1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By Sasikala

மெட்ரோ என்னும் காஸ்ட்லி பாலகன்

மெட்ரோ என்னும் காஸ்ட்லி பாலகன்

ஓர் ஆண்டை நிறைவு செய்து இருக்கும் மெட்ரோ என்னும் பாலகனுக்கு வாழ்த்துக்கள். மத்திய மாநில தனியார் பங்களிப்புடன் தொடங்கப்பட்ட ஓர் அருமையான திட்டம் மெட்ரோ.


 


ஏசி வசதிகள், பணம்செலுத்தி டிக்கெட் பெறும் தானியங்கி இயந்திரங்கள், கண்காணிப்பு கேமராக்கள் போன்ற அதி நவீன வசதிகள் என நம்மை மட்டும் அல்ல இந்த சென்னையையும் புதிய பாதையில் பயணிக்க செய்தது இந்த மெட்ரோ. சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாகவும் மாறிப்போனது இந்த மெட்ரோ. சென்னை பெருவெள்ளத்தில் மூழ்கியபோது வாசுதேவன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை சுமந்து சென்றதைப் போல  நம்மை சுமந்து சென்ற மெட்ரோ என்னும் பாலகன் நம்மை மெய் சிலிர்க்க வைத்தான்.

மிகப்பெரும் பொருட்செலவில் ஓர் திட்டம் செயல்படுத்தப்படும்போது அதன் பயன் சாமானியனை சென்றடைவதே முதல் நோக்கமாக இருக்கவேண்டும். லாபநஷ்ட கணக்குகளெல்லாம் இதன் பிறகுதான். ஏனெனில் ஜனநாயகத்தின் எசமானார்களே இந்த சாமானியர்கள்தான். இவர்களே ஓர் அரசை தீர்மானிக்கிறார்கள். ஆனால் இந்த சாமானியர்கள் எத்தனைமுறை மெட்ரோ என்னும் பாலகனை தொடர்ச்சியாக அரவணைத்து இருக்கிறார்கள் என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறியே. சாமானியர்களை பொறுத்தவரை மெட்ரோ ஒரு காஸ்லி பாலகன். மெட்ரோ என்னும் பாலகனின் முத்தத்திற்கு சாமானியன் தரும் விலை அதிகம்.

190 கிலோ மீட்டர் தடத்தொலைவு கொண்ட டெல்லி மெட்ரோ அதிகப்பட்சம் ரூபாய் 30 மட்டுமே வசூலிக்கிறது. 25 கிலோ மீட்டர் தடத்தொலைவு கொண்ட பெங்களூர் மெட்ரோ அதிகப்பட்சம் ரூபாய் 25 மட்டுமே வசூலிக்கிறது. ஆனால் வெறும் 10 கிலோ மீட்டர் தடத் தொலைவு கொண்ட சென்னை மெட்ரோ அதிகப்பட்சம் ரூபாய் 40 வசூலிக்கிறது. இந்த அதிகப்பட்ச விலைக்கானக் காரணங்கள் ஏதும் ஏற்புடையதாக இல்லை.

இதுப்போன்ற பெரும்திட்டங்கள் செயல்வடிவம் கொடுக்கும் முன்பே வல்லுநர்கள் தங்களின் கருத்துக்களை (சாமானியனின்) அரசிடம் முன்வைக்க மாட்டார்களா? அரசும் சாமானியனின் எண்ண ஓட்டங்களை பரிசீலினை செய்யாதா? மத்திய, மாநில அரசுகள் தங்களது முதலீடுகளை தனியார்களை விட அதிகம் செய்வதன் மூலம் கட்டண நிர்ணய உரிமையை பெற்று இருக்கலாம் அல்லவா?  சமீப காலமாக இந்திய ரயில்வேதுறையில் அதிக தனியார் முதலீடுகள் பெறப்படுகின்றன ஆனால் கட்டணம் நிர்ணயிப்பதில் அரசு தன்வசம்மட்டுமே வைத்தியிருக்கிறது. ஆகவேதான் அது சாமானியனின் செல்லப் பிள்ளையாக இருக்கிறது.

சென்னை மெட்ரோவை வார நாட்களில் சுமார் 10000-12000 பேர் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் சென்னையின் பெருவெள்ளத்தின்போது நான்கு மணிநேரங்களில் சுமார் 10000 பேர் பயன்படுத்தியதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் பொருள் நாம் சென்னை மெட்ரோவை முழுமையாக பயன்படுத்தவில்லை என்பது தான். இதை பற்றி விளக்கம் பெற நாம் பெங்களூர் மற்றும் அஹமதாபாத் என இந்தியாவின் மிகப்பெரும் மேலாண்மை கல்வி நிலையங்களில் இருந்து மேலாண்மை நிபுணர்களை  அழைக்க வேண்டியது இல்லை.

பெரும் முதலாளிகளின் கையில் இருந்த போக்குவரத்துத் துறையை ஓர் அரசாணையின் மூலம் நாட்டுடைமை ஆக்கினார் முன்னாள் முதலமைச்சர். அண்ணாமலை பல்கலைக்கழத்தை ஓர் அரசாணையின் மூலம் நாட்டுடைமை ஆக்கினார் இந்நாள் முதலமைச்சர். ஏன் ஓர் அரசாணையின் மூலம் மெட்ரோவை அரசுடைமை ஆகக்கூடாது முதலமைச்சர்? முதலமைச்சரின் வீர தீர செயல்களுக்கு முன்பு எவைஎல்லாம் ஒன்றுமே இல்லை. முதலமைச்சர் நினைத்தால் மெட்ரோ நாளையே அரசின் வசம், இல்லை சாமானியனின் வசம் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

 










இரா .காஜா பந்தா நவாஸ் , பேராசிரியர் 
இயந்திரவியல் துறை ,
சத்தியபாமா பல்கலைக்கழகம் ,
சென்னை