வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 25 ஆகஸ்ட் 2015 (07:23 IST)

வட்டி விகிதங்களை குறைவாக நிர்ணயிக்க முயற்சி செய்கிறோம்: ரகுராம் ராஜன்

முடிந்த அளவு வட்டி விகிதங்களை குறைவாக நிர்ணயிக்க முயற்சி செய்கிறோம் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
 
இந்திய வங்கிகள் சங்கமும், பிக்கி அமைப்பும் இணைந்து நடத்திய மாநாடு மும்பையில் நடைபெற்றது. இதில் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கலந்து கொண்டு பேசினார். 
 
அப்போது அவர் கூறுகையில், நாட்டின் பொருளாதார அடிப்படைகள் வலுவாக உள்ளதாகவும், எந்த ஏற்றத்தாழ்வுகளையும் எதிர்கொள்ளும் அளவிற்கு போதுமான அளவு அன்னிய செலாவணி கையிருப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.
 
மேலும், அவர் கூறுகையில், "இறுதியாக மேற்கொண்ட மதிப்பீட்டின்படி 35,500 கோடி டாலர் கையிருப்பு உள்ளது. முடிந்த அளவு வட்டி விகிதங்களை குறைவாக நிர்ணயிக்க முயற்சி செய்கிறோம்.
 
பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஏற்ப அது அமையும். அடுத்து வெளியிடப்பட உள்ள பணவீக்க புள்ளிவிவரத்தை எதிர்நோக்கி இருக்கிறோம்.
 
தற்போது காணப்படும் நிச்சயமற்ற தன்மைக்கு இனி வரும் மாதங்களில் முடிவு காணப்படும். அப்போது பணவீக்கம் மற்றும் பருவமழை பற்றிய முழுமையான மதிப்பீடுகள் வந்திருக்கும். அதற்கேற்ப ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் இருக்கும்.
 
ரூபாய் மதிப்பில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை குறைக்கும் வகையில் பொருத்தமான சமயத்தில் அன்னிய செலாவணி கையிருப்பை பயன்படுத்த நாங்கள் தயக்கம் காட்டப் போவதில்லை.
 
யுவான் மதிப்பை குறைக்கும் சீனாவின் நடவடிக்கை அதன் அசாதாரண நிதிக்கொள்கையின் விளைவாக இருக்கிறது. அது உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது" என்று ரகுராம் ராஜன் கூறினார்.
 
கடந்த 7 ஆண்டுகளுக்குப் பினனர், சில திங்களுக்கு முன்னர் பங்கு சந்தை குறியீட்டு எண் ஒரே நாளில்  6 சதவீதம் சரிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.