ஜியோ வரம்பு மீறல் குற்றச்சாட்டு: டிராய் நடவடிக்கை, அதிர்ந்து போன ஏர்டெல், வோடோபோன்...


Sugapriya Prakash| Last Updated: வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (17:47 IST)
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி வாய்ஸ் கால், டேட்டா உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இலவசம் என்ற அதிரடியான அறிவிப்போடு, ரிலையன்ஸ் ஜியோ அறிமுகமானது.

 
 
இலவச அறிவிப்பு காரணமாக மொபைல் பயன்பாட்டாளர்கள் அனைவரும் ஜியோ சிம் கார்டுகளை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கினர். 
 
முதலில் டிசம்பர் மாதம் இறுதி வரையில் மட்டுமே இலவசங்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது, பின்னர், இவ்வாண்டு மார்ச் 31 ஆம் தேதி வரையில் இலவச சலுகையை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டது.
 
இந்த அறிவிப்பால் ஏர்டெல், வோடஃபோன், ஐடியா, ஏர்செல் உள்ளிட்ட நெட்வொர்க்குகள், வாடிக்கையாளர்களை இழக்கும் நிலை ஏற்பட்டது. இதனால், தொலை தொடர்பு ஆணையமான டிராய் அமைப்பிடம் தொடர்ந்து புகார் அளித்து வந்தன. 
 
வோடோபோன் அளித்துள்ள புகாரில், ஜியோ நிறுவனம் தொலைதொடர்பு விதிமுறைகளை மீறியுள்ளதாகவும் அதைக் கட்டுப்படுத்த ட்ராய் அமைப்பு தவறிவிட்டதாகவும் தெரிவித்திருந்தது. 
 
மேலும் டிராய் அமைப்பு முன்னதாக, கடந்த 2002ஆம் ஆண்டில் எந்தவொரு புதிய நெட்வொர்க் நிறுவனமும் 90 நாட்களுக்குமேல் இலவச சலுகை அளிக்கக்கூடாது என்று கூறிவிட்டு, அந்த விதிமுறையை தற்போது ஜியோ விஷயத்தில் மீறிவிட்டதாகவும் வோடோபோன் குற்றம்சாட்டியிருந்தது.
 
இது தொடர்பாக, டிராய் அமைப்பின் சார்பாக ரிலையன்ஸ் ஜியோவிடம் விளக்கம் கேட்கப்பட்டது. விளக்கத்தை ஏற்றுக்கொண்ட ட்ராய் அமைப்பு ‘இரண்டு சேவைகளும் வெவ்வேறானவை. எனவே, ஜியோ மீதான புகார் செல்லாது’ என்று தெரிவித்தது.
 
இதனால் மற்ற தொலை தொடர்பு நிறுவனங்கள் சற்று கலக்கத்தில் உள்ளன.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :