ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. தீபாவளி மலர்
Written By

வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை...!!

வடநாட்டின் பெரும்பாலான பகுதிகளில், தீபாவளி ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்றது. ஐப்பசி தேய்பிறை பதின்மூன்றாம் நாள் தொடங்கி வளர்பிறை இரண்டாம் நாள் வரை கொண்டாடப்படும் இந்த ஐந்து நாட்களும் கூட, இடத்துக்கிடம் வேறுபடுகின்றன. மராட்டியம், குஜராத் பகுதிகளில் இது “தன திரயோதசி”, “தண்டெராஸ்” என்றெல்லாம் சொல்லப்படுகின்றது. 
அட்சய திருதியை போலவே தன திரயோதசி அன்றும் தங்கம், ஏனைய பொருட்கள் வாங்குவது சிறப்பு என்று நம்பப்படுவதுடன்,  வணிகர்களாலும் வியாபார நிலையங்களாலும் விசேடமாகக் கொண்டாடப்படுகின்றது. ஆனால், நேபாளத்தில் “காக் திஹார்”  என்றழைக்கப்படும் இந்நாளில் காகங்களே உணவளித்துப் போற்றப்படுகின்றன.
 
வடநாட்டில், பொதுவாக “நரக சதுர்த்தசி” என்று அறியப்படும் இந்நாளே தமிழர்களால் தீபாவளியாகக் கொண்டாடப்படுகின்றது. அடுத்தநாள் அமாவாசையையே தீபாவளியாகக் கொண்டாடும் வடநாட்டவர், இந்நாளை “சோட்டி தீபாவளி” என்று அழைப்பதுடன், எண்ணெய்க்குளியல்  செய்து, புத்தாடை புனைந்து இந்நாளில் மகிழ்வர். நேபாளிகளோ “குகுர் திஹார்” என்ற பெயரில் இந்நாளில் நாய்களுக்கு உணவிட்டு   அவற்றை வழிபட்டு மகிழ்வர்.
 
தமிழர், மலையாளிகள், கன்னடர் தவிர்ந்த பெரும்பாலான எல்லா இந்திய இனக்குழுக்களும் இந்நாளில் தான் தீபாவளி கொண்டாடுகின்றனர்.  “இலக்குமி பூசை” என்று பொதுவாகச் சொல்லப்படும் இந்நாளில் புத்தாடை புனைவதும், திருமகளைப் போற்றுவதும் பட்டாசு வெடித்து வாணவேடிக்கைகள் நிகழ்த்துவதும் முக்கியமான மரபுகள். நேபாளத்தில் இலக்குமி பூசையுடன், கோமாதா பூசை கொண்டாடுவார்கள்.
 
நேபாளப்புத்தாண்டும், குஜராத், மராட்டியப் புத்தாண்டும் இந்நாளாக அமைகின்றது. தீபங்கள் ஏற்றுவது அன்று விசேடம். வடநாட்டின் சில பகுதிகளில், கணவன்-மனனவியின் அன்னியோன்னியத்தை அதிகரிப்பதற்காக “பலி பிரதிபதா” எனும் நிகழ்வு கொண்டாடப்படுகின்றது.   இருவரும் மாறிமாறித் திலகமிடுவதும், பரிசளிப்பதும் அன்றைய மரபுகள்.
 
உத்தரப்பிரதேசத்தில், இந்நாளில் “கோவர்த்தன பூசை” நிகழ்த்தப்பட்டு கண்ணன் வழிபடப்படுகின்றான். “அன்னகூடம்” என்ற பெயரில் பலவகைக் கறிகளுடன் சோறு சமைத்து மலைபோலக் குவிக்கப்பட்டு, கோவர்த்தன மலையைக் கண்ணன் தூக்கிய தொன்மம் நினைவு   கூறப்படுகின்றது.
 
ஒடியா, பீகார், அசாம் மற்றும் மேற்கு வங்கப் பகுதிகளில் மட்டும் தீபாவளி, காளி பூசையாகக் கொண்டாடப்படுகின்றது. தேய்பிறை  பதினான்காம் நாளை அவர்கள் “காளி சௌடஸ்” (காளி சதுர்த்தசி) என்று கொண்டாடுவதுடன், அமாவாசையன்று “சியாமா பூசை”  என்ற  பெயரில் காளிக்கு விழாவெடுக்கின்றார்கள்.