1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. வியாதிகள்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 8 டிசம்பர் 2015 (14:11 IST)

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எச்சரிக்கை : லெப்டோபைரசிஸ் உயிர்கொல்லி நோய் பரவ வாய்ப்பு

தமிழகத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் லெப்டோபைரசிஸ் எனும் உயிர்கொல்லி நோய் பரவ வாய்ப்புள்ளதாக தகவல் பரவி வருகிறது. 


 
 
சமீபத்தில் பெய்த கனமழையில் சென்னை, கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. நிறைய இடங்களில் தண்ணீர் வற்றாமல் தேங்கி நிற்கிறது. சென்னையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில், தொற்றுநோய் பாதிப்பைத் தடுக்க, மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. 
 
இந்நிலையில், '2013ல், மகாராஷ்டிராவை வெள்ளம் பாதித்தபோது, உயிர் இழப்புகளுக்கு தொற்று நோய் பரவியதே காரணம்;அதனால், சென்னை, கடலூர் மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும்' என, 'வாட்ஸ் - ஆப்' மூலம் பரப்பப்படும் ஆலோசனைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
 
அதில் குறிப்பிட்டுள்ள ஆலோசனைகள்:
 
வெள்ளப் பகுதிகளில், 'லெப்டோபைரசிஸ்' எனும், எலிக்காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. எலி, நாயின் சிறுநீர் கலப்பதால் ஏற்படும் பாக்டீரியாவால் இந்த நோய் ஏற்படும். தேங்கிய தண்ணீரில் நடக்கும்போது தோலில் பாக்டீரியா படுவதால், இந்த நோய் பரவும்
 
உடலில் ஏற்படும் வெட்டுக்காயம், திறந்த புண்ணில் தண்ணீர் படும்போது, பாக்டீரியா உள்ளே புகுந்து, நோய் பாதிக்கலாம்; காயத்தில் தண்ணீர் படாதவாறு பார்த்துக் கொள்ளவும்
 
லெப்டோ பைரசிஸ் நோயை துவக்கத்தில் கண்டறிந்தால், முற்றிலும் குணப்படுத்தலாம்; அலட்சியமாக விட்டால், கல்லீரல், சிறுநீரகம் செயலிழந்து, உயிர் போக வாய்ப்புள்ளது
 
திடீர் தலைவலி, அதிக காய்ச்சல் (100.4 - 104F), வாந்தி, உடம்பு வலி, உடம்பு மஞ்சளாவது ஆகியவைதான் இந்த நோயின் அறிகுறிகள். இதுபோன்ற பாதிப்பு இருந்தால், உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
 
குடிக்கும் தண்ணீர் மூலம் நோய் பரவும்; தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து பருகுங்கள்
 
வெள்ளத்தால் சிக்கிய பொருட்களை நன்கு சுத்தம் செய்து பயன்படுத்தவும்; நன்கு கழுவி, தண்ணீர் காய்ந்த பின் பயன்படுத்தவும்
 
குழந்தைகளை தண்ணீரில் விளையாட விடாதீர்கள்; விளையாட்டு பொம்மைகள் ஈரமாக இருந்தால், அவற்றை நன்கு கழுவி, காய்ந்த பின் கொடுங்கள்.
 
இவ்வாறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. 
 
இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'அத்தனையும் மிக பயனுள்ள ஆலோசனைகள். தேவையில்லாத தகவல்களை பரப்பாமல், தகுந்த நேரத்தில், பயனுள்ள தகவல்களை அனுப்பியோரை பாராட்டலாம்' என்று கருத்து கூறியுள்ளனர்.