடர்த்தியைக் குறைப்பதற்காக உடலில் இருந்து உப்புகளும் கனிமங்களும் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுவதால் இரத்தம் நீர்த்துப்போய் விடுகிறது. 
 
இதற்குப்பின் எந்த நோய் வந்தாலும் நம்மால் உணர முடியாமல் போய்விடுகிறது. பி.பி. மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒன்றன் பின் ஒன்றாக நோய்கள் தொடர்ச்சியாக வருவது இதனால்தான். அதனால் தயவுசெய்து பி.பி எதனால் வந்தது என்பதை அறிந்து முதலில் அந்த நோயைக் குணமாக்குங்கள். 
 
நோய் குணமாக வேண்டுமானால் முதலில் உங்கள் ஜீரணத்தைச் சரி செய்யுங்கள், உடலில் நாட்பட்டுச் சேர்ந்த கழிவுகளை வெளியேற்றுங்கள். இந்த இரண்டையுமே அக்குபஞ்சர் (தொடு சிகிச்சை) மருத்துவம் செவ்வனே செய்கிறது. வயிறுதான் அனைத்து நோய்களின் வரவேற்பறை. அதைச் சரி செய்யாமல் பி.பி. வந்து விட்டது சுகர் வந்து விட்டது என்று புலம்புவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை.

படத்துக்கு நன்றி - விக்கிப்பீடியா