1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 15 அக்டோபர் 2016 (11:07 IST)

நுகர்வோர் புகாரை இணையதளத்தில் பதிவு செய்வது எப்படி..?

ஒரு நுகர்வோருக்குப் பிரச்சனை இருந்தால், அந்தப் பிரச்சனை சம்பந்தப்பட்ட தேவையான ஆவணங்களுடன் ஒரு நுகர்வோர் நீதிமன்றம் சென்று அவருடைய பிரச்சனைகளைப் பதிவு செய்யலாம். 

 
ஆனால், இதற்கு மாற்றாக, நுகர்வோர் தங்கள் புகாரை இணையம் மூலமும் பதிவிட இயலும். அதனை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
 
வலைத்தளம்:
 
நுகர்வோர் ஆன்லைன் ஆதார மற்றும் அதிகாரமளித்தல் மையம் (http://consumerhelpline.gov.in/) என அழைக்கப்படும் ஒரு வலைத்தளத்தை அரசு நடத்தி வருகின்றது. இது நுகர்வோர் புகார் மற்றும் குறைகளை நிவர்த்திச் செய்யும் மையம் ஆகும். இது நுகர்வோர் ஒருங்கிணைப்புக் கவுன்சிலால் நடத்தப்படுகின்றது. இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை இதற்கு ஆதரவு வழங்குகின்றது.
 
பதிவு புகார் கொடுக்க விரும்பும் நுகர்வோர், முதலில் இந்தத் தளத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அந்த வலைத்தளத்தில் உள்ள ஆன்லைன் பதிவு படிவத்தில் நுகர்வோரின் பெயர், மின்னஞ்சல், முகவரி மற்றும் தொலைப்பேசி எண் போன்ற விபரங்களைப் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு உரியப் பயனாளர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் உருவாக்கப்படும்.
 
இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட எந்தவொரு பிராண்ட் அல்லது சேவைக்கும் எதிராகப் புகார் தெரிவிக்க இயலும். ஆன்லைன் புகார் அமைப்பு வலைத்தளத்தில் பல்வேறு துறைகள், பிராண்டுகள், மற்றும் சேவைகளை உள்ளடக்கிய ஒரு மெனு உள்ளது. அதைப் பயன்படுத்தி நுகர்வோர் தன்னுடைய புகாரைப் பதிவு செய்யலாம்.
 
செயல்முறை புகாரின் தன்மை, அந்தப் புகாருடன் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய விபரங்கள் மற்றும் அதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் ஆகியவற்றை அந்தத் தளத்தில் பதிவேற்ற வேண்டும். புகாரின் விளைவுகள் மற்றும் நுகர்வோர் கோரும் நிவாரணம் போன்றவற்றையும் அந்தத் தளத்திலேயே பதிவிடலாம்.
 
புகார் சமர்ப்பிக்கப்பட்ட பின் அந்தப் புகாருக்கு உரிய எண் மின்னணு முறையில் உருவாக்கப்பட்டு அந்தப் புகாருக்கு ஒதுக்கப்படும். அந்தப் புகார் தீர்க்கப்படும் வரை, புகாருக்கு உரிய எண்ணைப் பயன்படுத்தி அந்தப் புகாரின் நிலையைக் கண்காணிக்க இயலும்.