1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 29 பிப்ரவரி 2016 (16:52 IST)

ஜெயலலிதாவின் வெற்றிக்கு ஏதுவாக 4 தொகுதிகளில் தேர்தல் அதிகாரிகள் நியமனமா?

தேனி மாவட்டத்தில் போடி, ஆண்டிபட்டி ஆகிய தொகுதிகளில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட வாய்ப்பிருப்பதால் அதற்கேற்ப அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 

 
தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கம்பம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
 
ஆண்டிபட்டி தொகுதிக்கு சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் இளங்கோவன், பெரியகுளம் தொகுதிக்கு பெரியகுளம் கோட்டாட்சியர் ஆனந்தி, போடி தொகுதிக்கு கலால் பிரிவு உதவி ஆணையர் காளிமுத்து, கம்பம் தொகுதிக்கு உத்தமபாளையம் கோட்டாட்சியர் ராசையா ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் .
 
வெள்ள நிவாரணப்பணியில் முதல்வர் ஜெயலலிதா மீது சென்னைமக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால் ஜெயலலிதா போட்டியிட உளவுத்துறையினர் தொகுதிகளைத்தேடி வருகின்றனர். இதனால், சென்னை பதிவு எண் கொண்ட கார்கள் போடி முழுவதும் வலம் வருவதாக தெரிகிறது.
 
தேனி மாவட்டம் தனியாகப் பிரிந்து மூன்று சட்டமன்றத் தேர்தலை சந்தித்து நான்காவது தேர்தலை சந்திக்கவுள்ளது. போடி தொகுதியைப் பொறுத்தவரை இதுவரை தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட வட்ட வழங்கல் அலுவலரே நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
தற்போது மாவட்ட வழங்கல் அலுவலராக இருக்கும் பேபி நேர்மையான அதிகாரி என பெயர் பெற்றுள்ளதால், அவரை தேர்தல் நடத்தும் அலுவலராக நியமித்தால் ஒரு வேளை ஜெயலலிதா போட்டியிட்டால் ஏதேனும் பிரச்சனை எழுப்புவார் என கருதியுள்ளனர்.
 
இதனால், அவரை மாற்றிவிட்டு கலால் பிரிவு துணை ஆணையர் காளிமுத்துவை மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார். காளிமுத்து முக.அழகிரி மதுரை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது மேலூர் வட்டாட்சியராக இருந்தவர் ஆவார்.
 
இவரை மு.க.அழகிரி தாக்கியதாக வழக்கு இப்பொழுதும் நடைபெற்று வருகிறது. இவரைத்தான் தேடிப்பிடித்து போடி தொகுதிக்கு அதிகாரியாக நியமித்துள்ளனர்.
 
அதேபோல, ஆண்டிபட்டி தொகுதிக்கு பொதுவாக தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலரை நியமிப்பது வழக்கம்.
 
தற்போது அப்பதவிக்கு ஓய்வு பெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இவர் தேர்தல் நடத்தும் அலுவலராக பெரியகுளத்தைச் சேர்ந்த வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
தேர்தல் முடிந்து ஆறு மாதம் வரை பதவியில் இருக்கக் கூடிய நபரை தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்க வேண்டும் என விதி இருக்கும் நிலையில் ஆளுங்கட்சியின் நிர்ப்பந்தத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
மேலும், மாவட்ட அதிகாரியாக சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இருக்கக்கூடாது என்ற நிலையில் மாவட்ட வழங்கல் அதிகாரியாக இருக்கும் பெரியகுளத்தைச் சேர்ந்த வெங்கடேசன் தேர்தல் பணிக்கு மாவட்ட ஆட்சியரால் நியமிக்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
ஆண்டிபட்டியில் போட்டியிட்டபோது ஜெயலிலதாவின் வேட்பு மனுவை அப்போதைய பெண் அதிகாரி தள்ளுபடி செய்தார். அதை மனதில் வைத்து தனக்கு வேண்டிய அதிகாரியை அதிமுகவினரின் ஏற்பாட்டில் மாவட்ட ஆட்சியர்கள் நியமித்து வருவதாக கூறப்படுகிறது.