1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. செய்திகள்
Written By Veeramani
Last Updated : புதன், 16 ஏப்ரல் 2014 (12:52 IST)

பெட்ரோல் விலை 89 காசுகள் குறைந்தது; ரூபாய் மதிப்பு உயர்வு எதிரொலி!

ரூபாய் மதிப்பு உயர்ந்து வருவதால், பெட்ரோல் விலை லிட்டருக்கு 89 காசுகள் குறைக்கப்பட்டது. ஆனால், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம், கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போதிருந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், மாதந்தோறும் 1 மற்றும் 16 ஆம் தேதிகளில் பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.
 
தற்போது, ரூபாய் மதிப்பு உயர்ந்து வருவதால், கடந்த 1 ஆம் தேதி பெட்ரோல் விலை 99 காசுகள் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக நேற்றும் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது. உள்ளூர் வரிகளைத் தவிர்த்து, பெட்ரோல் விலை 70 காசுகள் குறைக்கப்படுவதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. இந்த விலை குறைப்பு, நேற்று நள்ளிரவு அமலுக்கு வந்தது. உள்ளூர் வரி குறைப்பையும் சேர்த்து, முக்கிய பெரு நகரங்களில் விலை குறைப்பில் சிறிதளவு வேறுபாடு காணப்பட்டது.
 
அதன்படி, சென்னையில் ரூ.75 ரூபாய் 49 காசுகளாக இருந்த பெட்ரோல் விலை, ரூ.74 ரூபாய் 60 காசுகளாக குறைந்தது. அதாவது, லிட்டருக்கு 89 காசுகள் குறைந்தது.
 
டெல்லியில், ரூ.72.26 ஆக இருந்த பெட்ரோல் விலை, 85 காசுகள் குறைந்து, ரூ.71.41 ஆனது. கொல்கத்தாவில், ரூ.80.13 ஆக இருந்த பெட்ரோல் விலை, 88 காசுகள் குறைந்து, ரூ.79.25 ஆனது. மும்பையில், ரூ.80.89 ஆக இருந்த பெட்ரோல் விலை, 89 காசுகள் குறைந்து, ரூ.80 ஆனது.
 
ஆனால், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. டீசலுக்கான நஷ்டத்தை ஈடுகட்டும்வரை, மாதந்தோறும் 50 காசுகள் விலையை உயர்த்திக்கொள்ளுமாறு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அனுமதி அளிக்கப்பட்டது. அப்போதிருந்து, இதுவரை 14 தவணைகளாக டீசல் விலை ரூ.8.33 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், டீசல் இன்னமும் லிட்டருக்கு ரூ.5.49 நஷ்டத்தில் விற்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறி வருகின்றன.
 
தற்போது, தேர்தல் நேரம் என்பதாலும், ரூபாய் மதிப்பு உயர்ந்து வருவதாலும், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என்று கருதப்படுகிறது.