வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. தே‌‌ர்த‌ல் 2014
  4. »
  5. தே‌ர்த‌ல் செ‌ய்‌திக‌ள்
Written By Webdunia
Last Modified: வெள்ளி, 14 மார்ச் 2014 (15:22 IST)

குஜராத் முன்னேறிவிட்டதாக பச்சை பொய் சொல்லும் மோடி - கெஜ்ரிவால் கடும் தாக்கு!

மோடியை நேருக்கு நேர் சந்திக்க கெஜ்ரிவாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், குஜராத் மாநிலம் முன்னேறியுள்ளதாக பச்சையாக புளுகுகிறார் மோடி என்று கடுமையாக சாடியுள்ளார்.
FILE

குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்வதற்காக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 5 ஆம் தேதி முதல் அங்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

16 கேள்விகள் அடங்கிய பட்டியலுடன் குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக இன்று காலை சென்ற அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அவரை சந்திக்க விரும்பினால் முன் கூட்டி ‘அப்பாயிண்ட்மெண்ட்’ பெற வேண்டும் என்று கூறி திருப்பி அனுப்பினர்.

அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அரவிந்த் கெஜ்ரிவால் மோடியை கடுமையாக தாக்கி பேசினார். மோடியுடன் நேருக்கு நேர் பேசும் பாணியில் அவர் கூறியதாவது:-

நாட்டில் உள்ள பல மாநிலங்கள் சூரிய மின்சாரத்தை ஒரு யூனிட் 8 ரூபாய் விலைக்கு வாங்கும் போது குஜராத் மட்டும் 15 ரூபாய்க்கு வாங்குவது ஏன்?

முகேஷ் அம்பானியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதால் அவரது மருமகனுக்கு உங்கள் அமைச்சரவையில் அமைச்சர் பதவி தந்திருக்கிறீர்கள். சுரங்க மோசடி வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்று ஜாமினில் வெளியே வந்துள்ள பாபு பொக்காரியாவை அமைச்சர் பதவியில் அமர்த்தியிருக்கிறீர்கள்.

சமையல் எரிவாயு விலையை 4 டாலரில் இருந்து 8 டாலராக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருந்த போது அதை 16 டாலராக உயர்த்த வேண்டும் என குஜராத் அரசு வற்புறுத்தியது.

450 கோடி ரூபாய் அளவுக்கு மீன் வளத்துறையில் ஊழல் செய்த புருஷோத்தம் சோலாங்கிக்கு கூட உங்கள் அமைச்சரவையில் அமைச்சர் பதவி கொடுத்திருக்கிறீர்கள். குஜராத்தில் உள்ள 6 கோடி மக்களில் வேறு யாருமே இந்த பதவிகளுக்கு தகுதியானவர்கள் இல்லையா?

சவுரப் பட்டேலை கனிமம், பெட்ரோல், எரிவாயு மற்றும் எரிசக்தி துறை அமைச்சர்யாக நியமித்து குஜராத்தின் இயற்கை வளங்களை எல்லாம் அம்பானி கூட்டத்துக்கு தாரை வார்த்து தந்துவிட்டீர்கள். மாநில அரசின் ஆயிரத்து 500 பணியிடங்களுக்கு 13 ஆயிரம் பேர் விண்ணப்பிப்பதை வைத்தே குஜராத்தில் வேலையில்லா திண்டாட்டம் எப்படி தலைவிரித்து ஆடுகிறது என்பதை புரிந்துக் கொள்ள முடியும்.

அரசு துறைகளில் ஒப்பந்த பணியாளர்களை நியமித்து அவர்களுக்கு மாதம் 5 ஆயிரத்து 300 ரூபாய் சம்பளம் தரப்படுகிறது. இந்த பணத்தை வைத்து ஒருவர் குடும்பம் நடத்த முடியுமா?

அரசு பள்ளிகள் மோசமான நிலையில் உள்ளன. சுகாதார துறையும் சரியாக இயங்கவில்லை. அரசு கையகப்படுத்திய நிலங்களுக்கான சரியான இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில், குஜராத் மாநிலம் எல்லா துறைகளிலும் முன்னேறி விட்டதாக சொன்ன பச்சைப் பொய்யையே நரேந்திர மோடி திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.